புதன், 20 அக்டோபர், 2010

நோபல் விஞ்ஞானியின் 100-வது பிறந்த நாள்

மனைவி லலிதாவுடன் நோபல் விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர் (கோப்புப் படம்).
புது தில்லி, அக். 19: தமிழகத்தைச் சேர்ந்த நோபல் விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகரின் 100-வது பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.  விண்மீன்கள் பற்றிய ஆய்விற்காக இவருக்கு 1983-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.  சி. சுப்பிரமணியன் ஐயர், சீதாலட்சுமி தம்பதிக்கு 1910 அக்டோபர் 19-ல் லாகூரில் பிறந்த அவர், சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார்.  கல்லூரி காலத்திலேயே பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து மேல்படிப்புக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பின்னர் 1937-ல் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.  1953-ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர், அமெரிக்காவிலேயே தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். "சந்திரசேகர் லிமிட்' என்றழைக்கப்படும் விண்மீன்களின் தோற்றம், அமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது நெருங்கிய உறவினர் சர்.சி.வி.ராமனுக்கு 1928-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. அவரைப் பின்பற்றி சந்திரசேகரும் இயற்பியல் துறையில் கால்பதித்து, நோபல் பரிசு (1983), கோப்லி விருது (1984), அறிவியலுக்கான தேசிய விருது (1967), பத்ம விபூஷண் (1968) உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றார். 1995 ஆகஸ்ட் 21-ம் தேதி தன்னுடைய 84-வது வயதில் அவர் காலமானார்.
கருத்துக்கள்

1953 இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஒருவருக்கு எதற்கு இந்தியா பல விருதுகளை அளித்துள்ளது? மணவிலக்கு பெற்றவள் பாராட்டு பெற்றால், முன்னாள் கணவன் பெருமை பேசி மகிழ மாட்டான். இந்தியக் குடியுரிமையைத் துறந்தவர்கள் எவ்வளவு பெரும் சாதனைகள் ஆற்றினாலும் இந்தியா விருதுகள் அளிக்கக் கூடாது.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/20/2010 4:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக