இன்று: சனிக் கிழமை, ஜுன் 13, 2009
புலிகளை தடை செய்வது குறித்து ஆராயப்படமாட்டது அவுஸ்திரேலியாதெரிவிப்பு
பிரசுரித்த திகதி : 12 Jun 2009தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யுமாறு இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக விடுத்து வரும் கோரிக்கைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவில் ஆட்சி செய்த முன்னாள் பிரதமரும், இன்நாள் பிரதமரும் புலிகளை தடை செய்யும் திட்டத்திற்கு உரிய கவனம் செலுத்தவில்லை என இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
தமிழர்கள் செறிந்து வாழும் அவுஸ்திரேலிய பிராந்தியங்களில் புலிகளுக்கு எதிரான தடைக்கு அதிகளவு ஆதரவு கிடைக்கப் பெறவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது. இதேவேளை, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் கடும் அதிருப்தியளிப்பதாக அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சேனக வல்கம்பல தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளில் கிடைக்கப் பெறும் ஆதரவு இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்த வழிகோலும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ள போதிலும், இவ்வாறு சில நாடுகளில் புலிகளுக்கு கிடைக்கப் பெறும் ஆதரவு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.புலம் பெயர் தமிழர்களை தூண்டி அதன் மூலம் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தை முன்னெடுக்க முனைவதாக அவர் தெரிவித்துள்ளார்.அதிக எண்ணிக்கையிலான சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கக் கூடுமென தாம் நம்புவதாக உயர்ஸ்தானிகர் வல்கம்பொல சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள போதிலும் புலம் பெயர் தமிழர்களுடன் இணைந்து விடுதலைப் புலிகள் ஏனைய நாடுகளில் பயங்கரவாதத்தை விதைக்க கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளினால் மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் தலைவர் டொக்டர் ராகா ராகவன் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளின் மூலம்தான் பல தசாப்த காலமாக தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சந்தர்ப்பம் உருவாகியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டால் அது தமிழர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஓர் சந்தர்ப்பம் ஏற்பட்டால் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகம் அங்கீகாரம் அளித்ததாகவே தமிழர்கள் கருத நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக