புதன், 21 ஜூலை, 2010


இந்தியாவை விட்டால் வேறு வழியில்லை: இலங்கை தமிழ் எம்.பி.க்கள்

First Published : 21 Jul 2010 12:59:25 AM IST

Last Updated : 21 Jul 2010 03:52:36 AM IST

சென்னை, ஜூலை 20: இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியாவை விட்டால் வேறு வழியில்லை என்று இலங்கை தமிழ் எம்.பி.க்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், விநாயகமூர்த்தி ஆகிய 6 தமிழ் எம்.பி.க்கள் ஜூலை 9-ம் தேதி முதல் 5 நாள்கள் புது தில்லியில் முகாமிட்டு இந்தியத் தலைவர்களை சந்தித்துப் பேசினர். பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, எஸ்.எம்.கிருஷ்ணா, ப.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோரை தமிழ் எம்.பி.க்கள் சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து விவாதித்தனர். புது தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பிய தமிழ் எம்.பி.க்கள், மீண்டும் சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் இலங்கையின் இப்போதைய நிலவரம் குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் "தினமணி'க்கு அளித்த பேட்டி: இலங்கையில் இன்னும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேற முடியாமல், ராணுவத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். அடியோடு இடிந்து சிதிலமான வீடுகளைப் புதுப்பித்து தர இலங்கை அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இந்திய அரசு அளித்த நிதியில், குடில் அமைக்கத் தேவையான 10 தகரம், 3 மூட்டை சிமெண்ட் மட்டும் தமிழ் மக்களுக்கு அளிக்கப்படுகிறது. எனவே தமிழ் மக்கள் பலரும் இப்போது வீதிகளிலும், மர நிழல்களிலும் வசிக்கும் அவல நிலை வடக்குப் பகுதியில் உள்ளது.தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு எந்த உதவியும் செய்யாத இலங்கை அரசு, தமிழர்களின் சொந்த மண்ணில் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.இப்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் 1 லட்சம் சிங்கள ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அங்கேயே குடும்பத்துடன் குடியமர்த்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4 லட்சம் சிங்களவர்களை வடக்குப் பகுதியில் குடியமர்த்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.தமிழர்களின் விவசாய நிலங்களைப் பிடுங்கி, சிங்களவர்களிடம் கொடுக்கும் அவலமும் நடைபெறுகிறது. மொத்தத்தில் இப்போது முழுமையான தமிழர் பூமியாக உள்ள இலங்கையின் வடக்குப் பகுதியை, இன்னும் பத்தாண்டுகளுக்குள் சிங்கள மக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.தமிழ் மக்களின் மண்ணைப் பாதுகாப்பதுதான் இப்போது அவசரத் தேவையாக உள்ளது. எனவே, போரின்போது இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் அனைவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தவும், தமிழ் மக்களின் வீடு, விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் இந்திய அரசு தலையிடுவது மிக அவசியமாக உள்ளது. இலங்கைத் தமிழர்களின் பிரச்னை குறித்து பல வெளிநாட்டு தூதுவர்கள், தலைவர்களிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். அவர்கள் அனைவருமே, இந்தப் பிரச்னையில் இந்திய அரசு என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது என்ற கேள்வியையே கேட்கின்றனர். இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்க சர்வதேச சமுதாயம் தயாராக உள்ளது. எனவே, இலங்கையில் தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் சுதந்திரமாக வசிக்கவும், தமிழ் மக்கள் விரும்பக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படவும் இந்திய அரசு மனது வைத்தால் மட்டுமே முடியும். இலங்கை இனப் பிரச்னை தீர இந்திய அரசை விட்டால் வேறு வழியில்லை. இந்திய அரசால் மட்டுமே இலங்கை அரசை வற்புறுத்தி ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தித் தர முடியும். இதைத்தான் எங்கள் பயணத்தின்போது இந்தியத்  தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். இலங்கை தமிழ் மக்களை இந்திய அரசு கைவிடாது என்றும், மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் இணைந்து செயல்பட்டு, தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்தியத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். இதைத்தான் நாங்கள் தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் வலியுறுத்தினோம். மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவரும் உறுதியளித்துள்ளார். தமிழகத்துக்கு முக்கிய பங்கு: எனினும், தமிழக அரசு மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், தமிழக மக்கள் என தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் அரசியல் மாறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, ஒற்றுமையாக, ஒருமித்த குரலில் வலியுறுத்தினால் மட்டுமே அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளை இந்திய அரசு விரைவுபடுத்தும். ஆறு கோடி தமிழர்கள் ஒருமித்து குரல் கொடுத்தால், மத்திய அரசு அதைப் புறக்கணித்து விடாது.இப்போது முதல்வர் கருணாநிதியை சந்தித்துள்ள நாங்கள், விரைவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளோம் என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
கருத்துக்கள்

கொலைப்பணியில் ஈடுபடுவதை இந்தியாநிறுத்த தமிழ்நாடு அழுத்தம் கொடுக்கும் என்னும் நப்பாசையில் வருகின்றார்கள். சிங்களத்திற்கு ஆதரவான நிலை என்பது இந்தியப் பாதுகாப்பிற்குக் கேடானது எனத் தெரிந்தும் அவர்கள் பக்கம் இருக்கின்றது. எனினும் இந்தியா மனம் மாறும் என்னும் நம்பிக்கையில் இவ்வாறு கூறுகிறார்கள். நன்னம்பிக்கையின் அடிப்படையில் கூறவில்லை. வேறுவழியின்றி இவ்வாறு கூறுகிறார்கள். எனவே,இந்தியாவை நம்பஇயலாவிடிலும்,தமிழக மக்கள் ஒருமித்த குரலில் அதன் போக்கை மாற்ற வலியுறுத்தினால் இந்தியம் மாறலாம்.அவ்வாறு இல்லாவிடில் இந்தியம் மாறும் வரை தமிழகம் ஒன்றுபடவேண்டும். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/21/2010 1:20:00 PM
தினமலர் வாசகர்கள் என்ற பெயரில் கலைஞரை திட்டியே கருத்து வருகிறதே நாங்கள் கூறூம் நியாயமான கருத்துக்களை ஏன் போடமாட்டேன் என்கிறீர்கள் உங்கள் கருத்தை வாசகர்கருத்தாக போடுகிறீர்கள் இப்பொழுதெல்லாம் தினமலர் பத்திரிக்கையை பார்ப்பனபத்திரிக்கை என்று தாழ்த்தபட்ட,மிகவும் பிற்படுத்தபட்ட மக்கள் படிப்பதே இல்லை இதே நிலை நீடித்தால் பார்ப்பன எதிர்ப்பு போராட்டம் நடத்தவேண்டியிருக்கும்
By vadukanathan
7/21/2010 12:22:00 PM
yes you are right, we always strong
By raghupathy
7/21/2010 10:47:00 AM
இலங்கை எம்.பி குழு சொல்வது மிக சரியான வழி. இங்கே உள்ள அரசியல் அனாதைகள் வைகோ , நெடுமாறன் , சீமான் ஆகியோர் சுயநலத்துக்காக குரைப்பதை நிறுத்த வேண்டும் .
By Inam
7/21/2010 6:45:00 AM
ராஜீவ்-ஜெயவர்தனே ஒப்பந்தம் அமல் செய்யப்பட்டாலே போதுமானது. அதனை இந்தியா வலியுறுத்த வேண்டும்.
By நாடோடி
7/21/2010 6:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக