திருவொற்றியூர், ஜூலை 8: நிவாரணப் பொருள்களுடன் சென்ற "கேப் கொலரடோ' கப்பலை இலங்கை ராணுவம் புதன்கிழமை நடுக்கடலில் நிறுத்தியது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஏற்பட்ட நெருக்குதலை அடுத்து கப்பலை அனுமதிக்க ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சுமார் 884 டன் நிவாரண பொருள்களை லண்டனைச் சேர்ந்த மெர்சி மிஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அனுப்பியது. பொருள்களை ஏற்றிவந்த "வணங்காமண்' என பெயரிடப்பட்ட "கேப்டன் அலி' என்ற கப்பலை இலங்கை ராணுவம் அந்நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்து ஜூன் 7-ல் கப்பலை நடுக்கடலிலேயே திருப்பி அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இக்கப்பல் ஜூன் 14-ல் இந்தியப் பகுதிக்கு வந்தடைந்தது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இக்கப்பலை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டது. வேறு கப்பலில் நிவாரண பொருள்கள்... இதனை அடுத்து நிவாரண பொருள்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்க இலங்கை ஒப்புக் கொண்டது. இதனை அடுத்து "வணங்காமண்' கப்பல் கடந்த வியாழக்கிழமை சென்னை துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டது. அதில் இருந்த நிவாரண பொருள்கள் கொழும்பு செல்லும் "கேப் கொலரடோ' கப்பலில் ஏற்றப்பட்டன. திங்கள்கிழமை இரவு புறப்பட்ட இக்கப்பல் புதன்கிழமை இலங்கை சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்டது. நடுக்கடலில் நிறுத்திய ராணுவம்: இந்நிலையில் 'கேப் கொலரடோ' கப்பலை இலங்கை கடல் எல்லையில் அந்நாட்டு ராணுவம் தடுத்து நிறுத்தியது. ஆனால் பல்வேறு தரப்பினரின் நெருக்குதலை அடுத்து கப்பல் நுழைய அனுமதி கிடைத்தது. இது குறித்து கப்பல் ஏஜென்சியான 'சீ கன்சார்டியம்' நிறுவன மேலாளர் சுப்பிரமணியம் கூறியது, கேப் கொலரடோ கப்பல் 891 கண்டெய்னர்களுடன் கொழும்பு புறப்பட்டது. இதில் 27 கண்டெய்னர்கள் மட்டுமே நிவாரண பொருள்கள் ஏற்றப்பட்டவை ஆகும். இந்நிலையில் புதன்கிழமை காலை கப்பலை அனுமதிக்க இலங்கை ராணுவம் மறுத்துவிட்டது என தகவல் கிடைத்தது. காரணம் குறித்து கேட்டபோது, ஏற்கனவே திருப்பி அனுப்பிய பொருள்களை மீண்டும் இலங்கைக்குள் அனுமதிக்க ராணுவம் ஒப்புதல் தரவில்லை என கூறப்பட்டது. கப்பலில் உள்ள 891 கண்டெய்னர்களில் 27 கண்டெய்னர்கள் பிரச்னைக்கு உரியவை. அப்படியெனில் மீதம் உள்ள கண்டெய்னர்களை நிறுத்துவது சர்வதேச துறைமுக விதிமுறைகளுக்கு எதிரானது. மேலும் இது அவற்றில் பெரும்பாலான கண்டெய்னர்கள் வியாழக்கிழமை கொழும்பில் இருந்து வேறு பெரிய கப்பல்கள் மூலம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவேண்டியவை. எனவே கப்பல் நுழைவதில் தாமதம் ஏற்பட்டால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இதற்கு பொறுப்பேற்பது யார் என நாங்கள் இலங்கை அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டதை அடுத்து புதன்கிழை மாலை 6 மணி அளவில் அனுமதி கிடைத்தது என்றார் சுப்பிரமணியம். அலட்சியப்படுத்தும் இலங்கை: நிவாரண பொருள்களை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்த இலங்கை தற்போது அதே மனநிலையில்தான் உள்ளதாகத் தெரிகிறது. எனவே கொழும்பு துறைமுகத்தில் கப்பல் நுழைந்தாலும் நிவாரண பொருள்கள் இலங்கை ஏற்குமா? அப்படி ஏற்றுக் கொண்டாலும் அவற்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க செஞ்சிலுவைச் சங்கத்தை சுதந்திரமாக அனுமதிக்குமா? என்பது சந்தேகமே என பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்
அது எப்படி? ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழி உடனே செயல்படுத்தப்படாத பொழுது சிங்கள அரசு எப்படி இந்தக் கப்பல் நுழைய இடம் தரும்? பேசிக் கொண்ட படி காட்டுப்பகுதிகளில் அவற்றை அழிக்கும் எரி குண்டுகளை எப்பொழுது இந்தியா தரும்? காட்டுப் பகுதியை அழித்த போர்வையில் அங்குள்ள தமிழர்களையும் புலிகளையும் எப்பொழுது அழித்தொழிக்கும்? அந்த உறுதி கிடைத்தவுடன்தான் இந்த நாடகம் அரங்கேறும்.
-- இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2009 4:00:00 AM
7/9/2009 4:00:00 AM