வியாழன், 9 ஜூலை, 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 39:
ஆயுதம் ஏந்தும் இளைஞர் அமைப்புகள்!உண்மையில் விடுதலைப் புலிகளின் இயக்கம் 1972-லேயே உருவாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் தமிழ்ப் புதிய புலிகளாக இருந்த பின்னால் பெயர் மாற்றம் அடைந்ததே இது. ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் ஆயுத எதிர்த்தாக்குதல் இயக்கமே விடுதலைப் புலிகள் இயக்கம் என்றும் ஆயுதமேந்திப் போராடுவதன் மூலமே தனி ஈழம் கட்டமைக்க முடியும் என்பதே தங்கள் நோக்கம் என்கிறார்கள் இவர்கள். இவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இவர் 1954-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி வல்வெட்டித்துறையில் பிறந்தார். தனது 16-ஆவது வயதிலேயே தமிழ் இன ஒடுக்கு முறையை எதிர்க்கும் மனோபாவத்தைக் கொண்டிருந்தார். சிறு வயதாக இருந்ததால் மற்றச் சக புரட்சியாளர்கள் இவரைத் "தம்பி' என்றனர். இவர் ராணுவ வெளித்தாக்குதல்களை எதிர்த்துத் தீவிர எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டவர். இவர் அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் கட்டமைக்கப்பட்ட ஓர் இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கினார். 1983-ஆம் ஆண்டு மே மாதம் ஸ்ரீலங்கா அரசு நடத்திய உள்ளூராட்சித் தேர்தல் பகிஷ்கரிப்பு நிகழ்ச்சியில் இவ்வியக்கம் முதன்மைப் பங்கெடுத்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் மூவர் மீது ராணுவ நடவடிக்கை தொடுத்தது. அதேபோன்று 1983 ஜூன் 5-ஆம் தேதி காங்கேயன் துறைத் தாக்குதலும், சாவகச் சேரிப் போலீஸ் நிலையத் தாக்குதலும், நெல்லியடியில் அரசுப்படையினருக்கு எதிராக 1982-ஆம் ஆண்டு நடத்திய தாக்குதலும் ஆவ்ரோ விமானத் தகர்ப்பும் இவ்வமைப்பால் நடத்தப்பட்டவை ஆகும். தமிழ் மாணவர் பேரவை உருவானபின் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இருந்து அரசியல் தலைமை உருவாக ஆரம்பித்தது. தரப்படுத்துதல் மற்றும் ஒடுக்குமுறைச் சட்டங்கள் பல வந்தபின், முதல் தடவையாக தமிழ் இளைஞர்கள் இனவாதத்திற்கு எதிராக ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். இந்தச் சமயம் இலங்கையின் பல பகுதிகளில் ஆயுதப் போராட்டங்கள் உருவாயின. 1971-ஆம் ஆண்டு உரோகண விஜயவீரா தலைமையின் கீழ் ஏற்பட்ட அரசுக்கு எதிரான எழுச்சியில் பல்வேறு இளைஞர்களைக் கும்பல் கும்பலாகக் கைது செய்து அரசாங்கம் காவலில் வைக்கிறது. இந்தக் கைது படலத்தில் தமிழ் இளைஞர்களும் இருந்தனர். இந்த இளைஞர்கள் விடுதலையானபின் அரசுக்கு எதிராகத் தீவிர எதிர்த்தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினர். அரசு பதில் நடவடிக்கையாகக் கொடூரமான ஒடுக்குமுறையை மேற்கொள்ளுகிறது. இதன் விளைவாக இளைஞர்கள் மத்தியில் மூன்று விதமான போக்கு வெளிப்படுகிறது. 1. தலைமறைவு ஆதல். 2. ஒதுங்குதல். 3. அரசால் கைது செய்யப்படுதல். தலைமறைவான இளைஞர்களில் அரசியல் தெளிவு பெற்ற ஒரு சிலர் லண்டனில் கூடி ஈராஸ் (EROS) என்ற அமைப்பை உருவாக்குகின்றனர். இதனுடன் மாணவர்களுக்கான அமைப்பான கஸ் (GUES)சும் உருவாகிறது. (General Union of Eelam Students) ஆரம்பத்தில் இவ்விரண்டு அமைப்பும் ஒன்றாக இணைந்தே செயல்படுகின்றன. ஈராஸ் படிப்படியாக ஆயுதப் படைக் குழுக்கள் கட்டமைப்பதற்கான வேலைகளைச் செய்கிறது. அதே நேரத்தில் பல பிரிவு வெகுஜன அமைப்புகளையும் உருவாக்கிச் செயல்பட வேண்டும் என்ற கருத்தும் உருவாகி, அதற்கான செயல்களில் சில தலைவர்களும் ஈடுபடுகிறார்கள். இதன் உச்சக்கட்டமாக 1980-இல் ஒரு பிளவு ஏற்படுகிறது. இப்பிளவில் இருந்து உருவானதே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகும்.EROS-இன் தலைவர் பாலகுமார் ஆவார். ஈராசிலிருந்து வெளியேறி வந்த தலைவர்கள் உருவாக்கிய அமைப்பே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) ஆகும். 1981 அக்டோபர் 10-ஆம் நாள் இவர்கள் ஒரு பிரகடனத்தை வெளியிடுகின்றனர். இந்த அமைப்பு மூன்று மிக முக்கியமான நோக்கங்களைக் கொண்டதாகும். 1. ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் தேசத்தை விடுவித்து தனி ஈழம் காண்பது. 2. ஒட்டுமொத்தமான சமூக, பொருளாதார, கலாசாரச் சுதந்திரத்தை உள்ளடக்கிய அரசியல் சுதந்திரத்தைப் பெற்று ஒரு சோஷலிச சமுதாயத்தைக் கட்டமைப்பது. 3. சர்வதேச முற்போக்குப் போராட்டத்தில் இருந்து பிரிக்கப்பட முடியாத ஈழவிடுதலைப் போராட்டத்தில், ஏகாதிபத்தியத்திற்கும், மிதவாத இனவாதத்திற்கும் எதிராகப் போராடுவது. இம்மூன்று நோக்கங்களை உள்ளடக்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தைக் கட்டமைக்கப் பலதரப்பட்ட பிரிவு மக்கள் மத்தியில் இறங்கிப் பல வகையான மக்கள் இயக்கங்களை உருவாக்கித் தனி ஈழத்திற்காகப் போராட வேண்டும் என்கிறார்கள் இவர்கள். கஸ் ((GUES)அமைப்பு, பின்னால் இவர்களுடன் இணைந்து விட்டது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணை அமைப்புகளாக, மாணவர் அமைப்பாக கஸ் (GUES) கிராமப்புறத் தொழிலாளர் விவசாயிகள் முன்னணி (Rural Workers & Peasants Front), ஈழ இளைஞர்கள் முன்னணி (Eelam Youth Front), தோட்டத் தொழிலாளர் முன்னணி (Plantation Proletariat Front), ஈழ பெண்கள் விடுதலை முன்னணி (Eelam Women’s Liberation Front), மீனவத் தொழிலாளர் முன்னணி (Fishery Workers Front) ஆகியவைகளும் அடங்கும். 1983-ஆம் ஆண்டு இவ்வமைப்பின் ஆயுதப்படைப் பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டு மக்கள் விடுதலைப் படை உருவானது. இது பல்வேறு வெகுஜனப் போராட்டங்களையும், இனவாத அரசுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவராகப் பத்மனாபா இருந்தார். இது 1980-இல் LTTE - தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்து உருவான ஒரு அமைப்புதான் தமிழ் ஈழமக்கள் விடுதலை இயக்கம்- PLOT.. இது முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன் தலைமையில் செயல்பட்டது. இவரது தலைமையில் உள்ள இயக்கம் பல ஆயுத எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொண்டுள்ளது. இந்த ஐந்து (EROS, EPRLF, TELO, LTTE, PLOT) அமைப்புகளையும் தவிர மற்றும் சில சிறு ஆயுதக் குழுக்கள் இலங்கை மண்ணில் இருக்கத்தான் செய்தன. அதைத் தவிர ஒரு சில மனித உரிமை மற்றும் பல மக்கள் இயக்கங்களும் இலங்கை மண்ணில் இனவாத ஒடுக்குமுறையை எதிர்த்து இயங்கி வந்தன. ஆனால் இந்த ஐந்து இயக்கங்கள் மட்டும்தான் ஆயுதப் படைப்பிரிவைக் கட்டமைத்து அரசு பயங்கரவாதத்தை வீரத்துடன் எதிர்த்துத் தியாகம் பல புரிந்து வந்தன. ஒரு காலகட்டத்தில் EROS, EPRLF, LTTE, TELO ஆகிய நான்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுவதாக முடிவெடுத்தன. அதன்படி வேறு சில மக்கள் இயக்கங்களுடன் (23 மக்கள் இயக்கங்கள்) இணைந்து இனவாத எதிர்ப்பு மக்கள் அணிகளைக் கட்டமைத்தும் அதே சமயம் ஆயுதப்படைப் பிரிவுகளின் மூலம் ராணுவ பதிலடியும் தந்தனர். பிரபலமாக உள்ள அமைப்புகளைத் தவிர (TELO, EPRLF, EROS, LTTE, PLOT) வேறு சில குழுக்களும் சிறிய அளவில் செயல்பட்டு வந்தன என்று சொன்னோம். இவற்றில் இரண்டு அமைப்புகள் நம் கவனத்திற்குரியது. தமிழ் ஈழ விடுதலை ராணுவம் (TELA) என்கிற அமைப்பு TELO விலிருந்து பிரிந்ததாகும். இவ்வமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் ""ஓபராய்'' தேவன் என்பவர். இவர் இலங்கையில் தியாகியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 1983 ஜூலை கலவரத்திற்குமுன் யாழ் பல்கலைக்கழக மாணவியரைக் கடத்திச் சென்று கற்பழித்த ராணுவ வீரர்களைக் கொன்ற தாக்குதல் நடவடிக்கை இவர்கள் எடுத்ததே ஆகும். இவைத் தவிர (TEA, TELE) என்ற ராணுவ அமைப்புகளும் உள்ளன. தமிழ் ஈழ தேசிய ராணுவம் (TENA) என்கிற அமைப்பு தமிழ் விடுதலைக் கூட்டணியின் (TULF)ன் தலைவரான அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதனால் உருவாக்கப்பட்டதாகும். மற்ற விடுதலைக் குழுக்கள் இவ்வமைப்பைத் தமிழ் விடுதலைக் கூட்டணியின் தலைவருடைய துணை அமைப்பு என்றே குறிப்பிட்டனர். தமிழ் ஈழ விடுதலை முன்னணி (Tamil Eelam Liberation Front) என்பது ஈழவேந்தன் தலைமையில் உருவான அமைப்பாகும். அதேபோன்று எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மகனான சந்திரஹாசனால் வெளியேறிய இலங்கைத் தமிழரின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு PROTEG. இலங்கையில் இருக்கும் மதத் தலைவர்கள் (புத்த, கிறிஸ்துவ முஸ்லிம்) தமிழ்நாட்டில் உள்ள விடுதலைக் குழுக்களுடன் பேசுவதற்கு வரும்போது இவ்விரு அமைப்புகளுடனேயே பேச விரும்பியதற்குக் காரணம், இவர்களின் அமெரிக்க சார்பு நிலைப்பாடு என்கிற விமர்சனம் உண்டு. இவைகளைத் தவிர அகதிகளுக்கு உதவும், வெளியேறிய இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் OFERR என்ற ஓர் அமைப்பும் உள்ளது. மேலும் ஆயுதப் போராட்ட விடுதலைக் குழுக்களைத் தவிர பரந்த அளவில் தமிழ் ஈழத்துக்காக மக்களைத் திரட்டிப் போராடும் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற ஒரு வெகுஜன அமைப்பும் குறிப்பிடத்தக்கது. இது 1983 ஜூலை கலவரத்திற்குப் பின் பல்வேறு மக்கள் போராட்டங்களை இலங்கையில் கட்டமைத்துள்ளது. நம்மால் அறியப்பட முடியாமல் இலங்கையில் இயங்கிய பல சிறு சிறு அமைப்புகளும் கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிந்த அமைப்புகளும் விரிவான தொடர்பின்மையின் காரணமாக அவ்வமைப்புகளைப் பற்றிய தெளிவான விஷயங்களை அறியமுடியவில்லை. நாளை: தீக்கிரையாகிறது யாழ் நூலகம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக