வெள்ளி, 22 அக்டோபர், 2010

ஜீவனாம்சம் கோர என்ன தகுதி வேண்டும்? - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


புதுதில்லி,அக்.21: கணவன் -மனைவி போல சேர்ந்து வாழ்ந்தோம் என்று கூறி, அதற்காக ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.தமிழ்நாட்டின் கோயமுத்தூரைச் சேர்ந்த டி. பச்சையம்மாள் என்பவர் டி. வேலுசாமி என்பவருடன் கணவன் - மனைவி போல வாழ்ந்ததாகவும், வேலுசாமி இப்போது தன்னைப் புறக்கணிப்பதால் தனக்கு மாதம்தோறும் ஜீவனாம்சம் தருமாறு அவருக்கு உத்தரவிடவேண்டும் என்றும் வழக்கு தொடுத்தார்.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, டி.எஸ். தாக்கூர் அடங்கிய பெஞ்ச் மனுவை விசாரித்தது.வீட்டுக்குள் நடக்கும் கொடுமைகளிலிருந்து பெண்களை அதிலும் குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களைப் பாதுகாக்கும் 2005-வது சட்டத்தின் அடிப்படையில் பச்சையம்மாள் வழக்கு தொடுத்திருந்தார்.பச்சையம்மாள் தனக்கு மனைவி அல்ல என்றும் லட்சுமி என்பவரே தன்னுடைய மனைவி என்றும் எதிர் வழக்காடிய வேலுசாமி வாதாடினார்.வார விடுமுறைகளில் சேர்ந்து வாழ்வதோ, வாரத்துக்கு ஒரு நாள் ஒரே வீட்டில் தங்கியிருப்பதோ, கணவன் - மனைவிக்கு இடையிலான தாம்பத்ய உறவுக்கு ஈடாகக் கருதப்பட மாட்டாது என்று கூறிய நீதிபதிகள் , கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கோரும் மனைவியர் 4 அம்சங்களைப் பூர்த்தி செய்தவர்களாக இருக்க வேண்டும் என்றனர்.1. ஒரு ஆணும் பெண்ணும் வாழ்க்கைத் துணைவர்கள் என்று சமூகம் ஏற்க வேண்டும்.2. இருவரும் திருமண வயதை எட்டியிருக்க வேண்டும்.3. இருவரும் திருமணம் செய்துகொள்வதற்கேற்ற தகுதிகளுடன் இருக்க வேண்டும்.4. இருவரும் விருப்பப்பட்டே சில காலம் ஒன்றாகத் தங்கியிருக்க வேண்டும்; அதன் மூலம் அவர்களை கணவன், மனைவியராக சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.இந்த நாலும் இல்லாமல் ஒரு ஆடவனின் அழைப்பை ஏற்று அவருடன் கூடி வாழ்ந்தோம் என்று கூறுவதையெல்லாம் ஏற்று அவர்களுக்கு ஜீவனாம்சம் தர உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் உறுதிபடத் தெரிவித்தனர்.இந்த வழக்கில் வேலுசாமி கூறுகிறார்போல அவருக்கு லட்சுமி என்ற முதல் மனைவி இருந்தாரா என்றும் விசாரிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துக்கள்

முரண்பாடான தீர்ப்பு. ஆண், பெண் இணைவைத் தவிர, திருமணத்திற்குரிய தகுதி என எதை உச்ச நீதிமன்றம் கருதுகிறது. விருப்பப்பட்டே சில காலம் ஒன்றாகத் தங்கியிருக்க வேண்டும் என்றால் விருப்பப்படுவது போல் நடித்துச் சேர்ந்திருந்து பின் கை கழுவுவோரை எப்பட்டியலில் சேர்ப்பது? இன்றைய சமூகத்தில் யார் யார் சேரந்து வாழ்கிறார்கள் எனப் பார்த்து ஏற்பு வழங்குவது வேலையல்ல. திருமண நம்பிக்கையில் சேர்ந்துவாழ்ந்து பின்னர் ஏமாற்றப்படுவோருக்கு வாழ்ககைப் படிச் செலவு உதவுவது தவறல்ல. நீதிபதிகள் எதையும் ஆராய்ந்து தீர்ப்பு வழங்குதல் வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/22/2010 5:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக