"இலங்கைத் தூதரகம் இனி சென்னையில் செயல்படக் கூடாது!"- கடலூர் சிறை வாசலில்
இருந்து வெளிப்பட்ட வைகோ கர்ஜிக்க... நெல்லையில் நடந்த ஒரு திருமண வீட்டில், "இதுவே இன்றைய தமிழன் செய்து முடிக்க வேண்டிய முழு முதல் காரியம் என்று சபதமேற்போம்!" என 83 வயதைக் கடந்த இலக்கிய கர்த்தா தி.க.சி. வழிமொழிந்து வரவேற்க... விவகாரம் அதை நோக்கியே போய்க்கொண்டு இருக்கிறது.
இந்தச் சூழலில் நடந்தது வைகோவுடனான சந்திப்பு...
"இலங்கைத் தூதரகத்தை இழுத்து மூடுவோம் என்று அறிவித்துப் போராட்டங்களை முன்னெடுப்பது ஏன்?"
"குண்டுகள் வீசிக் கொன்றவர்கள் போக, மிச்சம் இருக்கும் தமிழனையும் பட்டினி போட்டு, மருந்துகள் தராமல் சிறுகச் சிறுகச் சாகடிக்கும் காரியத்தைச் சிங்களவன் செய்துவருகிறான். இது உலக நாடுகளின் உள் மனசாட்சிக்கு இப்போதுதான் உறைத்திருக்கிறது. ஐ.நா. சபை, மூவர் குழுவை அமைத்துத் தனது விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. அவர்கள் விசாரிக்கப்போகிறார்கள். அதற்குள், ஐ.நா. செயலாளர் பான் கீ மூனை அவமானப்படுத்தும் வகையில், 'பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் மாமா' என்று இழிவுபடுத்தி கொழும்பு நகரில் ஊர்வலம் போகிறான் சிங்களவன். ஐ.நா. அலுவலகத்தை அடித்து உடைக்கிறான். உலகம் அங்கீ கரித்த ஒரு சபையின் அலுவலகத்தையே செயல்பட விடாமல் முடக்க முடியுமானால், இப்படி ஒரு ரௌடித்தனமான நாட்டின் தூதரகம் நம் தாய் பூமியில் எதற்கு இருக்க வேண்டும் என்று தமிழன் கேட்கக் கூடாதா?
பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்த இனபாதக இஸ்ரேல் நாட்டின் தூதரகம் பல நாடுகளில் இல்லை. இந்தியாவிலும் இடம் தராமல் தடுத்துதான் வைத்திருந் தார்கள். அதன் பிறகு, சிறப்பு அனுமதியுடன் கொடுத் தார்கள். இஸ்ரேலின் கொடுமையைவிட 200 மடங்கு கொடுமையானது அல்லவா இலங்கையின் இன வாதம்! அப்படிப்பட்ட நாட்டின் தூதரகம் இங்கு இருக்கக் கூடாது. அது அகற்றப்பட வேண்டும். அகற்றப்பட்டே தீரும்!"
"இலங்கைக்கு எதிராக இந்தியா இப்படியரு நிலைப்பாடு எடுக்கும் என்று நினைக்கிறீர்களா?"
"இந்திய அரசாங்கம் இதைச் செய்யும் என்று எதிர்பார்த்து இப்படியரு கோரிக்கையை வைக்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தங்களின் போராட்டங்களின் மூலம் இதை வென்று காட்டுவார்கள். அங்கிருந்து 20 கல் தொலைவில் இருக்கும் இந்த 7 கோடித் தமிழ் மக்கள்தான் இந்தப் போராட்டத்தின் பலம். இன்று நாம் கையறு நிலையில் இருக்கலாம். ஆனால், தமிழனுக்கு என்று நாடு அமைத்துத் தர வேண்டிய கடமை நமக்கு உண்டு என்பதை ஒருபோதும் மறக்க மாட்டோம். தூதரகத்தை இங்கிருந்து அகற்றுவதில் இருந்தே அது தொடங்கட்டும்!"
"இலங்கையில் போர்க் குற்றங்கள் ஏராளமாக நடந்திருக்கிறது என்பதை உலகின் பல நாடுகள் ஏற்றுக் கொண்டு இருக்கின்றன. ஆனால், இந்தியா இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லையே?"
"தமிழர்கள் படுகொலையை இந்தியா கண்டிக்கவில்லை என்பது மட்டுமல்ல; ஐ.நா. சபை அலுவலகம் தாக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானம் ஐ.நா-வில் வந்தபோது எதிர்த்த ஒரே நாடு இந்தியாதான். இலங்கைக்குப் பொருளாதாரத் தடையை ஐரோப்பிய யூனியன் விதிக்கும்போது, குறைந்த வட்டிக்குப் பணம் தரும் நாடும் இந்தியாதான். இலங்கையை அரசியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் முட்டுக்கொடுக்கும் காரியத்தை இந்தியா செய்கிறது. அந்தத் திமிரில்தான் இலங்கை ஆடுகிறது.
98-ம் ஆண்டு பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, இலங்கைக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 'விலைக்குக்கூட ஆயுதங்களை விற்க மாட்டோம்' என்று நெஞ்சுரத்தோடு சொன்னார் வாஜ்பாய். ஆனால், 2004-ல் ஆட்சிக்கு வந்த மன்மோகன் சிங் - சோனியா காந்தியின் தூண்டுதலின் பேரில், அனைத்து உதவிகளையும் இலவசமாகவே செய்தார். புலிகளைக் கொன்றொழிக்க நினைத்தது ராஜபக்ஷேவின் திட்டம் மட்டுமல்ல; சோனியாவின் விருப்பமும்தான். இதற்காக கருணாநிதிக்கு பதவிகளைத் தூக்கிக் கொடுத்து வாயடைத்தார் சோனியா. தமிழனின் மூச்சை இப்படித்தான் நிறுத்தினார்கள்.
இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்கப்பட்டால், தாங்கள் இதுவரை அவர்களுக்குச் செய்த உதவிகள் வெளிச்சத்துக்கு வரும் என்று மன்மோகன் சிங் பயப்படுகிறார். அதனால் மௌனம் சாதிக்கிறார். கருணாநிதிக்கும் உள் மனதில் பிரபாகரன் என்றாலே பிடிக்காது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ்ச் சமூகத்தில் தன்னிகரற்ற தனிப் பெரும் தலைவனாக வீரத்திலும், தீரத்திலும், ஒழுக்கத்திலும் மெச்சப்படும் ஒரே தலைவனாக மதிக்கப்படும் பிரபாகரனை அவருக்கு எப்படிப் பிடிக்கும்? தமிழகத்தில் வெடித்துக் கிளம்பிய இன உணர்வுத் தீயை தடுக்கும் காரியத்தைக் கச்சிதமாகச் செய்து முடித்தார் கருணாநிதி. இந்தப் பழியும் பாவமும் இவருக்குக் காலமெல்லாம் நிற்கும்!"
"அரசியல் தீர்வுக்கான ஆலோசனையைத் தாருங்கள் என்று முதல்வர் கருணாநிதியிடம் பிரதமர் வேண்டுகோள் வைத்துள்ளாரே?"
"என்ன செய்யலாம் என்று இப்போது கருணாநிதியைக் கேட்கும் மன்மோகன் சிங், இலங்கைக்கு ஆயுத உதவி செய்யும்போது கேட்டாரா? ரேடார் தரும்போது கேட்டாரா? இப்போது மட்டும் ஏன் கருத்தும் ஆலோசனையும் கேட்கிறாராம்?
சிறப்புப் பிரதிநிதியை அனுப்பிக் கண்காணிக்க வேண்டும் என்று கருணாநிதி யோசனை சொல்லியிருக்கிறார். இதுவரை அனுப்பப்பட்ட பிரணாப் முகர்ஜி, எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் போன்றவர்கள் கொழும்பு ஹோட்டலில் விருந்து சாப்பிட்டதைத் தவிர, தமிழனுக்கு என்ன செய்தார்கள்? யாரிடம் இருந்து எதிர்பார்க்கிறார்களாம் அரசியல் தீர்வை? இவையெல்லாமே வெறும் நாடகங்கள்!
உலகின் எல்லாப் பகுதிகளிலும் யுத்தம் நடந்திருக்கிறது. போராளிகள், பொதுமக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், செத்த பின்பும் ஒரு மனிதனை அவமானப்படுத்தும் காரியங்கள் இலங்கையைத் தவிர எங்கும் நடந்தது இல்லை. அனுராதபுரம் தாக்குதலில் இறந்த 21 புலிப் படை வீரர்களின் உடலை நிர்வாணமாக்கி, ஊர் ஊராக வேனில் எடுத்துச் சென்று கொக்கரித்துக் காட்டினார்கள். புலிப் படை பெண் பிள்ளைகளின் உயிரற்ற சடலங்களுடன் வன் புணர்ச்சி செய்தார்கள். அடுக்கிவைக்கப்பட்ட பிணங்கள் மீது புல்டோசர் ஏற்றி நசுக்கிச் சகதிபோல ஆக்கினார்கள். இது எந்த நாட்டிலுமே நடந்திராத கொடுமை. நர மாமிசம் சாப்பிடும் கொடிய கூட்டம் அது. அது அரசியல் தீர்வுக்கு ஒருபோதும் உடன்படாது!"
"ஈழத் தமிழர் குறித்து தொடர்ந்து நீங்கள் பேசி வருகிறீர்கள். ஒரு வெளிநாட்டுப் பிரச்னையை இங்கு தொடர்ந்து பேசத் தடை விதிக்கச் சட்டம் கொண்டுவரப்போவதாக அமைச்சர் துரைமுருகன் சொல்லியிருக்கிறாரே?"
"மந்திரி தெனாலிராமன் சொல்ல வேண்டாம். செய்யட் டும். இந்தப் பூச்சாண்டிக்குப் பயப்படும் கத்துக்குட்டிகள் அல்ல நாங்கள். உங்களது சட்டமும் திட்டமும் ஜார்கண்டிலும் சத்தீஸ்கரிலும் என்ன ஆனது? சூடத்தைக் கொளுத்துவதுபோலத் தன் உடம்பைக் கொளுத்தி 17 பேர் செத்துப்போன பூமியப்பா இது. வெறும் சட்டத்தைப் பார்த்தா பயந்து போவோம்?
சென்னை வீதியில் திருநாவுக்கரசு என்ற தலித் இளைஞனைச் சுட்டுக் கொன்ற டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்து கொண்டுவாருங்கள், உங்களுக்குத் துணிச்சல் இருந்தால்!
இந்திய எல்லைக்குள் வந்து அப்பாவித் தமிழ் மீனவனைச் சுட்டுக் கொல்லும் சிங்களக் கடற்படைக்கு எதிராக யுத்தம் செய்யுங்கள், உங்களிடம் தைரியம் இருக்குமானால்! அதைஎல்லாம் விட்டுவிட்டு வாய்ப்பூட்டுச் சட்டம் போடுவேன் என்று பட்டம் விட வேண்டாம். எதிர்க் காற்று எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கும்!"
"சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளதே..?"
"தேசத்தின் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படும் அளவுக்கு என்ன பேசிவிட்டார் சீமான்..? தமிழனைக் கொன்றுகொண்டே இருக்கிறானே சிங்களவன் என்ற ஆத்திரத்தில், ஆதங்கத்தில், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டினால் அது தவறா? 'எரி மலை வெடிக்கும்' என்று கருணாநிதியே எத்தனையோ கூட்டங்களில் பேசியிருக்கிறார்! எரிமலை வெடித்தால் லட்சம் பேர் சாவார்கள். சாவுக்கு கருணாநிதிதான் காரணம் என்று வழக்குப்போட முடியுமா? சீமானும் அப்படித்தான் பேசியிருக்கிறார். நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்தக் காரியத்தையாவது செய்தாரா... இல்லையே? அதையும் மீறி கைது செய்யக் காரணம், ஈழத் தமிழனைப்பற்றி யார் பேசி னாலும் கருணாநிதிக்கு ஆத்திரம் வருகிறது.
பழ.கருப்பையா கட்டுரைகள் எழுதினார். தாங்க முடியவில்லை. ஆள் வைத்து அடிக்கிறார்கள். இந்த நாட்டை இப்போது மினி எமர்ஜென்சி மிரட்டிக்கொண்டு இருக்கிறது.
'அதிகாரம், ஊழலை உருவாக்கும். அதீத அதிகாரம், அதிக ஊழலை உருவாக்கும்' என்றான் ஐவர் ஜெனிக்ஸ். அதீத அதிகாரமும் அதீத ஊழலும் இன்று அடக்குமுறையை உற்பத்தி செய்துள்ளது. விளம்பர வெளிச்சங் களின் மூலம் அடக்குமுறை சம்பவங்களை மறைத்துவிடலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். தமிழ் மக்களுக்கு எல்லாம் தெரியும். நாங்கள்தான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம் என்று பிரசாரம் செய்த காங்கிரஸ் கட்சியையே 1952-ல் தோற்கடித்தது, சென்னை ராஜதானி! தோற்கப்போவதை உள்ளூர உணர்ந்ததால்தான் அதிகமான அடக்குமுறைகளை கருணாநிதி அமல்படுத்தி வருகிறார்!"
"ஆனால், 'முரசொலி' உங்களைப் பாராட்டி அடிக்கடி எழுதுகிறதே?"
"எங்கே இருக்கிறது ம.தி.மு.க. என்று கேட்ட முரசொலியில், முல்லைப்பெரியாறு பிரச்னைக்காக நாங்கள் நடத்திய மறியலுக்குக் கூடிய கூட்டத்தைப் பாராட்டியும் எழுதப்பட்டுள்ளது. அவர்களையே அறியாமல் உண்மையை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதையும்கூட அவர்கள் ஏதோ ஓர் அரசியல் உள்நோக்கத்தோடுதான் எழுதியிருக்கிறார்கள்.
கருணாநிதி மீது தனிப்பட்ட காழ்ப்பு உணர்ச்சிகொண்டு நான் அரசியல் நடத்தவில்லை. அருந் தமிழ் நாட்டையும் அண்ணா வளர்த்த கட்சியையும் தன்னுடைய சுயநலத்துக்காகக் கெடுத்துக் குட்டிச்சுவராக ஆக்கிவிட்டார் கருணாநிதி என்பதைத் தவிர, அவர்மீது எனக்கென்ன தனிப்பட்ட கோபம்?
ஆனால், நாங்கள் அ.தி.மு.க-வுடன் நல்ல நேச உணர்வுடன் இருக்கிறோம். அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எங்களுக்கு உரிய மரியாதை வழங்குகிறார். நாங்கள் வலுவான தோழமையு டன் இருக்கிறோம். எங்களுக்குள் நெருடல் இல்லை!"
"காங்கிரஸ் கூட்டணியையே ஜெயலலிதா அதிகம் விரும்புவதாகச் சொல்கிறார்களே? கோவை கூட்டத்தில் மத்திய அரசை அவர் அதிகம் கண்டிக்கவில்லையே?"
"ஒரே நேரத்தில் இரண்டு முனைகள் நோக்கித் தாக்குதல் நடத்துவது சரியான போர்த் தந்திரம் அல்ல என்று அவர் நினைத்திருக்கலாம். எனவே, கருணாநிதியை மட்டும் தாக்கி இருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரையில், ஈழத் தமிழர் இனப் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டிய கடமை தமிழ்நாட்டுத் தமிழர் அனைவருக்கும் உண்டு."
"அ.தி.மு.க. அணியில் விஜயகாந்த் இணைவாரா?"
"கூட்டணியில் யாரை இணைக்க வேண்டும் என்பது, அ.தி.மு.க. தலைமை எடுக்க வேண்டிய முடிவு"
- ரகசியம் காக்கிறார் வைகோ!
அனைவருக்கும்
வணக்கம்.
முன்பு அரசர்கள், மாதம் மும்மாரி பொழிகிறதா எனக் கேட்டதைப் பலரும் நகைச்சுவையாகவே எணணுகிறார்கள். மழை ஒவ்வோர் இடத்தில ஒவ்வோர் அளவு பெய்யும்; பெய்யாமலும் இருக்கும்.இப்பொழுது வானிலை அறிக்கை போல் மழை பெய்த அளவு கூறப்படுகிறதே ஏன்? தலை நகரிலே உள்ளவர்களுக்கு நாட்டின் நிலைமை தெரிய வேண்டும் என்பதற்காகவே. அது போல்தான் அக்காலத்தில் மக்கள் வறட்சியின்றி வாழ்கிறார்களா? நீர் நிலைகள் நிரம்பியுள்ளனவா? வேளாண்மை சிறக்க உள்ளதா? என்பன போன்று அறிவதற்காக இக்கேள்வியைக் கேட்டு்ளளனர். அப்பொழுதுதான் நாட்டு நிலைமை உள்ளபடியாக அவையோர்க்குத் தெரியும் வாய்ப்பு ஏற்படும்.இப்படியொரு கேள்வியின் பொழுதுதான் புலவர ஒருவர் மன்னரிடம் நாடு வறண்டு இருக்கும் பொழுது வரி சுமையாக அமைவதைச் சுட்டிக்காட்டிப் பாட அதனைக் கேட்ட மன்னர் வரியைத் தள்ளுபடி செய்துள்ளார்.மற்றொரு புலவரோ நீர் நிலைகளைப் பெருக்க அறிவுரை கூற அதன்படி மன்னரும் நீர்நிலைகளைப் பெருக்கியுள்ளார். ஆனால், இதனைப் புரிந்து கொள்ளாமல் நாடக உரையாடல் மூலம் வேடிக்கையாகப் பலர் எண்ணுவதுபோல் வைக்கோவும் கருதி வி்ட்டார். அல்லது தெரிந்தே அவ்வாறு கூறிவிட்டாரா என்றும் தெரியவில்லை. இருப்பினும் நாட்டு மக்கள் நிலை பற்றி ஆள்வோருக்கு இருக்கும் ஈடுபட்டை விளக்கும் வினாவை இனி யாரும் தவறாக விளக்க வேண்டா.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக