செவ்வாய், 13 நவம்பர், 2012

நீதிமன்ற அரங்கில்அலைபேசி கூடாது!: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

கோர்ட் அரங்கில் மொபைல் போன் கூடாது!: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
 
 
கோவை: நீதிமன்ற வளாகங்களில் செல்லும் அரசு அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. "மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் மற்றும் டிஜிட்டல் பொருட்களை, நீதிமன்ற அரங்கில் எடுத்துச் செல்லக் கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என அரசு எச்சரித்துள்ளது.கடந்த மாதம் சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தொடர்பான வழக்கு விசாரணை நடந்த போது, அரசு அலுவலர் ஒருவர் மொபைல் போனில் நீதிமன்ற நடடைமுறைகளை பதிவு செய்தார். உடனே, அவரிடமிருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அவர் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தை அடுத்து, நீதிமன்ற வளாகங்களில் செல்லும் அரசு அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அரசு உத்தரவில் கூறியுள்ளதாவது:நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளில்க உரிய அனுமதியின்றி அரசு அலுவலர்கள் பங்கேற்கக் கூடாது. அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரசு பிளீடர், பப்ளிக் பிராசிகியூட்டர், சிறப்பு அரசு பிளீடர், கூடுதல் அரசு பிளீடர், கூடுதல் பப்ளிக் பிராசிகியூட்டர், அரசு வக்கீல்கள் இவர்களில் ஒருவரிடம், எழுத்துப்பூர்வமாக சிறப்பு அனுமதி பெற்றிருக்க வேண்டும். வாய் மொழி உத்தரவுகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.நீதிமன்ற பணி நேரங்களில், மிகவும் அவசரம் என்றால், அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரசு பிளீடர், பப்ளிக் பிராசிகியூட்டர் இவர்களில் ஒருவரின் மேலாளர் அனுமதியை பெற்று நீதிமன்ற அரங்கில் நுழைய வேண்டும்.நீதிமன்ற அரங்கில் மொபைல் போன், டிஜிட்டல் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகள், ஆடியோ - வீடியோ பதிவு வசதி கொண்ட எந்த கருவிகளையும் எடுத்துச் செல்லக்கூடாது. நீதிமன்ற நடைமுறைகளை ஆடியோ, வீடியோ மற்றும் போட்டோ என, எந்த விதத்திலும் பதிவு செய்யக் கூடாது.அரசு ஆவணங்களை, சட்ட அலுவலர்கள் ஆய்வு செய்வதற்கான தேவை ஏற்படும்போது, அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி, அவற்றை ஒப்படைக்க வேண்டும். நீதிமன்ற வழக்கு விசாரணையில் பங்கேற்கும் அலுவலர்கள், தங்களின் அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும்.இந்த வழிகாட்டுதல் விதிமுறைகளை பின்பற்றாத அலுவலர்கள் மீது, உயர் அதிகாரிகளால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக