சென்னை, அக்.20: அதிமுகவின் நிழலில் இருப்பதைப் போல் காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகள், நிச்சயமாக ஏமாறுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியது: ஜனநாயகத்தில் யாரும், எந்தப் பொருள் பற்றியும் பேசலாம்; எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களைப் பற்றியும் குறைகளைக் கூறலாம்; குற்றம்சாட்டலாம். அதுதான் ஜனநாயகம். இதை அண்ணா காலத்திலிருந்து தி.மு.க.வில் பின்பற்றி வருகிறோம். இந்த இயக்கத்துக்கு எத்தனையோ சோதனைகள் வந்ததுண்டு. அந்தச் சோதனைகளை எல்லாம் தாண்டி, வெற்றிகளை தி.மு.க. குவித்து வருகிறது. திராவிட இயக்கம் வேறு மாநிலங்களிலும் பரவ வேண்டும்; நம்முடைய கொள்கைகளைப் பிற மாநிலத்தவரும் உணர வேண்டும் என்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டியது மிக மிக முக்கியமானது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒற்றுமை வர வேண்டும்: தி.மு.க.வின் வெற்றிக்கு தடைபோட வேண்டும் என்று சில கட்சிகள், குறிப்பாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுக பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறது. அதற்கு நாம் இடம் தரக் கூடாது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மீதும், அமைச்சர்கள் மீதும், கட்சியினர் மீதும் சில குறைகள் சொல்லப்பட்டன. கொள்கைக்குப் புறம்பாக நடந்துகொண்டார் என்றோ, லட்சியத்திற்கு எதிராக நடந்துகொண்டார் என்றோ பெரிய குறைகள் எதுவும் சொல்லப்படவில்லை. எனக்கு ஒரேயொரு குறை உள்ளது. உங்களுக்குள்ளே இன்னும் முழுமையான ஒற்றுமை வர வேண்டும் என்பதுதான் அந்தக் குறை. அந்த ஒற்றுமை ஏற்பட்டு, அது நிலைத்துவிட்டால், ஆயிரம் அ.தி.மு.க.க்கள் வந்தாலும் நம்மை யாரும் வெல்ல முடியாது. இதை நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டும். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் பேச்சு, ஓர் கம்யூனிஸ்ட் இதழில் பெரிதாக வெளியிடப்பட்டுள்ளது. ஆதி திராவிடர், பழங்குடியின மக்களின் நிலங்களை ஜெயலலிதா அபகரித்துள்ளார் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்னிடம் மனு அளித்தனர். அவர்கள் நடத்தும் பத்திரிகையில் தான் மதுரை கூட்டம் தொடர்பாக பெரிதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே பெரிய கட்சி அ.தி.மு.க.தான் என்பதைப் போலவும், அதனுடைய நிழலிலே தாங்கள் இருப்பதைப் போலவும் கம்யூனிஸ்டுகள் காட்டிக்கொள்கிறார்கள். இதில் ஏமாறப்போகிறவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். நிச்சயமாக கம்யூனிஸ்டுகள்தான் ஏமாறுவார்கள். நாம் ஒற்றுமையோடும், வலிமையோடும், எந்தக் கணத்திலும் நிதானம் இழக்காமல், நேர்மையான முறையில் தி.மு.க.வுக்கு தொடர்ந்து தொண்டாற்ற வேண்டும். அவ்வாறு தொண்டாற்றினால், யாராலும் நம்மை அசைக்க முடியாது. இந்தக் கூட்டத்தில் ஒருவரை ஒருவர் குறை கூறிப் பேசியிருந்தால் அதை இந்த இடத்திலேயே மறந்துவிடவேண்டும். தி.மு.க.வில் நண்பர்களாக நீங்கள் சேர்ந்திருக்க வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி. தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், நிதியமைச்சருமான க.அன்பழகன், கட்சியின் பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் தலைமை நிலைய முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான ஆர்க்காடு வீராசாமி, தி.முக. தென்மண்டல அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க செயலாளரும் அமைச்சருமான சுப.தங்கவேலன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/21/2010 3:20:00 AM
10/21/2010 3:20:00 AM


By rajasji
10/21/2010 2:29:00 AM
10/21/2010 2:29:00 AM


By rajasji
10/21/2010 2:28:00 AM
10/21/2010 2:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *