தமிழகத்தின் பிரதானக் கட்சிகள் திருச்சியில் அண்மையில் அடுத்தடுத்து நடத்திய மூன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களின்போதும், கூட்டம் முடிந்த இரவுப் பொழுதுகளில் அந்தக் காட்சியைக் காண முடிந்தது. வெறிச்சோடிய காலி மைதானம், அதில் லட்சம் காலிக் கோப்பைகள், பல்லாயிரக்கணக்கான பொட்டலத் தாள்கள், போத்தல்கள், பாக்குத் தாள்கள், பாலிதீன் பைகள், அறுந்த செருப்புகள், நொறுக்கப்பட்ட கண்ணாடித் துகள்கள்... எதற்கான சாட்சிகள் இவை? அரசியல் கட்சிகளுக்கு இப்போதெல்லாம் ஒரு பெரிய பொதுக்கூட்டத்தை நடத்துவது என்பது ஒரு பெரிய காரியமாக இருப்பதில்லை. தொண்டர்களுக்கும் திரள்வதற்குப் பெரிய நோக்கங்கள் ஏதும் தேவைப்படுவதில்லை.பொதுக்கூட்டம் என்றால் வாகனங்கள், சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகள், ஒலிபெருக்கிகள், பிரியாணி பொட்டலங்கள், மது போத்தல்கள், பணத்தாள்கள், முழக்கங்கள். பரஸ்பர புரிதல்கள் எளிமையாக இருப்பதால், இந்தக் கூட்டங்கள் சுலபமாக முடிந்துவிடுகின்றன. ஆனால், கூட்டம் நடைபெறும் இடம் வெறும் உரைகளோடும் முழக்கங்களோடும் கைதட்டல்களோடும் மட்டும் முடிந்துவிடுவதில்லை. ஒரு கூட்டத்தில் லட்சம் பேர் கூடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சில மணி நேரங்களுக்குள் அந்தப் பகுதியில் எப்படியும் லட்சம் டீ, காபி விற்பனையாகிறது. பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் விற்பனையாகிறது. தின்பண்டங்கள் விற்பனையாகின்றன. சில ஆயிரம் சிகரெட்டுகளும் பீடிகளும் வெற்றிலைப் பாக்கு புகையிலைப் பொருள்களும், பான் பொருள்களும் விற்பனையாகின்றன. யாவும் அங்கேயே பயன்படுத்தப்படுகின்றன. யாவற்றின் எச்சங்களும் அங்கேயே உமிழப்படுகின்றன. ஒரு சின்ன நிலப்பரப்பு. முழுவதும் குப்பைகள், எச்சங்கள், எச்சில்... ஒரு சாதாரண பொதுக்கூட்டமானது சூழல் சார்ந்தும் சுகாதாரம் சார்ந்தும் எவ்வளவு மோசமான விஷயமாக மாறிவிடுகிறது? ஒரு பொதுக்கூட்டத்துக்கு அரசியல் கட்சியினர் எவ்வளவோ திட்டமிடுகிறார்கள். கட்சித் தலைவர்கள் ஊர்ஊராகச் செல்கிறார்கள். தெருத்தெருவாகக் கூடுகிறார்கள். ஆள்களைச் சேர்க்கிறார்கள். வாகனங்களைச் சேர்க்கிறார்கள். கூட்டம் நடைபெறும் இடத்தைக் கோட்டையாக்குகிறார்கள். மேடையை அரசவையாக அலங்கரிக்கிறார்கள். வரலாற்றுக் காலத்துக்குத் தம் தலைவர்களையும் தொண்டர்களையும் அழைத்துச் செல்ல எவ்வளவோ மெனக்கெடுகிறார்கள். ஆனால், லட்சம் பேர் கூடும் இடத்தில் ஒரு குப்பைத்தொட்டியைக்கூட காண முடிவதில்லையே ஏன்? குறைந்தபட்சம் அது தொடர்பான பிரக்ஞைகூட இன்னும் நம்மிடம் வரவில்லையே, ஏன்? உண்மையில் இது ஒரு வெளிப்பாடு. நம்முடைய அகம் வேறு; புறம் வேறு என்பதை அம்பலப்படுத்தும் வெளிப்பாடு. இந்தியர்கள் தன்னளவிலும் வீட்டளவிலும் மிகுந்த சுத்தமானவர்கள்தான். ஆனால், இந்தியர்களின் சுத்தம் ஏன் அவரவர் வீட்டு வாசலைத் தாண்டும்போது முகம் மாறிவிடுகிறது? இந்திய கிராமப்புறங்களிலுள்ள சின்ன தனியார் மருத்துவமனைகளாகட்டும், மாநகரங்களிலுள்ள பெரிய தனியார் மருத்துவமனைகளாகட்டும்; அவற்றில் காணப்படும் சுத்தத்தை கிராமப்புறங்களிலுள்ள சின்ன அரசு மருத்துவமனைகள், மாநகரங்களிலுள்ள பெரிய அரசு மருத்துவமனைகளில் காணப்படும் சுத்தத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய பின்னர், அங்கு பேணப்படும் பொது சுகாதாரம் குறித்து இந்தியர்கள் சொல்லிச் சொல்லி மாயும் கதைகளை அவர்கள் இங்கு நடந்துகொள்ளும் விதத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். உண்மையில் இந்தியாவில் சுத்தம் என்பது கிராமம் - நகரம் சார்ந்த விஷயம் அல்ல; ஏழை - பணக்காரர் சார்ந்த விஷயம் அல்ல; படித்தவர் - படிக்காதவர் சார்ந்த விஷயம் அல்ல; கவனிக்க யாருமற்ற சூழலில் - கட்டுப்படுத்த யாருமற்ற சூழலில் - பிறர் நலனைப் பொருள்படுத்தாமல் அசிங்கமாக நடந்துகொள்வதை நாம் ஒரு தேசிய ஒழுங்கீனமாக வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். நாம் நம் குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வியைக் கற்றுக் கொடுக்கிறோம். உயரிய தனி மனித ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறோம். எல்லாவிதமான கலைகளையும் கற்றுக் கொடுக்கிறோம். ஆனால், பொது இடத்தில் ஒரு நல்ல குடிமகனாக நடந்துகொள்ள ஏன் கற்றுக் கொடுப்பதில்லை? குறைந்தபட்சம் ஏன் அதுகுறித்து யோசிப்பதுகூட இல்லை? இந்திய குடிமைச் சமூகமானது பல்வேறு இனங்களையும் சேர்த்துக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதிலுள்ள எல்லா இனங்களுக்குமே தம்முடைய இனம் சார்ந்து மிக உயரிய மதிப்பீடுகள் இருக்கின்றன. நாம் எல்லோருமே நம்முடைய வரலாற்றைக் குறைந்தது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே தொடங்க விரும்புகிறோம்.வாய்ப்புக் கிடைத்தால் சிந்து சமவெளி நாகரிகத்தை மெசபடோமிய நாகரிகத்துக்கு முந்தைய காலகட்டத்துக்கோ எகிப்திய நாகரிகத்துக்கு முந்தைய காலகட்டத்துக்கோ நகர்த்திவிடும் சாமர்த்தியம் நமக்கு உண்டு. ஆனால், நாம் இன்று கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் இடத்துக்கேற்ற சுத்தம் எந்த நாகரிகத்தின் எச்சம்?
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 10/23/2010 4:42:00 AM
இப்படிப் பட்ட சிந்தனையாளர்கள்தான் நாட்டுக்கு தேவை.அரசியல் ஓநாய்கள் - மக்களை மதுப்பாடில்களுக்கும், பிரியானி பொட்டலங்களுக்கும் அடிமையாக்கி வைத்திருக்கும் நவீன நாகரீக காலத்தின் கோமாளிகள்- இதைப் படித்தாவது திருந்துவார்களா?

By அப்துல்லா, தலைமை இமாம், மேலப்பள்ளிவாசல், புனலூர்.
10/23/2010 8:54:00 PM
10/23/2010 8:54:00 PM


By Tamilian
10/23/2010 2:50:00 PM
10/23/2010 2:50:00 PM


By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 1:25:00 PM
10/23/2010 1:25:00 PM


By A.Kumar
10/23/2010 11:19:00 AM
10/23/2010 11:19:00 AM


By Ragu
10/23/2010 11:10:00 AM
10/23/2010 11:10:00 AM


By Vasantha Mani
10/23/2010 6:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்10/23/2010 6:23:00 AM