சனி, 13 ஜூன், 2009

தமிழர்களின் அடிப்படை உரிமைகளில்
எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடம் இருக்காது:
அத்வானியிடம் த.தே.கூ. எடுத்துரைப்பு
[வெள்ளிக்கிழமை, 12 யூன் 2009, 11:40 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
சிறிலங்கா அரசாங்கத்தின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்துமாறும் தமிழர்களுக்கான தாயகம் - தன்னாட்சி - சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு வழங்குமாறும் இந்திய எதிர்க்கட்சித் தலைவரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான எல்.கே.அத்வானியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது.

புதுடில்லியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5:30 நிமிடம் தொடக்கம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு இச்சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா புதினத்திடம் தெரிவித்துள்ளதாவது:

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தடுப்பு முகாம்களில் படும் அவலநிலை குறித்தும் அந்த மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் குறித்தும் முக்கியமாக கலந்துரையாப்பட்டது.

அத்துடன், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள ஆயிரம் கோடி ரூபா பணம் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்தும் அத்வானிக்கு விரிவாக விளக்கியிருக்கின்றோம்.

குறிப்பாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் காயமடைந்த நிலையில் - மருத்துவ வசதிகள் ஏதுமின்றி - முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதோடு அவர்களை விரைவாக மீள்குடியேற்றமும் செய்ய வேண்டும். அத்தகைய மீள்குடியேற்ற நடவடிக்கையில் மீள்குடியேற்றத்திற்குரிய தரம் பேணப்படுவது அவசியமானது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இதுவரை அதற்கான எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை. மாறாக, வன்னியில் இராணுவ முகாம்களை அமைப்பதிலும் கரையோரங்களில் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்துவதிலும்தான் அக்கறை காட்டி வருகின்றது.

குறிப்பாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் பௌத்த துறவிகள் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்து போரில் வெற்றிபெற்றுள்ள படையினருக்கு வன்னியில் நிலங்களை வழங்க வேண்டும் என்றும் -

வன்னியில் பௌத்த சின்னங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அங்கே மீண்டும் பௌத்த சின்னங்களை பிரகடனப்படுத்த வேண்டும் என்றும் -

போர் இடம்பெற்ற பகுதிகளில் பௌத்த விகாரைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய நிலை உருவாகுவதை நாங்கள் ஏற்கப் போவதில்லை.

தற்போதைய நிலையில் முகாம்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றமே முதன்மையான விடயமாக உள்ளது. மீள்குடியேற்ற நடவடிக்கைக்காக 19 பேரடங்கிய சிறப்பு செயலணிக்குழு ஒன்றை அமைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இக்குழுவில் தமிழ் மக்களின் இந்த அவலநிலைக்கு காரணமான படைத் தளபதிகளும், சிங்களவர்களாக உள்ள செயலாளர்களும் ஒரு முஸ்லிம் இனத்தவரும்தான் உள்ளனர். எந்தவொரு தமிழ்ப் பிரதிநிதியும் இந்த குழுவில் இல்லை என்பதுடன் மேற்படி முஸ்லிம் இனத்தவரும் அமைச்சு ஒன்றின் செயலாளராகவே பணியாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் படுகொலை செய்யப்பட்டும் படுகாயமடைந்தும் அவலப்படுவதற்கு காரணமான இவர்கள் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கான உறுப்பினர்களாக இருப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவர்கள் மீது நம்பிக்கை வைக்கவும் நாங்கள் தயாராக இல்லை.

மீள்குடியேற்றத்திற்கு பொறுப்பாக நிபுணத்துவம் பெற்ற தமிழர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும். அரசாங்க உயர் பதவிகளில் தமிழர்கள் பலர் உள்ளனர். அந்தப் பகுதிகளுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எனவே இவர்கள் அடங்கிய குழுவை மீள்குடியேற்றத்திற்கு பொறுப்பாக நியமிக்க வேண்டும்.

இதேவேளையில் 10 ஆயிரம் வரையிலான புலிகளை தாம் கைது செய்து தடுத்து வைத்திருப்பதாக சிறிலங்காப் படையினர் அறிவித்திருக்கின்றனர்.

இந்த எண்ணிக்கையிலான புலிகள் அங்கே இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் புலிகளாகவும் இருக்க முடியாது. மக்கள் பலர் இன்று புலிகள் எனக்கூறப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரசன்னத்துடன் இவர்கள் யார் என்பதை பரிசீலிக்க வேண்டும்.

அத்துடன், சரணடைந்து பின்னர் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். ஜே.வி.பிக்கு சிறிலங்கா அரசாங்கம் எப்படி மன்னிப்பு வழங்கியதோ அதேபோல தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும்.

இதைவிட 13 ஆயிரம் பேரைக் காணவில்லை என்று மனித உரிமைகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் குறித்த எந்தவொரு பதிவுகளும் இல்லை. இது அபாகரமான விடயம். எனவே இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு காணாமல் போன மக்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

மோதல் நடைபெற்ற பகுதியில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்த நிலையில் மருந்தின்றி மடிந்திருக்கின்றனர். மருத்துவ வசதிகள் இன்றி இந்த 25 ஆயிரம் பேரும் அழிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமை அமைப்புக்களும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்வருகின்ற போது இந்தியா அதற்கு தடையாக நிற்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த தீர்மானத்தை எதிர்த்து நின்ற இந்தியா வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. இன்னமும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இத்தகைய நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

13 ஆவது அரசியமைப்பு திருத்தச் சட்டத்திற்கமைவான தீர்வுதிட்டம் குறித்து அரசாங்கம் கதைக்கிறது. இந்த 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இறந்துபோன ஒன்று. 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இன்னமும் இரண்டு மாதங்களில் அந்த தீர்வுத்திட்டத்தை முன்வைப்போம். அதற்கு இந்தியாவின் ஆதரவும் பங்களிப்பும் அவசியமானது.

தமிழர் தாயகம் - தமிழர் தன்னாட்சி - தமிழர் சுயநிர்ணய உரிமை என்பனவற்றின் அடிப்படையிலேயே எமது தீர்வுத்திட்டம் அமையும். அதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடம் இருக்காது என்பது உட்பட்ட மேற்படி தகவல்களை அத்வானியிடம் எடுத்துக் கூறினோம்.

இந்த தீர்வுத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஆதரவு வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.

எமது கருத்துக்களை முழுமையாக செவிமடுத்த அவர் தமிழ் மக்களுக்கான தமது கட்சியின் ஆதரவு என்றும் இருக்கும் என்றும் மத்திய அரசுடன் இது தொடர்பாக பேசுவதாகவும் உறுதிமொழி வழங்கியிருக்கிறார்.

இந்த தகவல்களையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பிலும் தெரிவித்தோம் என்றார்.

இன்றும் நேற்றும் நடைபெற்ற சந்திப்புக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இச்சந்திப்பை முடித்துக்கொண்டு நாளை இவர்கள் கொழும்பு திரும்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக