கொழும்பு, ஜூன் 7: இலங்கையின் வடக்கில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகாரப் பரவல் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வுபெற உள்ள நீதிபதி சரத் நந்தா சில்வா தெரிவித்தார். இதுதொடர்பாக நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: இலங்கை போன்ற சிறிய தீவுகளில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு போலீஸ், நிலம் என்று சுயேச்சையான அதிகாரம் அளிப்பது என்பது இயலாத காரியம். இந்தியா போன்ற பெரிய மாநிலங்களில் இச்சட்டத்தை அமல்படுத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஏனெனில் அங்கு மக்கள் தொகையும் அதிகம், நிலப் பரப்பளவும் அதிகம். ஆனால் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் அவற்றை அமல்படுத்துவது நிர்வாக ரீதியில் குழப்பத்தை ஏற்படுத்தும். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள 13வது சட்டப் பிரிவு நடைமுறைக்கு ஏற்றதல்ல. முன்னாள் அதிபர் ஜயவர்த்தனே ஆட்சியின்போது அமலில் இருந்த மாவட்ட வளர்ச்சி கவுன்சில் முறை மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. தமிழர்களுக்கு நீதி மற்றும் சமூக ரீதியில் சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்கு உடனடியாக வழிவகை காணவேண்டும். இல்லையேல் மீண்டும் ஒருமுறை அவர்கள் போராட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவர். தற்போது வடக்குப் பகுதியில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தரவேண்டும். இல்லையேல் இதற்கு சர்வதேச சமுதாயத்திடம் இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சிறுபான்மை மக்களின் உரிமையைக் காக்கவேண்டியது நமது கடமை. அதற்கான நேரமும் இதுவே என்றார் சரத்.
கருத்துகள்
ஈழத்தமிழர்களுககுச் சட்டப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் அவர்களின் உரிமையைக் காக்க வேண்டும் அவர்கள் படும் அவலங்களைக் கூறச் சொற்கள் இல்லை, இவற்றையெல்லாம் கூறுதால் தான் தண்டிக்கப்படலாம் என்றெல்லாம் தலைமை நீதிபதி சரத் நந்தா சில்வா உண்மைகளைக் கூறுவதால் சிங்களர்களுக்குச் சார்பாகக் கூறுவது போல் அதிகாரப் பரவல் கூடாது என்கிறாரா எனப் புரிய வில்லை. போதிய அதிகாரமும் இன்றி உரிமையும் இன்றித் தமிழர்களை வைத்திருப்பது மேலும் கடுமையான விளைவுகள் இலங்கையில் ஏற்படும எனப்தற்கான அறிகுறியேயாகும். என்றாலும் நாம் வேண்டுவது அதிகார்ப் பரவல் அன்று. தனியுரிமையுடைய தாயகப் பகுதியே! வெல்க தமிழ் ஈழம்!
அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/7/2009 3:34:00 AM
6/7/2009 3:34:00 AM