திங்கள், 19 ஜூலை, 2010

அழகிரியின் மொழிப் பிரச்னை: தீர்வு கண்டார் மக்களவைத் தலைவர்


புது தில்லி, ஜூலை 18: மத்திய உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரியின் மொழிப் பிரச்னைக்கு மக்களவைத் தலைவர் மீரா குமார் தீர்வு கண்டார்.÷நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய உரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளித்து வருகிறார். ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ பேச வராததால் தனக்குப் பதிலாக கேள்விகளுக்கு இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளிக்க மத்திய அமைச்சர் அழகிரி ஒப்புதல் அளித்திருந்தார்.÷இதனால் அவை நடைபெறும் நாட்களில் அவைக்கு மு.க.அழகிரி வருவதில்லை. இதுதொடர்பாக கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவையில் பிரச்னை எழுப்பிப் பேசினார். மத்திய அமைச்சர் மு.க. அழகிரியை அவையில் பார்க்கவே முடிவதில்லை. தொடர்ந்து அவர் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.÷நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கும்,பதில் அளிப்பதற்கும் அனுமதிக்கவேண்டும் என்று மக்களவைத் தலைவர் மீரா குமாரை அழகிரி கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அழகிரி தன்னை வந்து சந்திக்குமாறு மக்களவைத் தலைவர் மீராகுமார் கேட்டுக் கொண்டார். ஆனால் மீரா குமாரை, அழகிரி சந்தித்துப் பேசவில்லை என்று கூறப்படுகிறது.÷இந்த நிலையில் மத்திய அமைச்சரின் மொழிப் பிரச்னைக்கு மீரா குமார் தீர்வு கண்டுள்ளார். இதன்மூலம் மக்களவைக் கூட்டத் தொடரில் மு.க.அழகிரி பங்கேற்க முடியும் என்று மக்களவைத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த ஏற்பாட்டின்படி உறுப்பினர்களின் பிரதான கேள்விக்கு மட்டும் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருப்பதை மு.க.அழகிரி படித்து பதில் அளிக்கலாம். அதன் பின்னர் உறுப்பினர்களின் துணைக் கேள்விகளுக்கு இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதில் அளிப்பார்.÷மக்களவைத் தலைவர் மீரா குமார் எடுத்துள்ள இந்த முடிவு பயன்தரும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.÷வரும் 26-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் துவங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரின்போது மீரா குமார் செய்துள்ள புதிய ஏற்பாட்டின்போது மு.க.அழகிரி அவையில் பங்கேற்று பதில் அளிப்பார் என்று தெரியவந்துள்ளது.
கருத்துக்கள்


இப்பொழுதும் உள்ள நடைமுறைதான் இது. புதிய தீர்வல்ல. தமிழில் விடையிறுக்க வாய்ப்புகளை ஏற்படுத்துவதே உண்மையான தீர்வாகும். உண்மையான தீர்வை வழங்க அமைச்சர் போராட வேண்டும். அவரது கோரிக்கையைத் தனிப்பட்ட கோரிக்கையாக எண்ணாமல் அனைவரும் இணைந்து குரல் கொடுத்து வெற்றி காண வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/19/2010 5:24:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக