தமிழ் மணக்கும் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக முன்புற தோற்றம்.
கும்மிடிப்பூண்டி, ஜூலை 23: கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ் மொழி மீதான பற்றை வளர்க்கும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்குவதற்கு முன்பே கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் தினம் ஒரு திருக்குறளும், வழக்கு மொழியில் நாம் பேசும் ஆங்கில சொல்லுக்கு உரிய தமிழ்ச் சொல்லும் தினமும் எழுதப்பட்டு வந்தது. இது அந்த அலுவலகத்துக்கு வரும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்ற சமயத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மேல் தமிழ் வாழ்க என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவு வாயில் சுவரில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இலச்சினையான திருவள்ளுவர் சிலை வரையப்பட்டு தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் கருப்பொருளான "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருக்குறள் எழுதப்பட்டது.மேலும் தமிழைச் செம்மொழி என்று முதல்முதலில் அறிவித்த பரிதிமாற் கலைஞர் என்றழைக்கப்படும் சூரிய நாராயண சாஸ்திரியின் படமும் வட்டார வளர்ச்சி அலுவலக முன்வாயில் சுவரில் வரையப்பட்டுள்ளது.தற்போது சில நாள்களாக கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக தகவல் பலகையில் பேச்சு வழக்கில் நாம் பேசும் வடமொழி சொல்லுக்கு உரிய தமிழ்ச் சொற்கள் எழுதப்பட்டு வருகின்றன.இத்தகைய செயல்பாடுகள் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வரும் தமிழ் ஆர்வலர்களையும், பொதுமக்களையும் பெரிதும் மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. இது குறித்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வே.ஏழுமலையை கேட்ட போது, "நம் தாய்மொழியான தமிழை உலகச் செம்மொழியாக உயர்த்திக் காட்டியுள்ள தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை நிலைநாட்டும் வகையில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது' என்றார்."கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் உள்பட எந்த கூட்டம் நடைபெற்றாலும் திருக்குறள் விளக்கவுரையோடு தான் ஆரம்பிக்கப்படும். அதே போல வட்டார வளர்ச்சி அலுவலத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கோப்புகளிலும், வருகை மற்றும் சம்பளப் பதிவேட்டில் தமிழில்தான் கையொப்பமிட உத்தரவிடப்பட்டுள்ளது' எனவும் தெரிவித்தார்.
கருத்துக்கள்
பாராட்டுகள். அலுவலகக் கோப்புகளிலும் தமிழிலேயே எழுதுக. மக்கள் பயன்படுத்தும் அனைத்துப் படிவங்களையும் தமிழில் தருக. கணிணியிலும் தமிழே பயன்படுத்துக. ஒப்பந்தங்கள், பணப்பட்டிகள்,கையொப்பங்கள் என அனைத்திலும் தமிழே இருக்கட்டும். நீங்கள் மாறினாலும் அலுவலகம் தமிழ்ப் பயன்பாட்டை மாற்றாமல் இருக்கட்டும். கட்டுப்பாட்டிலுள்ள ஊராட்சி அலுவலகங்களிலும் தமிழைப் பயன்படுத்தச் செய்க.
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvnar Thiruvalluvan
7/24/2010 2:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 7/24/2010 2:51:00 AM