புதன், 21 ஜூலை, 2010

சூடான் அதிபர் அல் பஷீர் 'இனப்படுகொலை குற்றவாளி' தீர்ப்பு : பீதியில் மகிந்� PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 

on 20-07-2010 20:08  
Favoured : None
Imageராஜபக்ஷேவின் போர்க் குற்றங்களை விசாரிக்க மூவர் அடங்கிய குழுவை ஐ.நா. அமைக்க, பயமும் சினமும் கொண்ட சிங்களர்கள் கொழும்பில் ஐ.நா. அலுவலகத்தை சூறையாடி தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில்தான், ஐ.நா.வின் ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்’ கொடுத்திருக்கும் மகத்தான தீர்ப்பு மனித நேயர்கள் அத்தனை பேருக்கும் ஆறுதலும் தெம்பும் அளிக்கும் மாமருந்தாக அமைந்துள்ளது.
‘‘சூடான் நாட்டின் அதிபரான ஓமர் அல் பஷீர் மீது அரபு அல்லாத பழங்குடி கறுப்பின மக்களைக் கூட்டமாக கொலை செய்தல், உடல், மன ரீதியாக சித்ரவதைப் படுத்துதல், அவர்களை அழித்தொழிக்க தீர்மானமான உள்நோக்கத்தோடு செயல்படுதல், படையினர் மூலம் பெரும் அளவிலான கற்பழிப்புகள் நடத்துதல் ஆகிய குற்றங்கள் உறுதி செய்யப்படுகின்றன.

Imageஎனவே இந்த சர்வதேச குற்றவியல் அறவியல் நீதிமன்றம், சூடான் நாட்டின் அதிபர் ஓமர் அல்பஷீரை இனப் படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கிறது. அவருக்கு எதிரான கைது வாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது. விரைவில் அவர் இந்த நீதிமன்றக் கூண்டிலேற்றப்படவேண்டும். சூடான் அதிபர் அரசு முறைப்பயணமாக பல நாடுகளுக்கு இன்னும் சென்று வருகிறார். இந்த நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள நாடுகள்... தங்கள் நாட்டுக்கு அல் பஷீர் வந்தால் அவரைப் பிடித்து கோர்ட்டில் ஒப்படைக்கலாம்’’ இவ்வாறு ஜூலை 12&ம் தேதி நெத்தியடித் தீர்ப்பளித்துள்ளது நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்திருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம். உலகிலேயே பதவியில் இருக்கும் ஒரு நாட்டின் அதிபர் இனப் படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்படுவது இது இரண்டாவது முறை. முதல் முறையாக போர்க் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பதவியில் இருக்கும் அதிபரும் அல் பஷீர்தான். 2009&ல் அவர் மீதான முதல் கைது வாரன்ட்டை பிறப்பித்தது சர்வதேச நீதிமன்றம். இந்த செய்தியைக் கேட்டு மிரண்டுபோன ஓமர் அல் பஷீர் தனது பயத்தை மறைத்துக் கொண்டு... ‘இந்தத் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. டார்பரில் மீண்டும் ரத்த ஆறு ஓடும்’ என்று ஆத்திரத்தில் அலறிக் கொட்டியிருக்கிறார். அவருக்கு ஆதரவாக... ஆப்ரிக்க கூட்டமைப்பு, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும் இந்த இனப் படுகொலைக்கு சப்பைக்கட்டு கட்டி வருகின்றன.

‘சர்வதேச நீதிமன்றம் ஆப்ரிக்காவை பயமுறுத்தப் பார்க்கிறது. அல் பஷீர் மீதான விசாரணையை நிதானப்படுத்த வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் ஆப்ரிக்க நாடுகள் விலகிக் கொள்ளவும் தயங்கமாட்டோம்’ என அறிவித்திருக்கிறது ஆப்ரிக்கன் யூனியன்.

யார் இந்த அல் பஷீர்? ‘ஆப்ரிக்க ராஜபக்ஷே’வாக அவர் ஆனது எப்படி?

சன்னி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த அல் பஷீர், 1989&ம் ஆண்டு சூடான் ராணுவத்தில் பிரிகேடியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது தனக்கு ஆதரவான ராணுவ அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்-கொண்டு... பிரதம மந்திரி அல் மஹதியை பதவியிலிருந்து விரட்டிவிட்டு தானே பிரதமமந்திரி ஆனார். அடுத்த 4 வருடங்களில் அதாவது 1993&ல் சூடானின் அதிபராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட பஷீர்... இஸ்லாத் ஷரியத் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தினார். அடிப்படையில் அரபு இன வெறியரான அல் பஷீர், சூடானில் பெரும்பான்மையாக வசித்த அரபு அல்லாத பழங்குடியின மக்களை இயல்பாகவே வெறுக்கத் தொடங்கினார். சூடானின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள டார்பர் பிரதேசத்தில் ஃபர், மசாலியேட், சஹாவா என மூன்று பெரும் பழங்குடியின கறுப்பர்கள் வாழ்ந்துவந்தனர். கறுப்பர்கள் பூர்வகுடிகளாக வாழ்ந்த இங்கே, 13&ம் நூற்றாண்டு வாக்கில் அரபு இன மக்கள் வந்தே றிகளாக குடியேறுகிறார்கள்.

ஆனால், காலப் போக்கில் வந்தேறியவர்கள் பூர்வகுடிகளை அடிமைப்படுத்தும் அவலம் இங்கேயும் அரங்கேறத் தொடங்கியது. அரபு அல்லாத கறுப்பின மக்களை கூண்டோடு அழிப்பது என முடிவெடுத்தார் அல் பஷீர். அதன்படி அவர்களை சமூக, பொருளாதார ரீதியாக புறக்கணிக்க... சுயாட்சி உரிமை கோரி போராட ஆரம்பித்தனர்.

சூடான் விடுதலை இயக்கம் உருவாகி அல் பஷீரின் அடக்குமுறைக்கு எதிராக போராட ஆரம்பிக்க... திமிர்ப் பிடித்த அல் பஷீர் தனது அரசின் படை, அரபு இனக்குழுக்களின் படை ஆகியவற்றின் உதவியுடன் 5 ஆண்டுகளில் சுமார் 4 லட்சம் கறுப்பின மக்களை கொன்று குவித்தார். பசியும் பட்டினியுமாய் இன்றும் சுமார் 3 லட்சம் கறுப்பின மக்கள் அல் பஷீரின் கட்டுப்பாட்டில் சித்ரவதை முகாம்களில் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றனர். பலர் பல ஆப்ரிக்க நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். அல் பஷீரின் படைகளால் கற்பழிக்கப்பட்ட பெண்கள் ஏராளமானோர்.

இயல்பாகவே 90-களில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதியான பின்லேடனுக்கு சூடான் ஆதரவு கொடுத்ததால்... சூடான் அதிபர் அல் பஷீரின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க ஆரம்பித்தது அமெரிக்கா. அதனால்தான் ஐ.நா.வின் சர்வதேச கோர்ட்டுக்கு சூடானை கொண்டுவர முடிந்தது.

அதேநேரம்... அர்ஜென்டினாவைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞரான லூயிஸ் மெரினோ ஒகாம்போவின் தீவிர முயற்சியால் கடந்த வருடமே போர்க் குற்றவாளியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார் அல் பஷீர். ஆனால், அப்போது இனப்படுகொலைக்கான குற்றவாளியாக அறிவிக்க மறுத்தது கோர்ட். தளராத ஒகாம்போ இதை எதிர்த்து வலுவான ஆதாரங்களுடன் அப்பீல் செய்ய... இப்போது சூடான், இனப்படுகொலைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
Image

இந்தத் தீர்ப்பை அடுத்து அமெரிக்காவின் பாதுகாப்புத்-துறைக்கான பேச்சாளர் பி.ஜே. க்ரௌவ்லி, ‘சூடான் அதிபரான அல் பஷீர் உடனே சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் சரணடையவேண்டும். தன் மீதான இனப்-படுகொலை குற்றச்-சாட்டை எதிர்கொள்ள வேண்டும்’ என எச்சரித்துள்ளார். ஆனால் தனக்கு ஆதரவாக சில நாடுகள் இருப்பதால் அல் பஷீர் உள்ளே பயந்தாலும் வெளியே கொக்கரிக்கிறார்.

இனப் படுகொலை நடத்தியது, அதன் சாட்சியங்களை மறைக்க முழுதாக முயற்சித்தது, ஐ.நா.வை மிரட்டியது, இனப்படுகொலை நிகழ்த்திய கையோடு ‘முறைகேடான தேர்தல்’ நடத்தி மீண்டும் அதிபரானது என பல வகைகளிலும்... சிங்கள அதிபர் ராஜபக்ஷேவோடு ஒத்துப் போகிறார் அல் பஷீர்.

மேலும், நாடு கடந்த தமிழீழ அரசுக்கு, சூடான் விடுதலை இயக்கமும் ஆதரவு தெரிவித்திருக்கிறது. அந்த இயக்கத்தின் போராட்டத்தின் பலனாக சூடானில் தனிநாடு உரிமைக் கோரிக்கைக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கப்பட்டு 2011 ஜனவரி மாதத்தில் வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

இதற்கிடையில்... சீனா, ரஷ்யா, ஆப்ரிக்க யூனியனின் எதிர்ப்பை மீறி அல் பஷீருக்கு தண்டனை வழங்கப்படுமா என்பதும் கேள்விக் குறியாக உள்ளது. சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்துக்கு போலீஸோ, ராணுவமோ இல்லை என்றாலும்... அமெரிக்காவின் தலையீட்டால், கூடிய விரைவில் அல் பஷீர் இனப்படுகொலைக் குற்றவாளிக்கான தண்டனையைப் பெறுவார் என மனித உரிமைகளை மதிக்கும் பல்வேறு நாடுகள் எதிர்பார்க்கின்றன.

அப்படி நடக்காவிட்டாலும் உலகின் முதல் இனப்படு-கொலை குற்றவாளி என பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சூடானுக்கு உலக அரங்கிலும், உள்நாட்டிலும் ஏகப்பட்ட நெருக்கடிகள் காத்திருக்கின்றன.

இந்நிலையில் இலங்கைப் பிரச்னைப் பற்றி பேசியுள்ள வழக்கறிஞர் ஒகாம்போ, ‘‘சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் இலங்கை உறுப்புநாடு இல்லை. சூடானும் உறுப்பு நாடாக இல்லாதபோதும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரைத்ததால் நான் இதில் பங்கேற்றேன்’’ என கூறயுள்ளார்.

எனவே... ஒகாம்போ போன்ற மனித உரிமை ஆர்வலர்களின் உதவி-யோடு விரைவில் ராஜபக்ஷேவும் சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படவேண்டும் என்று தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளனர் உலகத் தமிழர்கள். அதனால் ஐ.நா. அமைத்துள்ள போர்க்குற்ற விசாரிப்புக் குழுவிடம் ராஜபக்ஷேவின் போர்க்குற்ற ஆவணங்களை ஒப்படைத்து வருகின்றனர்.

‘‘இன்று அல் பஷீர் போல நாளை ராஜபக்ஷேவும் சர்வதேச நீதிமன்றத்தால் இனப்படுகொலை குற்றவாளியாக அறிவிக்கப்படும் வரை ஓயப்போவதில்லை. சூடான் விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை அதற்கு சற்றும் குறையாத இலங்கை விஷயத்திலும் மேற்கொள்ள வலியுறுத்துவோம்’’ என்கிறார்கள் அவர்கள். இந்நிலையில், ஐ.நா. அமைத்த போர்க்குற்ற விசாரணைக் குழுவை எதிர்த்து உண்ணாவிரதமிருந்த அமைச்சர் விமல் வீரவம்சவுக்கு அமெரிக்க, ஐரோப்பிய யூனியனின் கண்டனங்கள் குவிந்ததும், உண்ணாவிரதத்தை இளநீர் கொடுத்து முடித்து வைத்திருக்கிறார் ராஜபக்ஷே. இதில் ஐ.நா. ‘டபுள் கேம்’ ஆடுவதாக புகார்கள் எழுந்தாலும்... ராஜபக்ஷேவுக்கு போர்க் குற்ற ஜுரம் அதிமாகிக் கொண்டே வருகிறது என்பதுதான் உண்மை!

நன்றி : தமிழக அரசியல்
Last update : 20-07-2010 20:14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக