சென்னை, ஜூலை 18: தமிழ்வழிக் கல்வி கற்றவர்களை பட்டியலிட தனி மென்பொருளைப் பயன்படுத்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசாணை முறைப்படி வந்ததும் அந்த பணிகள் முடுக்கிவிடப்படும் என்று தெரிகிறது. கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், "தமிழில்படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட, உரிய சட்டம் தமிழக அரசின் சார்பில் இயற்றப்படும்' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். இது குறித்த அரசாணை எந்த நேரமும் வெளியாகலாம் என்ற நிலையில் அடுத்த கட்டப் பணியில் ஈடுபட்டுள்ளது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.61 லட்சம் பேர் பதிவு: கடந்த ஏப்ரல் 2010 வரை தமிழகத்தில் 61 லட்சத்து 45 ஆயிரத்து 483 பேர் தங்களது கல்வித் தகுதிகளைப் பதிவு செய்து அரசு வேலையை எதிர்பார்த்து உள்ளனர். இவர்களில் 28 லட்சத்து 43 ஆயிரத்து 605 பேர் பெண்கள். ஆனால் இவர்களில் தமிழ் வழியில் கல்வி கற்றவர்கள், ஆங்கில வழியில் கல்வி கற்றவர்கள் என தனித்தனியாக பிரித்து பதிவு செய்யவில்லை. செம்மொழி மாநாட்டு அறிவிப்பால் இதற்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. எனென்றால் அரசு வேலைக்கு ஆள்களைத் தேர்வு செய்யும் போது தமிழ் வழியில் கல்வி கற்றவர்களின் பதிவு மூப்பு விவரம் குறித்து அரசு கேட்டால், அதை வழங்க வேண்டியது வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பணி. ஆனால் தமிழ் வழியில் கல்வி கற்றவர்களை தனியாக பிரிப்பது தனி மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும். ÷இதுதவிர தமிழ் வழிக் கல்வி கற்றவர்களையும் தனியாக இனம் காணும் வகையில் சிறப்பு முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு நடத்தினால் அந்த முகாம்களை எங்கெங்கு நடத்தலாம், மாவட்டங்கள் தோறும் எத்தனை மையங்களில் நடத்தலாம் என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
கருத்துக்கள்
படிப்புச் சான்றிதழ் எதிலும் தமிழ்வழியாகப் படித்தது பற்றிய குறிப்பு இருக்காது. அவ்வாறிருக்க கணியம் (மென்பொருள்) வழி அறிவது என்னும் முயற்சி தேவையற்ற கேலிக் கூத்தாகும். சிறப்பு முகாம்கள் மூலமும் புதிய பதிவிற்கு வாய்ப்பளிப்பதன் மூலமும் தமிழ்வழியாகப் பயின்றவர்களைக் கண்டறியலாம். அனைத்திலும் முதன்மையானது எந்தத்தடையாணையும் குறுக்கே வராத வகையில் விரைவில் அரசாணை பிறப்பிப்பதாகும். இல்லாவிடில் பொய்யான புள்ளிவிவரத்திற்கு உதவும் ஆரவாரப் பேச்சாகத்தான் தமிழில் படித்தவர்க்கான முன்னுரிமை என்பது அமையும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/19/2010 5:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/19/2010 5:44:00 AM