சனி, 17 நவம்பர், 2012

ஆந்திர, கேரள மீனவர்களால் தமிழக மீனவர்களுக்குச் சிக்கல் - முதல்வர்


சென்னை:"ஆந்திர மீனவர்கள், அவ்வப்போது, தமிழக மீனவர்களை சிறை பிடிக்கின்றனர். இப்படி, தாங்களே சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் போக்கை, ஆந்திர மீனவர்கள் கைவிட வேண்டும்' என, தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஜெ., வலியுறுத்தி உள்ளதை, நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் வாசித்தார்.’

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில், தென் மாநில முதல்வர்கள் மாநாடு, பெங்களூருவில், நேற்று நடந்தது.இதில், தமிழக முதல்வர் சார்பில், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள முதல்வர் சார்பில், அமைச்சர் மணி மற்றும், நான்கு மாநில தலைமை செயலர்கள், டி.ஜி.பி.,க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தென் மாநிலங்களின் மேம்பாடு, தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் பிரச்னை, சுற்றுலா வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு, ஆள் கடத்தல் உள்ளிட்ட, பல்வேறு பல விவகாரங்கள் குறித்து, விவாதிக்கப்பட்டன.கூட்டத்தில், தமிழக முதல்வரின் உரையை, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் வாசித்தார். முதல்வர் கூறியிருப்பதை, பன்னீர் செல்வம் வாசித்ததாவது:

தமிழக மீனவர்கள், ஆந்திர ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்தால், ஆந்திர மீனவர்களால் சிறை பிடிக்கப்படுகின்றனர். பின், தமிழக மீனவர்களிடம், கணிசமான தொகையை பெற்று விடுவிக்கின்றனர்.கடந்த, 2007ல், அமைச்சர் அளவில் நடந்த கூட்டத்தில், சர்ச்சைக்குரிய கடல் பகுதியில், மீன் பிடிப்பதற்கு வசதியாக, மீன்பிடி உரிமம் வழங்க வேண்டும் என, விவாதிக்கப் பட்டது.ஆனால், இந்த விஷயத்தில், ஆந்திர அரசு எவ்வித முடிவும் எடுக்காமல் உள்ளது. ஆந்திர மீனவர்கள், சட்டத்தை, தாங்களே கையில் எடுத்துக்கொள்ளும் போக்கை கைவிட வேண்டும்.

இதேபோல், கன்னியாகுமரி மீனவர்கள், கேரள கடல் பகுதியில் மீன் பிடித்தால், கேரள மீனவர்களால் தாக்குதல் நடத்தப்படுகிறது; படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன. எனவே, மீனவர்களுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் எவ்வித சேதமும் ஏற்படாத அளவிற்கு, மீன்பிடி உரிமம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில், மின் தேவை மற்றும் மின் உற்பத்திக்கு இடையே, பெரிய இடைவெளி உள்ளது. 12வது ஐந்தாண்டு திட்ட கால இறுதியில் (2012-17), தமிழகத்தின் மின் தேவை, 18 ஆயிரம் மெகா வாட்டாக இருக்கும். ஆனால், தற்போது, 8,500 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதை கருத்தில்கொண்டு, மின்தேவையை பெருக்க, சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு, தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வரும், 2015க்குள், சூரிய ஒளி மின் உற்பத்தி வழியாக, 3,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கூடங்குளம் முதல் அணுமின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும், 1,000 மெகா வாட் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கு வழங்க, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் உரையை பன்னீர்செல்வம் வாசித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக