செவ்வாய், 9 ஜூன், 2009

சிறந்த நூல்களே சிந்தனையைத் தூண்டும்:
இறையன்பு பேச்சு
தினமணி


சென்னை, ஜூன் 8: சிறந்த நூல்களே நம்மை அதிகம் சிந்திக்கத் தூண்டும் என்று சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தின் செயலர் வெ.இறையன்பு தெரிவித்தார். எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுதிய "கங்கையில் ஒரு சங்கமம்' நூல் வெளியீட்டு விழா மயிலாப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நூலை வெளியிட்டு இறையன்பு பேசியதாவது: சிறந்த இலக்கியப் படைப்புகள் நமக்குள் எண்ண அலைகளை ஏற்படுத்தும். மிகச் சிறந்த நூல்கள் குறைவான பக்கங்களில் எழுதப்பட்டிருந்தாலும், நம்மை அதிக நேரம் சிந்திக்கத் தூண்டும். நமக்கு முன் எழும் கேள்விகளுக்கு அறிவால் விடை தேட முயற்சிக்க வேண்டும். மூளையின் திறன் வளர்ச்சி பெற அறிவு உதவும். ஆனால் இலக்கியம் நமது இதயத்தை வலுப்படுத்தும். மக்களை நல்வழிப்படுத்துவது, அவர்களுக்குள் பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவை இலக்கியத்தின் பங்காக இப்போது மாறியுள்ளது. படிக்கும் பழக்கம் ஒரு தவம்: இலக்கியமோ அல்லது கலையோ எதுவாயினும் முழுமை பெற வேண்டும். இளைஞர்களுக்கு எதையும் படித்து அறிய வேண்டும் என்ற ஆர்வம் முன்பு இருந்தது. இதனால் புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை அவர்கள் தவமாகக் கொண்டிருந்தனர். ஆனால், காலப்போக்கில் இளைஞர்களிடையே வாசிக்கும் பழக்கம் சுருங்கிவிட்டது. வாழ்வில் சோதனைகளை நாம் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். தற்கொலை முடிவுக்கு நாம் ஒருபோதும் வந்து விடக் கூடாது. பிரச்னைகளை எதிர்த்துப் போராடி அடுத்த தலைமுறையை சிறப்பானதாக நாம் உருவாக்க வேண்டும். சவால்கள், அவமானங்கள், புறக்கணிப்புகள், போராட்டங்களை இளைஞர்கள் எந்த அளவுக்கு தங்களின் வாழ்வில் சந்திக்கிறார்களோ அந்த அளவுக்குச் சாதனை படைப்பார்கள். பெற்றோரின் அரவணைப்பில் அதிகம் இருக்கும் குழந்தைகள் பின்னாளில் முருங்கை மரத்தைப் போல வலுவிழக்க நேரிடும் என்றார் வெ.இறையன்பு. சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ்: "கங்கையில் ஒரு சங்கமம்' நூல் சமூகப் பிரச்னையை மருத்துவ நோக்குடன் விளக்குவதாக உள்ளது. எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் இந்த நூல் அமைந்துள்ளது. எனினும் தவறான பழக்கங்களால் மட்டுமே எய்ட்ஸ் நோய் ஏற்படுகிறது என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. இதனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரை சமுதாயம் ஒதுக்கி வைக்கிறது. இதனால்தான் மற்ற நோய்களைவிட எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. எய்ட்ஸ் விழிப்புணர்வை வலியுறுத்தும் இந்த நூலின் 1,000 பிரதிகளை சுகாதாரத் துறை வாங்கும். நாட்டிலேயே எட்ய்ஸ் கட்டுப்பாட்டில் தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது என்றார் சுப்புராஜ். இந் நிகழ்ச்சியில் இதய மருத்துவ நிபுணர் என்.சிவகடாட்சம், தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன், பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பக நிர்வாகி ராமசுப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூலாசிரியர் சாந்தகுமாரி சிவகடாட்சம் ஏற்புரை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக