நியூயார்க், அக்.17: இந்தியாவின் புகழை தில்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டி குறைத்துவிட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் கூறினார். காமன்வெல்த் போட்டியில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று முதலில் குற்றச்சாட்டு கூறியவர் மணிசங்கர் ஐயர்தான். அதன் பின்னர் அதில் பல்வேறு புகார்கள் வரத் தொடங்கின. இருந்தபோதும் திட்டமிட்டபடி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்தேறின. இந்த நிலையில் காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார். இந்த நிலையில் நியூயார்க்கிலுள்ள மணிசங்கர் ஐயர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தில்லி விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிதியின் மூலம் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருக்கலாம். ஆனால் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியால் இந்தியாவின் புகழ் உயர்ந்துவிடவில்லை. நாட்டின் புகழ் குறைந்துவிட்டது.போட்டி நடந்தபோது பெரும்பாலான ஸ்டேடியங்களின் காலரிகள் காலியாகவே இருந்தன. காலியாக இருந்த இடங்களில், ஸ்டேடியங்களைக் கட்டிய தொழிலாளர்களின் குழந்தைகளை அமர வைத்துப் பார்த்திருக்கலாமே. ஆனால் செய்யவில்லை. நடுத்தரக் குடும்பத்தினர் மட்டுமே போட்டியைக் காண வந்தனர். ஆனாலும் அவர்களும் போதுமான எண்ணிக்கையில் வரவில்லை. |960 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம். இந்தத் தொகையை வேறு காரியத்துக்கு பயன்படுத்தியிருக்கலாம். கடந்த 63 வருடங்களில் எந்த ஒரு போட்டியும், இந்த அளவுக்கு இந்தியாவின் புகழைக் குறைத்திருக்குமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு நாட்டின் புகழை மங்கச் செய்துவிட்டது தில்லி போட்டி. |70 ஆயிரம் கோடியை செலவு செய்து கெட்ட பெயரைத் தேடிக் கொண்டோம். போட்டியில் 2-ம் இடத்தைப் பிடித்த போதிலும் உலக அளவில் இந்தியா விளையாட்டில் ஒரு முன்னணி நாடு என்பதை நிலைநிறுத்த நாம் தவறிவிட்டோம். விளையாட்டு வெற்றிகரமாக நடந்ததா? இல்லையா? என்பது முக்கியமல்ல. இந்த விளையாட்டுக்கு இவ்வளவு பெரிய தொகையை செலவழிக்க வேண்டுமா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். ஸ்டேடியங்களை கட்ட செலவு செய்வதை விட்டு விட்டு அந்தத் தொகையை தட கள வீரர்களின் பயிற்சிக்குப் பயன்படுத்தினால் நாட்டில் விளையாட்டின் தரம் உயரும். நாட்டிலுள்ள 95 சதவீத இளைஞர்கள், விளையாடுவதற்கு சரியான வசதிகள் இல்லை. அமைப்பு ரீதியான போட்டிகளில் பங்கேற்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்தியாவை ஒரு விளையாட்டு நாடாக மாற்றவேண்டுமே தவிர, விளையாட்டை நடத்தும் நாடாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. சீனாவும், தென் ஆப்பிரிக்காவும் சிறந்த விளையாட்டு நாடுகள் என்பதை நிரூபித்துவிட்டன. விளையாட்டில் சீன நாடு முன்னிலையில் இருக்கிறது. அங்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இருக்கின்றன. சீன வீரர், வீராங்கனைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன. விளையாட்டில் சிறந்து விளங்குவதால் அவர்கள் விளையாட்டுகளை நடத்துவதிலும் சிறந்து விளங்குகின்றனர். அதைப் போலவே சில மாதங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்க ஏராளமான நாடுகள் உதவின என்றார் அவர்.
கருத்துக்கள்
கூறுவது உண்மையாக இருந்தாலும் கூறிய இடம் தவறு. இவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/18/2010 2:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/18/2010 2:48:00 AM