முதல்வர் மு. கருணாநிதி கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் கலைத் துறை மீது அவருக்கு அளவு கடந்த பாசம் உண்டு என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை நிரூபிக்க மக்கள் பணத்தில் இந்த அரசு அடிக்கடி கை வைப்பது எந்த ஊர் நியாயம் என்பதுதான் தெரியவில்லை. சமீபத்தில், தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் திரைப்படத் தொடக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் கேளிக்கை வரிவிலக்கு தொடரும் என்பதை சூசகமாகச் சொல்லியிருக்கிறார். முன்னதாக, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் "1939-ம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரிச் சட்டம்' வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழுமையான விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பான முழுமையான அரசாணை 2006, நவம்பர் 20-ல் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு முன் தமிழக அரசுக்கு கேளிக்கை வரி வருவாயாக 2003 - 04-ம் நிதியாண்டில் ரூ. 75.07 கோடி கிடைத்தது. இதில் திரைப்படங்கள் மூலமான வருவாய் மட்டும் ரூ. 67.71 கோடி. ஆனால், அறிவிப்புக்குப் பின் இந்த வருவாய் 2006 - 07-ல் ரூ. 24.9 கோடியாகவும் 2007 - 08-ல் ரூ. 16.35 கோடியாகவும் குறைந்தது. ஆக, இந்த அறிவிப்பினால் கேளிக்கை வரி வருவாயில் சராசரியாக ஆண்டுக்கு ரூ. 50 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. விழா மேடையிலேயே, கேளிக்கை வரி வருவாயின் ஒரு பகுதி உள்ளாட்சி நிர்வாகத்துக்குச் செல்வதைக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த வருவாய் இழப்பினால் கிராமப்புற வளர்ச்சிப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையும் தமிழக அரசு ரூ. 50 கோடி சுமையைத் தாங்கிக்கொண்டிருப்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ""எதை எதையோ தாங்கிக்கொண்ட இந்த இதயம், இந்த ரூ. 50 கோடியையா தாங்கிக்கொள்ளாமல் போய்விடப் போகிறது'' என்று பேசி முடித்திருக்கிறார். உண்மையிலேயே இந்த வருவாய் இழப்பைத் தாங்கிக்கொள்வது அவருடைய இதயமாக மட்டும் இருந்தால், இது விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம்தான். ஆனால், உண்மை அப்படியில்லையே? முதலில், தமிழ் வளர்ச்சி என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பே அபத்தமானது. தாய்மொழிப் பற்று ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்க வேண்டிய இயல்பான குணம். தமிழ்த் திரைத்துறையினரோ அதற்கே விலை பேசுகின்றனர். 2008-ல் 84 தமிழ்ப் படங்கள் வெளியாயின. இவற்றில் 7 படங்களே வெற்றி பெற்றதாகவும் ரூ. 420 கோடி முதலீடு செய்ததில் ரூ. 320 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திரைத்துறையினர் கூறுகின்றனர். இவர்கள் வெளியிடும் சகல குப்பைகளுக்கும் மக்களாகிய நாம் வரிப்பணத்தில் இருந்து நட்டத்தை ஈடுகட்ட வேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது. ""சின்னப் படம் என்றால், ரூ. 5 கோடி பட்ஜெட்; 75 பிரின்ட்; ரூ. 20 கோடி டார்கெட்; பெரிய படம் என்றால், ரூ. 25 கோடி பட்ஜெட்; 600 பிரின்ட்; ரூ. 100 கோடி டார்கெட்.'' அதாவது, ஒன்றை வைத்து நான்கைச் சுருட்டும் வித்தை. இதை எந்தப் பெயரிட்டு அழைப்பது? கடுமையான கட்டுப்பாடுகளும் பொருளாதாரத் தட்டுப்பாடும் உள்ள ஈரானிலிருந்தும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்தும் அற்புதமான திரைப்படங்கள் வருகின்றன; அந்த மக்களின் உண்மையான வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இங்கும் வங்கம், மலையாளத்தைத் தாண்டி ஹிந்தியில்கூட அவ்வப்போது நல்ல முயற்சிகள் தென்படுகின்றன. ஆனால், தமிழ்த் திரைப்படங்களோ நடிகைகளின் சதையில் புதைந்துகொண்டு வெளியே வர மறுக்கின்றன. தம்முடைய சீரழிவை சமூகத்தின் மீதும் அப்பிவிடுகின்றன. எப்போதாவது தண்டனைக்கும் ஆளாகின்றன. திரைப்படம் என்பது ஒரு தொழில் என்கிற அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று விரும்புபவர்கள், ஏனைய தொழில்களைப்போல லாப நட்டத்தைத் தாங்களே தாங்கிக் கொள்வதுதானே முறை? சமுதாய விழிப்புணர்ச்சியோ, சமூகப் பிரக்ஞையுடன் கூடிய பொதுநலச் சிந்தனையோ இந்தத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இருக்குமேயானால், அதற்கு வரி விலக்கு அளிப்பது நியாயம். தமிழில் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு, பாதிக்கு மேல் ஆங்கில வசனங்களும், காட்சிக்குக் காட்சி தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான விரசமும் மட்டுமே தமிழ்த் திரைப்படங்களாக இருக்கும்போது வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்பட வேண்டிய வரிப்பணம் வீணாக வேண்டிய அவசியம்தான் என்ன? முதல்வர் தன் கலைக் குடும்பப் பாசத்தினால் திரையுலகத்தின் நஷ்டத்தை எல்லாம் மக்கள் தலையில் கட்டக் கூடாது. கிராமப்புற வளர்ச்சிக்கும், நகர்மன்றங்களின் செயல்பாட்டுக்கும் பயன்படும் கேளிக்கை வரியிலிருந்து திரைப்படங்களுக்குத் தரப்படும் விலக்கு உடனடியாக அகற்றப்பட வேண்டிய ஒன்று. தமிழ்ப் பெயர் வைப்பதால் கேளிக்கை வரிச் சலுகை என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.
By Ilakkuvanar Thiruvalluvan
7/6/2009 1:50:00 AM
By Ilakkuvanar Thiruvalluvan
7/6/2009 1:49:00 AM
By somasundaram
7/6/2009 12:11:00 AM