ஞாயிறு, 11 நவம்பர், 2012

அண்ணாமலை ப் பல்கலை.யை அரசுடைமை ஆக்க வேண்டும்: இராமதாசு

வேண்டிய  பணம் கொடுத்த்வர்களுக்கெல்லாம் பணியமர்த்தம் என்பதே  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதன்மைப்பொறுப்பாளர்களின் கொள்கையாக உள்ளது. இதன்  காரணமாகவே கணக்கு வழக்கின்றி ஆட்கள் நியமிக்கப் பெற்றனர். குறைந்தது கடந்த 12  ஆண்டுகளில்  பணியில் சேர்ந்தவர்கள் பற்றிப் புலனாய்வு செய்து கையூட்டு பெற்றவர்களின் சொத்துகளை அண்ணாமலப் பல்கலைக்கழகத்தில் சேர்த்து இதன் நிதியைப் பெருக்கலாம். இத்தகைய ஊழலுக்குக் குடும்பத்தினரும்தான காரணம். எனவே, அவ்வாறு  நிதியை மீட்டெடுத்தபின்பு மரு.இராமதாசு சொல்வதுபோல் அரசுடைமை ஆக்கலாம். இல்லையேல் அரசு  நிதி வீணாகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

 +++++++++++++++++++++++++++++++++++++++

அண்ணாமலை ப் பல்கலை.யை அரசுடைமை ஆக்க வேண்டும்: இராமதாசு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் நிலவிவரும் நிர்வாக குளறுபடிகள் தான் இந்த நிலைக்கு காரணம் என்று தெரிகிறது. நிதி நெருக்கடியை சமாளிப்பது குறித்து கடந்த 7ம் தேதி பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் துணைவேந்தர் ஆலோசனை நடத்தியுள்ளார். நிதி நெருக்கடியை சமாளிக்க 4500 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவும், மீதமுள்ள ஊழியர்களின் ஊதியத்தை பாதியாக குறைக்கவும் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால் பல்கலைக்கழக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு கடுமையாக கண்டிக்கத் தக்கது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடிக்கு அதன் ஆசிரியர்களோ, மற்ற பணியாளர்களோ எந்த வகையிலும் காரணம் அல்ல. பல்கலைக் கழகத்தை பொன்முட்டையிடும் வாத்தாக கருதிய நிர்வாகத்தின் மோசமான செயல்பாடுகள் தான், ஒரு காலத்தில் புகழ் பெற்ற கல்வி நிறுவனமாக இருந்த அண்ணாமலை பல்கலைக் கழகத்தை இன்று இந்த அவலநிலைக்கு கொண்டு வந்திருக்கின்றன.
பல்கலைக் கழகத்தில் தேவைக்கு அதிகமான ஊழியர்கள் இருந்த போதிலும், பல்கலை நிர்வாகம், அதற்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக, விருப்பம் போல ஆட்களை பணியமர்த்தி வந்தது. கடந்த 2000வது ஆண்டுக்கு பிறகு 12 ஆண்டுகளில் மொத்தம் 7ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களை பல்கலைக்கழக நிர்வாகம் பணியமர்த்தியிருக்கிறது. இதனால் தற்போது 14 ஆயிரம் மாணவர்கள் பயிலும் அந்த பல்கலைக் கழகத்தில் 14 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர் என்பதிலிருந்தே பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வளவு மோசமாக செயல்பட்டிக்கும் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
தவறு முழுவதும் நிர்வாகத்தின் பக்கம் இக்கும் நிலையில், நிதி நெருக்கடியை காரணம் காட்டி 4500 பேரை ஆட்குறைப்பு செய்வதோ, மற்ற ஊழியர்களின் ஊதியத்தை 50% குறைப்பதோ முறையற்றதாகும். இதனால் , அனைத்துப் பணியாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, பாடம் நடத்த தகுதியுடைய ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு, பல்கலைக்கழகத்தில் முறைசார்ந்த கல்வி பயிலும் 14 ஆயிரம் மாணவ மாணவியரும் , தொலைவழிக் கல்வி முறையில் பயிலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் பாதிக்கபடுவார்கள்.
எனவே, ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு முடிவை கைவிடும்படி பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும். இதை நிர்வாகம் ஏற்காவிட்டால், சிறப்பு சட்டம் கொண்டுவரப்பட்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தை அரசே எடுத்துக்கொண்டதை போல, அண்ணாமலை பல்கலைக் கழகத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். இப்பல்கலைக்கழகம் முழுக்க, முழுக்க தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் தான் நடத்தபடுகிறது என்பதால் தமிழக அரசுக்கு எந்த செலவும் ஏற்படாது என்பதைக் கருத்தில் கொண்டு, அதை அரசுடைமையாக்க தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக