ஞாயிறு, 11 நவம்பர், 2012

குற்றாலத்தில் அருமையான சுற்றுச்சூழல் பூங்கா -எல்.முருகராசு

குற்றாலத்தில் அருமையான  சுற்றுச்சூழல் பூங்கா -எல்.முருகராசு

குற்றாலத்தில் ஐந்தருவிக்கு அருகே உள்ள பழத்தோட்டம்.
இங்குள்ள பழத்தோட்ட அருவிக்கு ஒரு காலத்தில் சிபாரிசு கடிதம் வாங்கிப்போய் குளித்தவர்கள் உண்டு. ஆனால் திடீரென ஒரு நாள் பழத்தோட்ட அருவி மூடப்பட்டது.

சில ஆண்டுகளாக மூடியே கிடந்த பழத்தோட்ட அருவி பகுதியில் என்னதான் நடக்கிறது என்பதை பற்றி யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிலையில் திடீரென கடந்த மாத இறுதியில் குற்றாலம் பழத்தோட்ட பகுதியில் சுமார் ஆறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுழல் பூங்காவை முதல்வர் ஆன்லைனில் திறந்து வைத்தார் என்பதை பார்த்த உடனேயே மனதிற்குள் சந்தோஷம்.

குற்றால பிரியரான நான் உடனடியாக அங்கு ஆஜரானேன்.
பழத்தோட்ட அருவியினுள் உள்ள தோட்டக் கலைத்துறை அலுவலர் முத்துமாலை, இந்த சுற்றுச்சூழல் பூங்காவினை அங்குலம், அங்குலமாக நேசிக்கிறார் என்பது அவர் சுற்றிக் காட்டும்போதே தெரிந்தது.

அடர்ந்த காடாக கிடந்த அப்போதைய பழத்தோட்டம் அடியோடு மாறியுள்ளது. ஒவ்வொரு இடத்தையும் பார்த்து, பார்த்து உருவாக்கியுள்ளனர். சுமார் 40 ஏக்கரில் மூங்கில் தோட்டம், வண்ணத்துபூச்சி பூங்கா, நீருற்று, மலர்த்தோட்டம், சிறுவர் பூங்கா, இளைஞர்களுக்கான சாகச பூங்கா, அருவியின் ஒசையைக் கேட்டுக்கொண்டே நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட மரப்பலகை பாதை, கற்பாறை பூங்கா, பசுமை குடில், வியூ பாயின்ட் என்று ஓரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இயற்கை ஆர்வலர்கள் இந்த இடத்தை பார்த்தால் வெளியே வரவே மாட்டார்கள் அந்த அளவிற்கு இயற்கையின் அனைத்து விஷயங்களும் நிறைந்து கிடக்கிறது.

இவ்வளவு நாளும் குற்றாலத்தில் குளியலைவிட்டால் பொழுது போவதற்கு சரியான இடமில்லாமல் சுற்றுலா பயணிகள் தவித்து வந்ததனர், அவர்களது சுற்றுலா தாகத்தை இந்த சுற்றுச்சூழல் பூங்கா நிச்சயம் தீர்த்து வைக்கும். காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை வருடத்தில் 365 நாளும் விடுமுறையின்றி இந்த பூங்கா திறந்து இருக்கும்.
முக்கிய குறிப்பு: சுற்றுச்சூழல் பூங்கா பற்றிய படங்களை பார்க்க சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரியை கிளிக் செய்யவும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக