ஞாயிறு, 5 ஜூலை, 2009

மதுரை, ஜூலை 5-

மதுரை மாவட்ட மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ்ஈழ ஆதரவாளர்கள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்ஈழம் மலரும் என்ற தலைப்பில் ஆய்வு அரங்கம் நடைபெற்றது. இதில் பழ.நெடுமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

இலங்கையில் போரை நிறுத்த கோரி தமிழ்நாட்டில் கடந்த 6 மாத காலமாக அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தியது. போரை நிறுத்த கோரி தமிழகம் உள்பட பல்வேறு நாடுகளிலும் 18 பேர் தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளனர். இதற்கு பின்னரும் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 20 நாடுகள் கூட்டணியாக சேர்ந்து போரை நடத்தி சிங்கள அரசு வெற்றி பெற்று இருப்பது வெற்றி அல்ல. இது தற்காலிக வெற்றிதான்.

இப்போது இலங்கையில் சீனா ஆயுத கிடங்கும் அமைத்து வருவதோடு, பெட்ரோல், எண்ணை கிணறு அமைக்கும் ஒப்பந்தம் செய்து உள்ளது. இதை பிரதமர் மன்மோகன்சிங்காலையோ, சோனியா காந்தியாலையோ தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் இனி வரும் காலங்களில் இந்தியாவுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் பத்திரமாக இருக்கிறார் என்பதை உறுதியாகவும், திட்டவட்டமாகவும், ஆணித்தரமாகவும் கூறுகிறேன். இதற்கு முன்பு பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் 4 முறை வெற்றி பெற்றது. அதுபோல மீண்டும் வெற்றி பெற்று பிரபாகரன் தலைமையில் தமிழ்ஈழம் அமையும். இது உறுதி.

விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல. தீவிரவாத இயக்கம் என்றால் மக்களை குண்டுவீசி கொன்று இருக்க வேண்டும். ஆனால் விடுதலைப்புலி இயக்கம் அப்படி செய்யவில்லை. சிங்கள மக்கள் மீது குண்டு வீசினார்களா? இல்லையே விடுதலைக்காக தான் போராடி இருக்கிறார்கள்.

ஆனால் விதிமுறைகளுக்கு மாறாக ராஜபக்சே அரசுதான் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி கொன்றது. இதில் யார் தீவிரவாதி. இலங்கை அரசா? விடுதலைப்புலிகளா? எனவே இலங்கை அரசு மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக