செவ்வாய், 19 அக்டோபர், 2010

இலங்கைத் தமிழர் உரிமை பெற விரைந்து நடவடிக்கை: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை, அக். 18: இலங்கைத் தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  சென்னை விமான நிலையத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து அவரிடம் கடிதம் ஒன்றை அளித்தேன். அதில், இலங்கையில் இன்னமும் முகாம்களில் இருந்து வரும் 30 ஆயிரம் தமிழர்களையும் உடனடியாக அவரவர் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், போரினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் விரைவில் மறுவாழ்வு அளிக்க இலங்கை அரசை பயன்தரத்தக்க முறையில் வலியுறுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தேன்.  மேலும், தாமதமின்றி அரசியல் தீர்வுக்கான செயல்முறையைத் தொடங்க இலங்கை அரசு வற்புறுத்தப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தேன். அதுகுறித்து உடனடியாக கவனிப்பதாக சோனியா காந்தி என்னிடம் உறுதி அளித்தார்கள்.  இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெறுவதற்கு அரசியல் தீர்வு ஒன்றுதான் நிரந்தரத் தீர்வாக அமைந்திட முடியும் என்று, இன்று நேற்றல்ல; நீண்ட நெடுங்காலமாகவே திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  கடந்த 1956-ம் ஆண்டு சிதம்பரத்தில் நடந்த திமுக பொதுக்குழுவில், இலங்கைத் தமிழர்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்த நாள் முதல் தொடர்ச்சியாக அவர்களது நல்வாழ்வு மற்றும் உரிமைகளுக்காக உரியவர்களிடத்தில் பல்வேறு வழிமுறைகளில் வலியுறுத்தி வருகிறோம்.  இந்திய நாட்டின் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்னையில் நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகள், எடுத்து வரும் நடவடிக்கைகள் எண்ணற்றவை. தமிழீழ ஆதரவாளர்கள் (டெúஸô) என்ற அமைப்பை உருவாக்கி, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய அமைப்பின் தலைவர்களையெல்லாம் மதுரைக்கு அழைத்து வந்து நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் முன்னிலையில், சகோதர யுத்தம் கூடாது என கடந்த 1986-ம் ஆண்டு வேண்டுகோள் விடுத்தோம்.  அந்த வேண்டுகோள் முழுமையாக-மனப்பூர்வமாக அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டிருக்குமானால் வரலாறு வேறுவகையான வடிவத்தைப் பெற்றிருக்கும்.  ஆனால், சகோதர யுத்தத்தின் காரணமாக, இலங்கையில் நடைபெற்ற சோகமயமான நிகழ்ச்சிகள், அவற்றினால் இலங்கைத் தமிழர்கள் பட்ட-இன்னமும் பட்டுக் கொண்டிருக்கும் துன்ப, துயரங்களை சரித்திரம் நிச்சயமாக மறக்காது; மன்னிக்கவும் செய்யாது.  இந்தியப் பேரரசுக்கு பொறுப்பு: இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதால் நம்மைக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும். ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கிறோம்.  உலகில் எங்கு இனப் படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும், உரிமையும் கொண்ட இந்தப் பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்களாட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும் போது அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டுதான் இலங்கையில் சீரழியும்-செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என கண்ணீர் மல்கக் கேட்கிறோம் என தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எத்தகைய தீர்வு வேண்டுமென்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ""இன்னமும் தமிழர்களிடையே ஒற்றுமை ஏற்படவில்லையே'' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச போன்றோர் காரணம் சொல்லிக் கொண்டிருப்பது கவைக்குவதவாத வாதமாகவே இருக்கிறது.  அந்த வீண் வாதங்களையும், பிடிவாதங்களையும் விட்டுவிட்டு, இலங்கையில் தமிழர்கள், இனியாவது உரிமை பெற்ற தமிழர்களாக வாழ்வதற்கு, இலங்கை அரசு உறுதியளித்து, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தாய்த் தமிழகம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கியவாறு இருக்கிறது.  இந்த ஏக்கத்தைப் போக்க வேண்டிய கடமை இந்திய பேரரசுக்கு இருக்கிறது என்பதை நினைவூட்டி அந்த கடமையை காலத்தே நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துவதாக முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

1. கொத்தடிமை முகாம்களில் வதைபடும் தமிழர்களின் எண்ணிக்கையை 30,000 எனக் குறைத்துச் சொல்வது சிங்கள கொடுங்கோல் அரசிற்குச் செய்யும் உதவி அல்லவா? 2. மடல்கள் எழுதியே துயரங்களைக் களைய இயலும் என உண்மையிலேயே நம்பித்தான் முதல்வர் எழுதித் தள்ளுகிறாரா? அல்லது கையறு நிலையில் நம்மால் முடிந்த இப்பணியையாவது செய்வோம் என எழுதிவருகின்றாரா? 3. ஏதோ இங்கே உடன்பிறப்புப் போரும் உட்பகையும் இல்லாதன என்பது போல் ஈழத்தின் துரோகத்திற்குக் காரணமே தமிழக அரசியல்வாதிகள் என்பதை மறைத்து எத்தனைக் காலத்திற்குத்தான் ஒரே பழியையே கூறலாம் என எண்ணுகின்றார். 4. கொத்துக் குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் மக்களினத்தையும் பிற உயிரினத்தையும் அளித்துத் தமிழ் மண்ணை நாசமாக்கிய கொடுங்குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டியதை வலியுறுத்தி ஏன் ஒன்றுமே பேசுவதில்லை அல்லது எழுதுவதில்லை? 5. அரசியல் கூட்டணி மாறலாம் என்பதால் எழுதப்படும் மடல் என எண்ணம் வராத வகையில் உணர்வுபூர்வமான நடவடிக்கை எப்பொழுது எடுக்கப்படும்? 
வேதனையில் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiurvalluvan
10/19/2010 3:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக