வியாழன், 15 நவம்பர், 2012

"மக்களால் அங்கீகரிக்கப்படவேண்டும்!'

சொல்கிறார்கள்:
"மக்களால் அங்கீகரிக்கப்படவேண்டும்!' 

 சிலம்பாட்டத்தில் சிறந்து விளங்கும் முகமது இப்ராஹிம்: நான் இளங்கலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளேன். தற்போது, பி.எட்., படித்து வருகிறேன். ஐந்து வயதில், சிலம்பம் விளையாட கற்றுக் கொண்டேன், 12 வயதில், "கலை இளமணி' விருது பெற்றது, எனக்குப் பெரிய ஊக்கத்தை ஏற்படுத்தியது. சில, "டிவி' நிகழ்ச்சிகளிலும், என் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறேன்.தற்போது மிமிக்ரி, தப்பாட்டத்தில் பயிற்சி எடுத்து வருகிறேன். பள்ளி, கல்லூரிகளில், 400க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து, பரிசு பெற்றிருக்கிறேன். தேசிய அளவில், ஏழு தங்கப் பதக்கங்கள் வென்றிருக்கிறேன். சிலம்பம், நேரடி கம்புச் சண்டை, வாள் வீச்சு, சுருள் வீச்சு, கம்பு வீச்சு போன்ற விளயாட்டுகளில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், தங்கப் பதக்கங்கள், விருதுகள் வென்றிருக்கிறேன்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில், சிலம்பாட்டத்திற்கான, டிப்ளமோ படிப்பு முடித்துள்ளேன்.என் தந்தை அப்துல் மஜீத், டெய்லர் பணி செய்கிறார்; தாய் இல்லத்தரசி. வீட்டில், தகுந்த இடவசதி கூட கிடையாது. கஷ்டமான சூழ்நிலை என்றாலும், என் ஆர்வத்தையும், திறமையும் புரிந்து, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர் தந்தை. நான் வெளியில் நிகழ்ச்சி செய்யும் போது, கூடவே இருந்து, எல்லா உதவிகளும், ஏற்பாடுகளும் செய்வார்.சிலம்பம், வாள் வீச்சு போன்ற கலைகளை, யார் நிர்பந்தமும் இல்லாமல், நானாகவே விரும்பி கற்றேன். சிறுவனாக இருக்கும் போது, விளையாட்டாக பழக ஆரம்பித்தது, பின்னாளில் அதுவே, என்னை சாதனையாளனாக மாற்றியது. நான் செய்யும் சாதனைகளில், மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுத் தந்தது, புரூஸ்லீ தன் திரைப் படங்களில் பயன்படுத்திய சாகசங்களில் ஒன்றான, "நன்சாகூ'வை, இரு புறமும், தீயை எறிய விட்டு பல கோணங்களில் சுழற்றுவது தான். சிலம்பாட்டத்தில் இன்னும், பல சாதனைகள் புரிய வேண்டும். என் திறமை மக்களால், அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே, என் ஆசை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக