வெள்ளி, 12 ஜூன், 2009

வட பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற வற்புறுத்துங்கள்:
இலங்கை தமிழ் எம்.பி.க்கள்
இந்தியாவிடம் கோரிக்கை
தினமணி


புதுதில்லி, ஜூன் 11: இலங்கை வட பகுதியிலிருந்து ராணுவம் விரைவில் வெளியேற நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசுக்கு இலங்கை தமிழ் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் ஆதரவு கட்சி என்று கருதப்படும் தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் 4 எம்.பி.க்கள் தில்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு அரசின் அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்தியா அளிக்கும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில் தமிழ் தேசியக் கட்சி பிரதிநிதி ஒருவர் இடம் பெற வேண்டும் என்று எம்.பி.க்கள் கோரினர். தமிழர்களை மீண்டும் அவர்களது வசிப்பிடங்களில் குடியமர்த்த இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை தமிழ் எம்.பி.க்கள் குழு தலைவர் சம்பந்தன் பாராட்டினார். அமைச்சர் கிருஷ்ணாவைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு தமிழ் எம்.பி.க்கள் பேட்டியளித்தனர். இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கு முன்பாக அங்கிருந்து ராணுவம் முழுவதுமாக வெளியேற்றப்பட வேண்டும். இதற்கு இந்தியா இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தோம் என்றனர். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும். ராணுவ முகாம்கள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப் பட வேண்டும். ராணுவம் தொடர்ந்து இருந்தால் மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ முடியாது என்று தமிழ் எம்.பி. மாவை சேனாதிராஜா கூறினார். வட பகுதியில் தமிழர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லவும் மறுவாழ்வு பணிகளுக்கும் இந்தியா இன்னும் அதிக நிதி ஒதுக்க தயாராக உள்ளது என்று அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்ததாக அவர்கள் கூறினர். மறுவாழ்வுப் பணிகளுக்கு இந்தியா அளித்து வரும் உதவிகள் திருப்தியளிப்பதாக உள்ளது என்று சேனாதிராஜா கூறினார். வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனையும் தமிழ் எம்.பி.க்கள் சந்தித்துப் பேசினர். தமிழ் தேசியக் கூட்டணி விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அடக்கடவுளே! கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் குற்றவாளிகளையும் நீதிபதிகளாக எண்ணும் அவலம் எப்பொழுது நீங்கும்! இதனை அறியாமை என்பதா? வேறு வழி இல்லா நிலைமை என்பதா? இப்படியாவது இவர்களின் செயல்படாத் தன்மை மூலம் முகமூடியைக் கிழிக்கும் முயற்சி என்பதா?

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/12/2009 3:47:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக