ஞாயிறு, 18 ஜூலை, 2010

சீமான் கைதுக்கு வைகோ, நெடுமாறன் கண்டனம்


சென்னை, ஜூலை 17: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தமிழ்நாட்டில் அடக்குமுறை திமுக அரசால் ஏற்பட்டுள்ளது. நெஞ்சை நடுங்கவைக்கும் வகையில் ஈழத்தமிழர்கள் படுகொலைகள் செய்யப்பட்டதால் நியாயமாக தமிழர்கள் மனதில் எழுகின்ற ஆவேச உணர்ச்சி, முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்யக் காரணமாயிற்று.
 அதே உணர்ச்சி வேகத்தில் தான் சிங்கள அரசுக்கு எச்சரிக்கை செய்யும் நோக்கத்தில், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர், இயக்குநர் சீமான் உரை நிகழ்த்தினார். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் குரல் எழுவதையேத் தடுக்கவும் தமிழ் ஈழ ஆதரவாளர்களை மிரட்டி ஒடுக்கவும் திட்டமிட்டு இயக்குநர் சீமான் மீது தேசிய  பாதுகாப்புச் சட்டத்தை முதல்வர் கருணாநிதி அமல்படுத்தி உள்ளார்.
சென்னையிலே ஒரு தலித் இளைஞரை சுட்டுக் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, இந்தியப் பிரதமரோடு கரம் குலுக்கி மத்திய அரசின் விருந்தாளியாக உலா வரமுடிகிறது. ஆனால், ஈழத் தமிழர்களுக்காக பேசினால் கருணாநிதி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துகிறார். சர்வாதிகாரப் போக்கில் ஆட்சி நடத்தும் திமுக அரசு, சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய அடக்குமுறையின் மூலம் எங்கள் ஈழ ஆதரவுக் குரலை ஒருபோதும் அடக்க முடியாது. அது மேலும் மேலும் வீறுகொண்டு எழும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் குரல் கொடுத்தமைக்காக அவரை மிகக் கொடுமையான சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருப்பது ஜனநாயக விரோதப் போக்காகும். ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஆதரவாகப் போராடுபவர்களை மிரட்டி ஒடுக்குவதற்காக சீமான் பழி வாங்கப்பட்டிருக்கிறார்.
கருணாநிதியின் இந்தக் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை. எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஆதரவானப் போராட்டங்கள் தொடரும். நிலைமை முற்றுவதற்குள் சீமானை விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்


காவல்துறையினர் கழக அரசைக் கவிழ்க்கத் திட்டமிட்டுள்ளார்கள் போலும். சிங்களர்களின் பாதுகாப்பு குறித்துக் கேள்வி கேட்டதற்கே சிறைத்தண்டனை எனில், தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்ற்வர்களுக்கும் இனப்படுகொலைகளைத் தொடருபவர்களுக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதுடன் படுகொலை செய்பவர்களுக்கும் உதவி உறுதுணையாக இருப்பவர்களுக்கும் வாய்மூடி உடந்தையாக இருப்பவர்களுக்கும் என்ன தண்டனை வழங்குவது என்று அறிவித்தால் நன்று. விரைவில் சீமான் விடுதலையாகித் தம் தமிழ்நலப் பணியைத் தொடர வாழ்த்துகள். தமிழ்நாட்டில் தமிழர் நிலை குறித்து வருந்தும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2010 7:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக