சென்னை, அக். 17: கலாசார சீரழிவைத் தடுக்க குழந்தைகளை ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு அழைத்து வரவேண்டும் என தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார். சென்னை கிருஷ்ண கான சபாவில் நவராத்திரியை முன்னிட்டு நடந்த மஹாபாரத சொற்பொழிவு சனிக்கிழமை நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றிய உபன்யாச சூடாமணி பி.சுந்தரகுமாரை பாராட்டி தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பேசியதாவது: சமுதாயத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நல்லதைக் கேட்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கூட தொலைக்காட்சிப் பெட்டி வந்த பின்னர் மறைந்து போய்விட்டது. குடும்பத்தில் எப்படியெல்லாம் பெண்கள் இருக்கக் கூடாது, எப்படியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது, எப்படியெல்லாம் மனிதன் வாழக்கூடாது என்பதையெல்லாம் முன்னிறுத்தும் கதாபாத்திரங்களின் அடிப்படையில் மெகா தொடர்கள் எடுக்கப்படுகின்றன. இந்தத் தொடர்களை பார்த்து மக்களின் மனம் பண்படுவதற்கு பதிலாக புண்பட்டு கிடக்கின்றதே என்று நினைக்கின்றபோது, நல்லதைக் கேட்பதற்காக நல்லவர்கள் சிலர் இந்த ஆன்மிக சொற்பொழிவுக்குக் கூடியுள்ளனர் என்பதைப் பார்க்கும்போது சமுதாயம் முற்றிலுமாக சீர்கெட்டுப் போய்விடவில்லை என்கிற நம்பிக்கை பிறக்கிறது. ஒரு அரசனுக்கு என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும், அவனுடைய ஆட்சி எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதுதான் விதுரநீதி. மகாபாரதத்தில், திருதராஷ்டிரனுக்கு விதுரன் உரைப்பதாக இந்தப் பகுதி அமைந்திருக்கிறது. இந்த விதுரநீதி பற்றிதான் இங்கே உபன்யாச சூடாமணி சுந்தரகுமார் சொற்பொழிவாற்றி முடித்திருக்கிறார். விதுரநீதியை முழுவதுமாக திருதராஷ்டிரன் கேட்டானே தவிர அதைப் பின்பற்றவில்லை என்பதுதான் மகாபாரதக் கதை. நமது அரசியல்வாதிகளை, அமைச்சர் பெருமக்களை, சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களை ஓரிடத்தில் கூட்டி விதுரநீதியை அவர்களுக்கு எடுத்துரைத்தால் என்ன என்று எனக்கு ஒரு விநாடி தோன்றியது. பிறகு இதைச் சொல்லி என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது என்கிற சலிப்புதான் வந்தது. அன்று திருதராஷ்டிரன் எப்படி விதுரனின் ஆலோசனைகளை சட்டை செய்யவில்லையோ அதுபோல இன்றும் இவர்கள் சட்டை செய்யப்போவதில்லை. மதமானாலும் சரி, ஜாதியானாலும் சரி, அவைகளெல்லாம் கேட்டு வாங்கக் கூடியவை அல்ல. யாரும் விரும்பிப் பெற்றதல்ல மதமும், ஜாதியும். இதில் உயர்வு } தாழ்வு இருக்க முடியாது. நான் இறையுணர்வு உடையவன். இறைவனின் படைப்பில் எதுவும் உயர்ந்ததாகவோ, தாழ்ந்ததாகவோ இருக்க முடியாது என்று திடமாக நம்புகிறவன். பிரிவுகள் இல்லாமல் எந்தவொரு சமுதாயமும் இயங்க முடியாது. இன்று நிர்வாகவியல் என்று சொல்கிறோமே அந்த நிர்வாகவியலுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமுதாயத்தில் முன்னுதாரணம் படைத்தவன் மனு. மனு தர்மத்தில் எனக்கு ஏற்பில்லாத விஷயம், அந்த தர்மம் பிறவியின் அடிப்படையில் அமைந்திருப்பது என்பதுதான். அதர்மத்தின் அடையாளமாகத் திகழ்பவர்கள் பிறவியின் பெயரால் உயர்ந்தவர்கள் என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ÷ உபன்யாசங்களை ஏன் கேட்க வேண்டும்? கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? நல்லவர்கள் சொல்லும் நல்லதைக் கேட்கும்போதும், அந்த நல்லதில் ஏதாவது ஒன்று நம் காதில் வந்து விழும்போதும் "நான்' என்ற அகம்பாவம் நீங்கி, எளிமை பிறக்கும். நம்முடைய கலாசாரம் அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்கு குழந்தைகளை தொலைக்காட்சி அடிமைகளாக மாற்றாமல் இதுபோன்ற ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு அழைத்து வரவேண்டும். அப்போதுதான் நல்லதொரு சமுதாயம் உருவாவதோடு, நாளைய தலைமுறையும் நன்றாக இருக்கும் என்றார்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiurvalluvan
10/19/2010 3:31:00 AM
10/19/2010 3:31:00 AM


By PA Valarmathi
10/18/2010 9:57:00 PM
10/18/2010 9:57:00 PM


By HMJ
10/18/2010 6:18:00 PM
10/18/2010 6:18:00 PM


By Tejwani
10/18/2010 3:42:00 PM
10/18/2010 3:42:00 PM


By S Raj
10/18/2010 2:11:00 PM
10/18/2010 2:11:00 PM


By ravichandiran.r
10/18/2010 1:54:00 PM
10/18/2010 1:54:00 PM


By Boodhi Dharma
10/18/2010 11:56:00 AM
10/18/2010 11:56:00 AM


By GERSHOM CHELLIAH
10/18/2010 8:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/18/2010 8:14:00 AM