வியாழன், 15 நவம்பர், 2012

பான்கீமூனின் மரண அச்ச ஒப்புதல்வாக்குமூலம்

இலங்கை ப் போர் க் குற்றம் ஐ.நா.சபைக்கு ஒரு பாடம்: பொதுச்செயலாளர் பான் கீ மூன் அறிக்கை
இலங்கை போர்குற்றம் ஐ.நா.சபைக்கு ஒரு பாடம்: பொதுச்செயலாளர் பான் கீ மூன் அறிக்கை
 இலண்டன் நவ.15-

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

இலங்கை அரசின் போர்க் குற்றம் தொடர்பான இந்த விசாரணை அறிக்கையை ஐ.நா.சபை முன்னாள் அதிகாரி சார்லிபெட்ரி தலைமையிலான குழு தயாரித்தது. அந்த அறிக்கை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் வசம் வழங்கப்பட்டது.

அறிக்கை விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் முன் அதில் உள்ள முக்கிய சாரம்சங்கள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி உள்ளது. லண்டன் பி.பி.சி. தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கையில் ஐ.நா. ஆற்றி வந்த பணியின் நோக்கம் யுத்தத்தை தடுப்பது என்பது அல்ல. மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்வதுதான் அவர்களுடைய வேலை. ஆனால் கொழும்பில் பணியாற்றிய ஐ.நா. பணியாளர்களுக்கு அவ்வாறான உதவிகளை செய்வதற்கான தகுதிகளோ, அனுபவமோ இல்லை.

இலங்கையின் கொடூரமான யுத்தத்தால் எழுந்த சவால்களை இவர்களால் சமாளிக்க முடியவில்லை. நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் இருந்து இவர்களுக்கு ஒழுங்கான உதவிகளும் கிடைக்கவில்லை.

பயங்கரவாதத்தை நசுக்குவதாக சூளுரைத்துவிட்டு அரசங்கம் எடுத்த நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் பெருமளவில் கண்டும் காணாமல் இருந்து விட்டன. கட்டமைப்பு ரீதியாக பெரும் தவறுகள் நடந்துள்ளன. இப்படி இனி எதிர்காலத்தில் நடக்கவே கூடாது.

யுத்தப் பிரதேசத்துக்கு உள்ளிருந்து வெளியேற முடியாமல் ஒரு சிறு இடத்தில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டிருந்தனர். செப்டம்பர் 2008-ல் ஐ.நா. தனது பணியாளர்களை இலங்கையின் வடக்கில் உள்ள யுத்த பகுதியில் இருந்து விலக்கிக் கொண்டிருந்தது.

ஐ.நா. ஊழியர்களின் பாதுகாப்புக்கு தாங்கள் உத்தரவாதம் வழங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் எச்சரித்ததை அடுத்து அது இம்முடிவை எடுத்திருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கையை ஐ.நா. எப்போதும் எதிர்த்துக் கேள்வி கேட்கவே இல்லை. ஐ.நா. அந்த இடத்தில் இருந்து விலகியதால் யுத்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கு உதவிகள் கிடைப்பதிலும் அவர்களுடைய உயிர்கள் பாதுகாக்கப்படுவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இலங்கையில் மிக மோசமான ஒரு பெருந்துயர சூழல் நிலவிய நிலையில் பொதுமக்கள் கொல்லப்படாமல் தடுப்பதற்கு முயல வேண்டும் என்பதை கொழும்பில் உள்ள மூத்த ஐ.நா. அதிகாரிகள் தங்களது பொறுப்பாகவே கருதவில்லை.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையக அதிகாரிகளும் அவர்களுக்கு அறிவுறுத்தல்களையோ மாற்று உத்தரவுகளையோ வழங்கவில்லை. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை வலுவான உத்திகள் மூலம ஐ.நா. தெளிவாக கணக்கிட்டு வருகிறது என்று அதுவே கூறினாலும் அந்த விவரங்களை ஐ.நா. பிரசுரிக்கத் தவறி விட்டது.

மேலும் பொதுமக்கள் உயிரிழப்புகளில் பெரும்பான்மையானவற்றுக்கு காரணம் அரசு படையினரின் ஷெல் தாக்குதல்தான் என்பதை இலங்கை அரசின் அபத்தங்கள் காரணமாக ஐ.நா. தெளிவுபடுத்தவில்லை. ஆனால் தகவல்களை உறுதிசெய்ய முடியவில்லை என்பதால்தான் அவற்றை வெளியிடவில்லை என்று ஐ.நா. வாதாடுகிறது.

ஐ.நா. கட்டமைப்புக்குள் ஒரு விஷயத்துக்கு மாறாக இன்னொரு விஷயத்தை விட்டுக் கொடுப்பது என்ற ஒரு கலாசாரம் அதிகம். யுத்தப் பிரதேசத்தில் மக்களுக்கு சென்று உதவ கூடுதலான இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான விஷயங்கள் பற்றி வெளியில் பேசாமல் இருந்துவிட ஐ.நா. பணியாளர்கள் தீர்மானத்திருந்தனர்.

இலங்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டம் அரங்கேறியபோது ஐ.நா. பாதுகாப்பு சபையோ வேறு முக்கிய ஐ.நா. நிறுவனங்களோ ஒருமுறைகூட அதிகாரப்பூர்வமாக கூடவில்லை. ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு எது தெரிய வேண்டுமோ அதனை வெளியில் சொல்லாமல் அவர்கள் எதனை கேட்க விரும்புவார்களோ அதனை தான் ஐ.நா. வெளியில் சொன்னது.

இந்த அறிக்கையை பிரசுரித்து அதிலிருந்து படிப்பினைகளை கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இப்படியான விஷயம் நடக்காமல் பார்த்துக் கொள்ள ஐ.நா. முயல வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வறிக்கை குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இலங்கை போர்குற்றம் தொடர்பாக என்முன் வைக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்கிறோம். இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் ஐ.நா.சபை தனது பொறுப்புகளை சரிவர செயல்படுத்த முடியவில்லை. இதனை ஐ.நா. சபை ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் சர்வதேச மக்களிடம் ஐ.நா.சபை மீதான நம்பிக்கை அற்றுப் போகாமல் இருக்க ஐ.நா.சபையின் செயல்பாட்டாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 கருத்து:

  1. "தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொள்ளும் ஐ.நா பொதுச்செயலாளர், தன்னுடைய இந்தக் குற்றங்களுக்குக் கழுவாய் (பரிகாரம்) தேடும் விதமாக இனியேனும், மிச்சமுள்ள ஈழத் தமிழர்களையாவது காப்பாற்றவும், தனித் தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும், அதில் உலகெங்குமுள்ள இலங்கைத் தமிழர்கள் நன்முறையில் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்!". இவ்வாறு தமிழ் அமைப்புக்கள் வலியுறுத்த வேண்டும்!

    பதிலளிநீக்கு