சனி, 24 ஜூலை, 2010

லையங்கம்: ஐ.ஜே.எஸ்.​ அவசியம் தேவை!

மாவட்ட ஆட்சியர் பதவியில் இருப்பவர் இந்திய ஆட்சிப் பணி ​(ஐ.ஏ.எஸ்.)​ அதிகாரியாகவும்,​​ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐ.பி.எஸ்.​ அதிகாரியாகவும்,​​ மாவட்ட வன அலுவலர் ஐ.எப்.எஸ்.​ அதிகாரியாகவும் இருக்கும்போது,​​ நீதிபதிகள் மட்டுமே அத்தகைய வரையறைக்குள் வருவதேயில்லை.​ இந்திய நீதித்துறைப் பணிக்கென ​(ஐ.ஜே.எஸ்.)​ தனியாகத் தேர்வு நடத்தி,​​ மாவட்ட நீதிபதிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிற மத்திய அரசின் திட்டம் இன்னமும் கிடப்பிலேயே போடப்பட்டிருக்கிறது.13-வது நிதிக் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான கூட்டம் ​ வடஇந்திய மண்டலத்தில் 6 மாநில அதிகாரிகளுடன் மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையில் புதுதில்லியில் சென்ற வாரம் நடைபெற்றது.​ ​ இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,​​ "நீதித்துறைப் பணிக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்தும் முடிவுக்கு மாநில அரசுகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை' என்று கூறினார்.​ ​நாடாளுமன்ற நிலைக்குழு இத்தகைய அகில இந்திய நுழைவுத் தேர்வை நீதித்துறையும் நடத்தி,​​ மாவட்ட நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்கிற பரிந்துரையை 2006-ம் ஆண்டு மே மாதம் அவையில் வைத்தது.​ சட்ட அமைச்சகம் இந்த நடைமுறையை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியது.​ ஆனால் இதுவரை செய்யப்படாமலேயே இருக்கிறது.மாநில அரசுகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பதே இதற்குக் காரணம்,​​ அதைத்தான் அமைச்சரும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்று வேறுமாதிரியாகக் கூறியுள்ளார்.​ மாவட்ட நீதிபதி நியமனங்களை தன்வசமே வைத்திருக்க மாநில ஆளும்கட்சிகள் விரும்புகின்றன.எந்தக் கட்சி என்றபோதிலும்,​​ ஒவ்வொரு கட்சிக்கும் வழக்குரைஞர் அணி என்று ஒன்று இருக்கிறது.​ ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடனே,​​ மாவட்ட அளவிலும்,​​ மாநில அளவிலும் அரசு வழக்குரைஞர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் அனைவருமே ஆளும்கட்சியின் வழக்குரைஞர் அணியில் இடம்பெற்றிருப்பார்கள் என்பதைச் ​ சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நிலைமை இல்லை.​ இதேபோன்று மாவட்ட நீதிபதி பதவிகளிலும் தங்கள் கட்சி சார்புள்ள நபர்களே இருக்க வேண்டும் என்று ஆட்சிக்கு வரும் கட்சிகள் விரும்புகின்றன.​ இதேபோல ஐ.ஏ.எஸ்.,​​ ஐ.பி.எஸ்.​ அதிகாரிகளும் தங்கள் ஆள்களாக இருக்க வேண்டும் என்கிற விருப்பமும் ஆளும் கட்சிகளிடம் இருக்கிறது.​ குரூப்-1 தேர்வு மூலம் பதவிக்கு வந்த அதிகாரிகளை ஐ.ஏ.எஸ்.,​​ ​ ஐ.பி.எஸ்.-ஆக பதவி உயர்வு அளிக்க அரசு பரிந்துரைக்கும் பெயர்களே அதற்கு சாட்சிகளாகும்.இவ்வாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து,​​ ஐ.ஏ.எஸ்.,​​ ஐ.பி.எஸ்.​ இடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பதவி உயர்வு அளிப்பதைக் காட்டிலும்,​​ நீதித்துறையில் மட்டுமாகிலும் பணிநியமனம் செய்யும் அதிகாரத்தை தங்கள் வசமே வைத்திருக்க மாநில அரசுகள் விரும்புவது வெளிப்படை.​ ​மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தும் தமிழகஅரசின் அறிவிப்பாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தடை விதித்துள்ளதும்,​​ இந்த வழக்கின் காரணங்களும் மறுசிந்தனைக்கு உரியவை.மாவட்ட நீதிபதிகள் பணிக்கான தகுதிகளில் ஒன்றாக,​​ விண்ணப்பதாரர் வழக்குரைஞராக எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார் என்கிற அனுபவத்துக்கு முன்னுரிமை அளிப்பதோடு,​​ நேர்காணலில் 12.5 விழுக்காடு மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரையறை செய்திருக்கிறது.​ தமிழக அரசின் அறிவிப்பாணையில்,​​ அனுபவம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.​ நேர்காணலுக்கு 25 விழுக்காடு மதிப்பெண் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு,​​ தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.​ ​இத்தகைய விதிமுறை மீறல்கள் யதேச்சையாக நடந்தவை என்று கருதிவிட முடியாது.​ நிச்சயமாக,​​ இவை தெரிந்தே மீறப்படும் விதிமுறைகள்தான்.​ இவற்றைப் பார்க்கும்போது,​​ இந்தியா முழுவதும் அகில இந்திய போட்டித் தேர்வுகள் மூலமே மாவட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்கிற கருத்தினைப் புரிந்துகொள்ள முடிகிறது.​ இதனால்,​​ தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் நீதிபதியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைப்பதோடு,​​ தமிழ்நாட்டிலும் பிற மாநிலத்தவர் நீதிபதிகளாக வர முடியும்.​ ​வேறு மாநிலத்துக்காரர்களான ஐ.ஏ.எஸ்.,​​ ஐ.பி.எஸ்.​ அதிகாரிகளும்கூட ஆட்சியாளர்களுடன் சேர்ந்துகொண்டு ஊழல் செய்யத்தானே செய்கிறார்கள் என்று சொல்லலாம்.​ அதற்கான வாய்ப்புகளே இல்லை என்று சொல்லிவிட முடியாது,​​ ஆனால்,​​ குறைவாக இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.​ மேலும்,​​ போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுகிறார்கள்;​ நிச்சயமாகத் தகுதி இல்லாமல் வெற்றிபெற முடியாது என்று நம்பலாம்.காவல்துறையும் நீதித்துறையும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டாலும்,​​ இதனால் எள்ளளவும் பாதிப்பு இல்லாமல்,​​ காப்பீடு வழக்குகள்,​​ விபத்து வழக்குகளில் "காவல் நிலையம்-வழக்குரைஞர்-​ நீதித்துறை' கூட்டணி ஒன்று தங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது,​​ மாவட்ட நீதிபதிகள் அனைவரும்,​​ மத்திய தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுபவராகவே இருக்க வேண்டும் என்பதன் அவசியம் மேலும் உறுதிப்படுகிறது.​ ஐ.ஜே.எஸ்.​ அவசியம் தேவை!
கருத்துக்கள்

அனைத்து இந்தியா என்று வந்தாலே தாய்மொழிகள் புறக்கணிக்கப்படும் என்பதை உணர வேண்டும். மண்ணின் மைந்தர்களும் புறக்கணிக்கப்படுவார்கள். மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்குப் பணி வழங்கியபின் மாநில மொழிகளில் தேர்வு நடத்தி அ.இ. நிலை வழங்கலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvnar Thiruvalluvan
7/24/2010 3:11:00 AM
1986 லேயே இது போல் உயர்கல்விக்கும் ஒரு தேசிய தகுதி தேர்வு மாநில தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதோடு அகில இந்திய கல்வி பணி உருவாக்கவும் தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டது. ஆனால், அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலையை அளிக்காமல் அந்த தேர்வில் வெற்றி பெற்று தகுதியை நிர்ணயிக்க முடியாத எம்பில் பிஎச்டி பட்டம் பெற்றவர்களை அவர்கள் தி றமையை சோதிக்காமல் பட்டத்தை மட்டும் பார்த்து நியமனம் செய்து தகுதி பெற்றவர்களை தெருவில் விட்டான் எட்டப்பன். இந்த தகுதி கள் ஏட்டளவில் மட்டுமே செயல்படுத்த பட்டது நியமனங்கள் அணைததும் தகுதி அற்றவர்களுக்கே அதாவது தகுதி பெற்றவர்களை விட தகுதி பெற முடியாதவர்களே புறவழியாக பேராசிரியர் ஆன பென்முடி எட்டப்பன் கூட்டணியின் கண்டு பிடிப்பு. ஆகவே, நீதிபதியாக விருப்புபவர்கள் சட்டத்தை மதிக்க வேண்டியதில்லை மாறாக அவர்களுக்கே அணைத்து பல்ன்களும் கிடைக்கும் சட்டத்தை மதிப்பர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் இந்த நாட்டில். அதை இந்த ஊழல் மன்னர்கள் தான் சட்டப்படி சரியானது என்று உத்தரவு போடுகின்றனர்.
By Unmai
7/23/2010 10:11:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக