வியாழன், 21 அக்டோபர், 2010

தமிழ் ஆய்வாளர்கள் வெளிநாடுகளில் ஆய்வு செய்ய உதவுங்கள்: முதல்வர் கருணாநிதி

புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலக அரங்கத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற தமிழாய்வு நிறுவனத்தின் ஆட
சென்னை, அக். 20: தமிழ் ஆய்வாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று செம்மொழி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உதவி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழ் விருதுகளுக்கான தேர்வுக்குழுக் கூட்டம்-ஆட்சி மன்றக் குழுக் கூட்டம், முதல்வர் கருணாநிதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தேர்வுக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் மா.நன்னன், ஞானபீட விருதாளர் ஜெயகாந்தன், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயர்கல்விப் பிரிவு இணைச் செயலாளர் டாக்டர் அனிதா பட்நாகர்ஜெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்தக் குழுவினர் விரிவாக ஆய்வு செய்து, தொல்காப்பியர் விருது, குறள்பீட விருது, இளம் தமிழறிஞர் விருது ஆகிய விருதுகளுக்கான அறிஞர்களின் பெயர்களைத் தேர்வு செய்தனர். இதன்பின், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆட்சி மன்றக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.செம்மொழித் தமிழாய்வு நூலகத்துக்கு, பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம் எனப் பெயர் மாற்றம் செய்ய ஆட்சி மன்றக் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி சிறப்புரை ஆற்றினார். அப்போது, வெளிநாட்டிலிருந்து ஆய்வாளர்கள் தமிழகம் வந்து செம்மொழி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும், தமிழகத்திலுள்ள ஆய்வாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று செம்மொழி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.மத்திய அரசு சார்பில் கலந்து கொண்ட மனிதவள மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளர் அனிதா பட்நாகர்ஜெயின், ""இந்தக் கோரிக்கையை மத்திய அரசு பரிவுடன் கவனித்து நடவடிக்கை எடுக்கும் என்றும், செம்மொழி நிறுவனத்தின் திட்டப் பணிகள் அனைத்துக்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்'' என்று உறுதி கூறினார்.பாலாறு இல்லம்: சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டதும், பாலாறு இல்லம் மீண்டும் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்படும்.   கோட்டையில் இயங்கி வரும் பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனப் பயன்பாட்டுக்குரிய வளாகமும் ஆண்டுக்கு பெயரளவு குத்தகைத் தொகையாக | 10-க்கு அனுமதிக்கப்படும் என்பன போன்ற முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன. இவற்றை முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
கருத்துக்கள்

1. முதலில் தென் ஆப்பிரிக்கா, மொரீசியசு முதலான நாடுகளில் உள்ளோர் வேண்டும் வகையில் அவர்கள் தமிழ் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2. கடந்த 3 ஆண்டுகளுக்கு அறிவித்த விருதுகளை உடனே உரியவர்களுக்குக் குடியரசுத் தலைவர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 3.அனைத்து ஆண்டுகளுக்கும் விருதுகள் ஆண்டுதோறும் தவறாமல் வழங்க வேண்டும். 4. கடந்த முறை விடுபட்டுப்போன விருதுகளை உடனே அறிவித்து வழங்க வேண்டும். 5. சமசுகிருதம், அரபி, பெர்சியன், பாலி, பிராகிருதம் முதலான மொழிகளுக்கு வழங்குவது போல் மூத்த அறிஞர்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுமையும் ஆண்டுதோறும் 50,000 தரும் விருதுகளையும் ஆண்டிற்கு 25 என்ற அளவில் உடனே வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/21/2010 3:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக