புதன், 14 நவம்பர், 2012

அண்ணாமலைப் பல்கலை : அரசு தீர்வு காண வேண்டும் :கலைஞர்கருணாநிதி

தினமணியின் இதழமைப்பில் மாற்றங்கள் வந்துள்ளதால் அதன் கருத்துப்பதிவேற்பிலும் நல்ல மாற்றம் இருக்கும் எனக்கருதி இதனைக் குறிப்பிடுகின்றேன். (வழக்கம்போல் புறக்கணித்தாலும் கவலை இல்லை.)அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் வேறுபாடு தெரியாமல் செய்தியை வெளியிடலாமா? செய்தியாளர் முதற்கொண்டு மேலுள்ளவர்கள் வரை அனைவருக்கும் வேறுபாடு தெரியாமல் உள்ளதுகவனக்குறைவு என்று சொல்ல இயலாது. தமிழிதழில் தமிழ்நாடு பற்றிய பொதுஅறிவில் ஈடுபாடின்மையைக் காடடுகிறது. உடனே  தலைப்பைத் திருத்தி வெளியிடுங்கள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அண்ணா பல்கலை விவகாரத்தில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் : கருணாநிதி

First Published : 14 November 2012 05:31 PM IST
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று அனுப்பியுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில், கேள்வி :- கழக ஆட்சியில் வழங்கப்பட்ட அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடுத்திருக்கிறார்களே?
கருணாநிதி : திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது, ஆதி திராவிட மக்களுக்குள், அருந்ததியினர் சமூக மக்கள் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால், ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் இருந்து 3 சதவீதம் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 27-11-2008 அன்று கூடிய தமிழக அமைச்சரவையின் முடிவுப்படி ஆணையிடப்பட்டு, 2009ஆம் ஆண்டில் “தமிழ்நாடு அருந்ததியர்கள் (தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களில் இடங்களை மற்றும் அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டிற்குள்ளாக தனி ஒதுக்கீடு செய்தல்) சட்டம் இயற்றப்பட்டு, 29-4-2009இல் இது தொடர்பான விதிகள் உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மதுரை உயர் நீதிமன்றத்தில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர். இந்த வழக்கில் தமிழக அரசு போதுமான அறிவுரைகளை அரசு வழக்கறிஞருக்கு வழங்கி, வலிமையான வாதங்களை முன்வைத்து, தாழ்த்தப்பட்டோருள் மிகவும் தாழ்த்தப்பட்டோராகக் கடைநிலையில் இருந்து வரும் அருந்ததியரைக் கைதூக்கிவிட, கழக ஆட்சியில் வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டையும், சமூக நீதியையும் காப்பாற்ற வேண்டியது கடமை என்பதை நினைவுபடுத்துகிறேன். இட ஒதுக்கீட்டிற்கான பஞ்சாப் வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்திலே உள்ளது. அந்த வழக்கில் என்ன தீர்ப்பு சொல்லப்படு கிறதோ, அதே தீர்ப்பு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கும் பொருந்தும் என நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு வழக்கு வரவுள்ளது. எனவே கழக அரசால் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடுதானே என்று ஏனோதானோ என்று இருந்து விடாமல்; உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் பஞ்சாப் வழக்கில் தமிழக அரசும் தன்னை ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டு, தமிழகத்திலே அருந்ததியர் இட உள் ஒதுக்கீடு தொடர்ந்து நடைமுறையில் இருப்பதற்கு ஆவண செய்ய வேண்டுமென்று இந்த நேரத்தில் வலியுறுத்துகிறேன்.
கேள்வி :- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக இரண்டு மூன்று நாட்களாகச் செய்தி வந்து கொண்டிருக்கிறதே?
கருணாநிதி :  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு தமிழகத்தில் ஒரு சிறப்பான பெயர் உண்டு. மூத்த பல்கலைக் கழகம் என்பது மட்டுமல்லாமல் திராவிட இயக்கத்தின் பல தலைவர்கள் உயர் கல்வி பெற்ற இடமும் அதுதான். எனவே அந்தப் பல்கலைக் கழகத்திற்கு என்று ஒரு மதிப்பு உண்டு. அந்தப் பல்கலைக் கழகத்தில் நிதிச் சுமை - நிதி நெருக்கடி - என்ற காரணத்தைக் காட்டி அங்கு பணிபுரிவோர்களின் எண்ணிக்கை யைக் குறைப்பது அல்லது அவர்கள் வாங்கும் சம்பளத்தின் அளவைக் குறைப்பது போன்ற யோசனைகள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையிலேயே - இந்த யோசனைகளை அறிந்த பல்கலைக்கழக அலுவலர்கள் போராடி வந்தபோது பல்கலைக் கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டிருப்பதாகச் செய்தி வந்துள்ளது. அப்படி கால வரையறையின்றி மூடப்பட்டிருப்பதால், பல்கலைக் கழக அலுவலர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதோடு, பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வியும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே அ.தி.மு.க. அரசு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்பது ஏதோ வேறு மாநிலத்திலே இருப்பதைப் போல எண்ணிக் கொண்டு இந்தப் பிரச்சினையிலே அக்கறையற்ற நிலையில் இருந்து, அந்தப் பல்கலைக் கழகத்தில் போராடிக் கொண்டிருப் போர், அந்தத் துறையின் அமைச்சரைச் சந்தித்து தங்கள் குறைபாடுகளைத் தெரிவித் திருக்கிறார்கள். இதில் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு பல்கலைக் கழக அலுவலர்களையும், மாணவ மாணவியரையும் காப்பாற்றுவதற்கு ஆவன செய்ய முன் வரவேண்டும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக