செவ்வாய், 20 ஜூலை, 2010

தலையங்கம்: அடையாளங்களால் ஆவதுதான் என்ன?


"தமிழனுக்குத் தமிழின் அருமை பெருமைகளும் தெரியாது; சக தமிழனின் சாதனைகளைப் பாராட்டவும் மனம் வராது'' என்கிற கூற்றை மெய்ப்பிப்பதுபோல ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அமெரிக்க டாலருக்கு என்கிற அடையாளம் இருப்பதுபோல, ஜப்பானில் "யென்' நாணயத்துக்கு அடையாளம் இருப்பதுபோல, பிரிட்டனில் பவுண்ட் ஸ்டெர்லிங்கிற்கு இருப்பதுபோல, இப்போது இந்திய ரூபாய்க்கும் என்கிற அடையாளம் தரப்பட்டிருக்கிறது.
 ரூபாய்க்கான இந்த அடையாளத்தை உருவாக்கி இருப்பது, விழுப்புரத்தைச் சேர்ந்த டி. உதயகுமார் என்கிற இளைஞர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலை  (பி. ஆர்க்.) படித்து, இப்போது மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) முனைவர் பட்டம் பெற்றவர். ரிஷிவந்தியம் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன்.
இதுபோல, வேறு ஏதாவது மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பெருமைக்குரிய சாதனை செய்திருந்தால், அது அந்த மொழிப் பத்திரிகைகளில் முதல்பக்கச் செய்தியாகி இருக்கும். அத்தனை தொலைக்காட்சிச் சேனல்களும் இதைப் பற்றியும், சாதனையாளர் பற்றியும் மணிக்கணக்காகப் பாராட்டுமழை பொழிந்திருக்கும். ஆனால் தமிழகத்தில், சினிமாக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், எப்போதாவது விளையாட்டு வீரர்களுக்கும் மட்டுமே இந்த முக்கியத்துவம் தரப்படுகிறதே, ஏன் இந்த அவலம்?
உதயகுமாரின் சாதனைக்குப் பின்னே இருக்கும் அவரது மொழிப்பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரது முனைவர்பட்ட ஆய்வே, தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி ஓலைச்சுவடிகளிலிருந்து இப்போதைய நிலைமைவரை எப்படி மாற்றம் கண்டிருக்கிறது என்பதுதான். கையால் எழுதப்பட்ட ஓலைச்சுவடி முறைக்கும், அச்சுக் கோப்பு எழுத்தாகி இருக்கும் முறைக்கும் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்திருக்கும் உதயகுமார், தமிழ் எழுத்து முறைகளில் சரியான வடிவக்கலை ஆய்வுகள் இல்லை என்கிற குறையைப் போக்கி இருக்கிறார்.
எழுத்து வடிவமைப்புக் கலையில் ஆர்வமுள்ள உதயகுமார், தான் உருவாக்கி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ரூபாய்க்கான அடையாளச் சின்னம், தேவநாகரியை அடிப்படையாகக் கொண்டது என்றும், இந்தியாவில் முக்கால்வாசிப் பேர் தேவநாகரி சார்ந்த மொழிகளைப் பேசுவதால் அதன் அடிப்படையில் இந்த அடையாளச் சின்னத்தை உருவாக்கியதாகவும் கூறியிருக்கிறார். தமிழன் சாதனை புரிந்திருக்கிறான், அதை முதல்பக்கச் செய்தியாக்காமல் விட்ட குறையைத் தலையங்கம் தீட்டியாவது பிராயச்சித்தம் தேடிக் கொள்ள வேண்டாமா? உதயகுமாரின் சாதனைக்கு வாழ்த்துகள்.
அதேசமயம், இந்திய அரசின் இந்த முயற்சியால் என்னதான் பயன் என்று யோசிக்கும்போது, எதுவும் சொல்லத் தோன்றவில்லை. உலகிலுள்ள பல நாணயங்கள், அடையாளம் இல்லாமல்தான் இருக்கின்றன. அமெரிக்காவையே விஞ்சும் அளவுக்கு வளர்ந்துவிட்டதாகக் கருதும் சீனப் பொருளாதாரம், தனது நாணயமான யுவானுக்கு இப்போதும் ஜப்பானிய "யென்'னுக்கான அடையாளமான தான் பயன்படுத்துகிறது. பல நாடுகளும் நமக்கு ஏன் வம்பு என்று தங்களது நாணயத்தையும் டாலர் என்று அழைத்துக் கொண்டு, அமெரிக்க டாலரின் அடையாளத்தையே ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
ரூபாய்க்கான குறியீடு உள்ளிட்ட எல்லா நாணயக் குறியீடுகளிலும் இரண்டு இணைகோடுகள் மேலிருந்து கீழாகவோ அல்லது இடம் வலமாகவோ இருப்பது ஏன் என்று புரியவில்லை. ஐரோப்பியக் கூட்டமைப்பின் "யூரோ' நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் குறியீடான அடையாளத்தில் உள்ள இணைகோடுகள் நிரந்தரத்தன்மையைக் குறிப்பதாகக் கூறினார்கள். அமெரிக்க டாலரில் இணைகோடுகள் ஸ்திரத்தன்மையைக் குறிக்கிறது என்கிறார்கள். இந்திய ரூபாயின் அடையாளத்திலும் இரண்டு கோடுகள் மேற்பகுதியில் காணப்படுகின்றன. அடையாளங்களுக்கு அர்த்தம் வேண்டும் என்கிற கட்டாயம் இல்லைதான். அர்த்தமற்ற அடையாளங்களுக்கு நிச்சயமாக அர்த்தம் தேவையில்லை.
திடீரென்று இப்போது ரூபாய்க்கு அடையாளம் உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? சில புதுப்பணக்காரர்கள் ஊரில் உள்ள அத்தனை மனமகிழ் மன்றங்களிலும், பணக்காரர்களின் சேவை சங்கங்களிலும் பெரும்தொகை கொடுத்து உறுப்பினர்களாகச் சேர்வது வழக்கம். தங்களுக்கு அதனால் அந்தஸ்து உயர்வதாக நினைத்துக் கொள்வார்கள். அதுபோல, டாலர், பவுண்ட்  ஸ்டெர்லிங், யூரோ, யென் போன்ற நாணயங்களின் வரிசையில் ரூபாய்க்கும் ஓர் அடையாளம் ஏற்படுத்துவதன் மூலம் உலக அரங்கில் இந்திய ரூபாய்க்கு கௌரவம் அதிகரிக்கும் என்று நமது ஆட்சியாளர்கள் நினைப்பார்களேயானால் அதைவிட போலித்தனமான சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது.
1991-ம் ஆண்டு இந்தியாவின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு 11,416 கோடி. கடந்த 2009 மார்ச் மாதம் புள்ளிவிவரப்படி நமது அன்னியச் செலாவணிக் கையிருப்பு 12,83,865 கோடி. நாம் வளர்ந்திருக்கிறோம் தானே? அப்படியானால் நமது ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்க வேண்டுமே! பிறகு ஏன் ரூபாய் மதிப்பை உயர்த்தாமல், பல  ஆண்டுக்கு முந்தைய நிலையில் தொடர்கிறோம்? ரூபாய் மதிப்பை மறுபரிசீலனை செய்து உயர்த்திய கையோடு, ரூபாய்க்கு ஓர் அடையாளக்  குறியும் ஏற்படுத்தி இருந்தால் அது மரியாதைக்குரிய ஒன்றாக இருந்திருக்கும்.
1991-ல் 44,041 கோடி ஏற்றுமதிக்கு, 47,851 கோடி இறக்குமதியுடன் 3,810 கோடி பற்றாக்குறை. 2009-ம் ஆண்டில் 7,66,935 கோடி ஏற்றுமதிக்கு, 13,05,503 கோடி இறக்குமதியுடன் 5,38,568 கோடி பற்றாக்குறையில் அல்லவா  இருக்கிறது இந்தியப் பொருளாதாரம்? இந்த நிலையில் 12,83,865 கோடி அன்னியச் செலாவணிக் கையிருப்பு இருப்பதாக மார்தட்டிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கப் போகிறது?
விலைவாசியைக் குறைக்க முடியவில்லை. உள்நாட்டுச் சட்டம் ஒழுங்கை முறையாகப் பாதுகாக்க முடியவில்லை. உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள விவசாயம் பாதுகாக்கப்படவில்லை. கல்வி, சுகாதாரம், சாலைகள் மேம்பாடு என்று அரசின் அடிப்படைக் கடமைகள் தனியாரிடம் தாரை வார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், ரூபாய்க்கு ஓர் அடையாளச் சின்னம் ஏற்படுத்தி ஆனந்தப்படுகிறோம்.
அடையாளங்களால் ஆகப்போவதுதான் என்ன?
கருத்துக்கள்

பண மதிப்பை உயர்த்தாமல் உரூபாய்க்கு அடையாளக் குறியீடு ஏற்படுத்தி என்ன பயன் எனக்கேட்டுள்ளது மிகச் சரி. ஆனால், வடிவமைத்தவர் முக்கால்வாசிப் பேர் தேவநாகரி சார்ந்த எழுத்துகளைப் பேசுவதாகக் குறிப்பிட்டது அறியாமையைப் பாராட்டும் பேரறியாமை ஆகின்றது. போட்டி அறிவித்த பொழுதே தேவநாகரி எழுத்து வடிவத்தை ஏற்று அறிவிக்கப் போகிறார்கள் என அஞ்சியதுதான் நடந்துள்ளது. தமிழ்ப் பகைவனை எதற்குப் பாராட்ட வேண்டும்? மத்திய அரசு நிறுவனங்களின் முழக்கங்களை எல்லாம் சமசுகிருதத்தில் வைத்திருப்பது போல் பண அடையாளத்திலும் ஓர வஞ்சனையே நடைபெற்றுள்ளது. பிற வடிவமைப்புகளையும் அரசு வெளியிட்டு வேறு சிறந்த குறியீட்டை மக்கள் கருத்திற்கேற்ப தெரிந்தெடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/20/2010 3:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக