சென்னை, ஜூலை 9: "அரசியல் கட்சியாக வியாபித்த பிறகு, மீண்டும் ஜாதிச் சங்கமாக ஏன் கூனிக் குறுக வேண்டும்'' என்று பாமகவுக்கு முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக, பேரவையில் பாமக தலைவர் ஜி. கே. மணி புதன்கிழமை பேசியதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் டி.சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் மறுப்புத் தெரிவித்துப் பேசினர். இந்த நிலையில், அவர்களது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பேரவையில் வியாழக்கிழமை வற்புறுத்தினார் ஜி.கே.மணி. இதற்கு, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி அளித்த விளக்கம்: ""பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிலும் குறிப்பாக வன்னியர்களுக்கு திமுக ஆட்சி துரோகம் செய்கிறது என்பது போல ஒரு கற்பனை குற்றச்சாட்டை பாமகவினர் புதன்கிழமை செய்திருந்தார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற முக்கிய பொறுப்புகளில் வன்னியர்கள் அதிகமாக இல்லை என்ற தகவலை பாமக தலைவர் ஜி.கே.மணி சுட்டிக்காட்டியிருக்கிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என்பது மத்திய தேர்வாணைய கழகத்தால் தேர்வு நடத்தி அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும். அதற்கும் தமிழக அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. உயர் நீதிமன்றத்தில் யாரும் நீதிபதிகளாக வன்னியர்கள் இல்லை என்றால், அது தமிழக அரசின் குற்றமா? அல்ல. யார் யார் வன்னியர்கள்? தற்போது, மாவட்ட ஆட்சியர்கள் 31 பேரில், இரண்டு இடங்களில் தான் வன்னியர்கள் இருப்பதாக ஜி.கே.மணி கூறுகிறார். அதிலே, ஜெயராமன் என்பவருக்கு இரண்டாவது முறையாக மாவட்ட ஆட்சித் தலைவராக வாய்ப்பு தரப்பட்டுள்ளது. காவல் துறை எஸ்.பி.யாக மூன்று மாவட்டங்களில் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் பொறுப்பில் இருக்கிறார்கள். பாமக என்பது இன்றைக்கு ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள கட்சி. முதலில் அது ஜாதி சங்கமாகத் தோன்றி இன்று ஒரு அரசியல் கட்சியாக வளர்ந்து உருவெடுத்து இருக்கிறது. அப்போது, அரசியல் கட்சிகள் என்றால் அவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஓட்டுப் பொறுக்கிகள் என்பதுதான் இங்கேயுள்ள (பேரவை) உறுப்பினர்கள், எனக்கும் சேர்த்து கொடுத்த பட்டம். அன்றைக்கு அப்படி ஆரம்பித்தவர்கள், ஜாதி சங்கமாக ஆரம்பித்தவர்கள் அரசியல் கட்சியாக வளர்ந்து வியாபித்திருக்கிறார்கள். எனக்குள்ள வருத்தம், அரசியல் கட்சியாக வியாபித்த பிறகு மீண்டும் ஜாதிச் சங்கமாக ஏன் கூனிக் குறுக வேண்டும்? வன்னியர்கள் எத்தனை பேர்? 1985-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஏற்கெனவே உள்ள வன்னியர் உள்ளிட்ட 109 சாதிவாரியான மக்கள் தொகை அறிவிக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள அந்த 109 ஜாதிகளுடைய மக்கள் தொகை 1 கோடியே 23 லட்சத்து 34 ஆயிரத்து 987 ஆகும். அதில், வன்னியர் 65 லட்சத்து 4 ஆயிரத்து 987 பேர். அவசரம், ஆத்திரம்... இன்றைக்கு சமூக நீதி பற்றி பேசுகிறோம். ஆனால், அந்த சமூக நீதியின் காவலர் வி.பி.சிங்குக்கு தமிழகத்தில் பாமக சார்பில் தரப்பட்ட மரியாதை என்ன தெரியுமா? "வன்னியப் பெண்கள் யாரும் அவரது முகத்தில் விழிக்கக் கூடாது' என்பதாகும். சமூக நீதிக் காவலருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுத்த கௌரவம் இது. ஆகவே, அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு சில செயல்களில் ஈடுபடுகின்ற காரணத்தால்தான் இன்றைய விளைவுகளை அனுபவிக்க நேரிட்டிருக்கிறது'' என்றார் முதல்வர் கருணாநிதி.
By Ilakkuvanar Thiruvalluvan
7/10/2009 2:45:00 AM
By Chandran
7/10/2009 1:09:00 AM
By vallivan
7/10/2009 12:59:00 AM