திங்கள், 6 ஜூலை, 2009

ஈழப் போராட்டம் மீண்டும் தொடங்கும்:
பழ. நெடுமாறன்
தினமணி







திருநெல்வேலி, ஜூலை 5: ஈழப் போராட்டம் மீண்டும் தொடங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: தனி ஈழத்துக்காக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் ஆறரை கோடி தமிழர்களும் ஒன்றுபட்டோம், போராட்டம் நடத்தினோம், ஆர்ப்பாட்டம் நடத்தினோம், ஆனால், மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை. சீக்கிய மதத் தலைவர் ஐரோப்பாவில் கொல்லப்பட்டதற்காக பஞ்சாப் மாநிலத்தில் அந்த மாநில மக்கள் நடத்திய போராட்டத்துக்கு, மத்திய அரசு அடிபணிகிறது. மும்பையில் பிகார் இளைஞர் தாக்கப்பட்டதற்கு, அந்த மாநில மக்கள் நடத்திய போராட்டத்துக்கு மத்திய அரசு அடிபணிகிறது. ஆனால், ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். 3 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு உள்ளனர். இதைக் கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கேட்டும் தமிழர்கள் நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் மத்திய அரசு செவிமடுக்கவில்லை. மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது. இதனால் தமிழக மக்களின் போராட்டம் வீணாகிக் கொண்டிருக்கிறது. ஈழப் போராட்டத்தில், இப்போது பின்னடைவு ஏற்பட்டாலும், மீண்டும் போராட்டம் தொடங்கும். அதற்குத் தலைமை தாங்க பிரபாகரன் விரைவில் வருவார் என்றார் நெடுமாறன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக