வெள்ளி, 16 நவம்பர், 2012

நிலத்தடி நீர் மிகுதியும் சுரண்டப்படுவது சென்னையில்தான்

http://img.dinamalar.com/data/gallery/gallerye_015555586_586590.jpg








ஒட்டு மொத்த தமிழகத்திலும், சென்னையில் உள்ள நீர் நிலை படுகைகள் தான் அதிக சுரண்டலுக்கு ஆளாகியிருப்பதாக, மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.


ஆறு மாநிலங்களில் ஆய்வு:மத்திய நீர்வள துறையின் ஒரு அங்கமான மத்திய நிலத்தடி நீர் வாரியம் கடந்த மாதம் தமிழகம் - புதுவை, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சல் பிரதேசம், கேரளா, மேகாலயா ஆகிய ஆறு தென் மாநிலங்களின் நீர் நிலை படுகைகளை ஒட்டி, நிலத்தடி நீரின் தற்போதைய அளவு, நீரின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தியது.

அதில் சென்னை மாவட்டத்தின் நீர் நிலை படுகைகள் அதிகளவில் சுரண்டலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், வட சென்னையை தொடர்ந்து தென் சென்னையில் அடையாறு, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில், நிலத்தடி நீரில் கடல்நீரின் கலப்பு அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

"
நைட்ரேட்' அதிகரிப்பு: இந்த ஆய்வில் சென்னை நிலத்தடி நீரின் தரம் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: சென்னை நிலத்தடி நீர் அதிக சுரண்டலுக்கு உள்ளாகியுள்ளது. நிலத்தடி நீரில் "நைட்ரேட்' அளவு அதிகமாகியுள்ளது. ஒரு லிட்டர் நீரில் அனுமதிக்கப்பட்ட அளவான, 45 மி.கிராமை விட கூடுதலாக "நைட்ரேட்' உள்ளது.
நிலத்தடி நீரில் கடல் நீர் கலப்பது அதிகரித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, சென்னை மாவட்டம் குறித்து, மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வுகளிலும் இதே தகவல்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.எனினும், இந்த ஆய்வுகளுக்குப் பின் சென்னையில் உள்ள நீர் நிலை படுகைகளின் தரத்தை உயர்த்த அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.


சரி செய்ய முடியாது:கடந்த 2008 ம் ஆண்டு ஆய்வில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளான, திருவான்மியூர் மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளின் நில அமைப்பு, ஒன்றுடன் ஒன்று இணைந்துவிட கூடியதாக மாறி வருகிறது என, சுட்டி காட்டப்பட்டிருந்தது. கடல் நீர் அதிக அளவு, நிலத்தடி நீரில் கலந்து, நீரின் தரம், மண்ணின்தன்மை ஆகியவை, நிரந்தரமாக மாறினால் மீண்டும் அவற்றை சரி செய்ய இயலாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் முடிவிலும், வட சென்னை பகுதிகளான மீஞ்சூர், எண்ணூர், தென்சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர்பகுதிகளில், நிலத்தடி நீரில் கடல் நீர் கலப்பு அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்ன காரணம் :பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் முக்கிய நீர் படுகைகளான கூவம் ஆறு, அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் நேரடியாக கழிவு நீர் கலப்பதால், இந்த நீர் நிலை படுகைகளை சுற்றி நிலத்தடி நீரில் "நைட்ரேட் ' அளவு அதிகரித்திருக்கலாம். மேலும், கடல் நீர் உட்புகுந்து நிலவியல் மாறுகிறது என்றால், தண்ணீரின் ஓட்டம் மாறியிருக்கும். ஒரு பகுதியில் உள்ள நிலத்தடி நீர் முழுமையாக உறிஞ்சப்பட்டால், அந்த இடத்திற்கு கடல் நீர் வந்து சேரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வு நடந்தது எப்படி?:சென்னையில், 174 ச.கி.மீ., பரப்பளவில் 149 ச.கி.மீ., பரப்பளவு வண்டல் மண், 4 ச.கி.மீ., செந்நிற களிமண், மற்றும் மீதம் 24 ச.கி.மீ., பரப்பளவு "சார்னோகைட்'என்ற கடின பாறை நிலப்பரப்புடன் உள்ளது.இவற்றில் வட சென்னை மத்திய சென்னை பகுதிகளான பெரம்பூர், வில்லிவாக்கம், ஜார்ஜ் டவுன், அடையாறு, திருவான்மியூர் ஆகியவை வண்டல் மண் பகுதிகள். தென் சென்னையில் தான் அதிக பாறை பகுதிகள் உள்ளன. அதில், சைதாப்பேட்டை, தரமணி, கிண்டி, தாம்பரம் மற்றும், பரங்கி மலை ஆகிய பகுதிகள் பாறை பகுதிகள். சென்னையில் நிலத்தடி நீரை கண்காணிப்பதற்கான, 11 ஆழ்துளை கிணறுகள் மற்றும் "பீசோ' மீட்டர் எனப்படும் நிலத்தடி நீரை ஆய்வு செய்யும் கருவி பொருத்தப்பட்ட மூன்று கிணறுகள் என, மொத்தம் 14 கிணறுகள் உள்ளன. குடிநீர் வாரியம் இந்த, 14 கிணறுகளின் மூலமாக சென்னையில் உள்ள நிலத்தடி நீரின் அளவையும், நீரின் தரத்தையும் ஆய்வு செய்து மதிப்பிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக