வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்வோர் சிக்கல்களைத் தீர்க்க தனி அமைச்சகம்: தொழிலாளர் இயக்கம் வேண்டுகோள்
First Published : 15 November 2012 06:36 PM IST
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று, அங்கே பல்வேறு
பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு தாயகம் திரும்புவோருக்கு தமிழகத்தில் தனி
அமைச்சகம் வேண்டும் என தேசிய வீட்டு வேலைத் தொழிலாளர் இயக்கத்தினர்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலியான விளம்பரங்களைக் கண்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று
பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் குறித்த கருத்தரங்கு வியாழக் கிழமை
சென்னையில் நடைபெற்றது.
தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வளர்மதி
வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர்
ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார்.
அதில்...
பல்வேறு பத்திரிகைகளில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, அதிக ஊதியம்
என்னும் கவர்ச்சிகர விளம்பரத்தை நம்பி பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச்
செல்கின்றனர்.
முதல் பிரச்னை அதிக சம்பளம் எதிர்பாத்துச் சென்றால் அதில் ஏமாற்றம்
ஏற்படுகிறது. ஹவுஸ் கீப்பிங் என அழைத்துச் சென்று அங்கு பாலைவனத்தில்
ஒட்டகம் மேய்க்க அனுப்புதல், தங்குமிடம், உணவு போன்ற அடிப்படை பிரச்னைகள்
எழுதல் ஆகியவற்றை சந்திக்கின்றனர்.
மொழிப் பிரச்னையால் அங்கு அவருடைய பிரச்னையை தீர்த்துக் கொள்ள முடியாமல்
பல்வேறு சங்கடங்களை அனுபவித்து பின்னர் வெறும் கையுடன் தாயகம்
திரும்புகிறார். பெண்களின் நிலைமை அதை விட மோசமாக இருக்கும். 18 முதல் 20
மணி நேர வேலை, சில இடங்களில் பாலியல் தொல்லை ஏற்படுகிறது.
எனவே வெளிநாடுகளில் வேலை என்ற விளம்பரங்களை வெளியிடும்போது அந்த
நிறுவனங்கள் அந்த நிறுவனம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமா, பதிவு
செய்யப்பட்ட நிறுவனமா என்பதை ஆராய வேண்டும். மேலும் விளம்பரங்களை
வெளியிடுவதில் அரசு விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் கடைபிடிக்க
வேண்டும். இதன் மூலம் மற்றவர்கள் ஏமாறுவதை தவிர்க்க முடியும் என்றார்.
தொடர்ந்து, தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம் சார்பில்,
வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு
திரும்பும் நபர்களுக்கென தமிழகத்தில் (சென்னையில்) தனி அமைச்சகம் அமைக்க
வேண்டும்.
பாதிக்கப்பட்டு வருவோருக்கு தொடர்ந்து அவர்கள் வாழ்க்கைக்கு உதவும்
வகையில் சமூகப் பாதுகாப்பு அளிக்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பன
உள்ளிட்ட கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக