வியாழன், 22 ஜூலை, 2010

நடப்பு கல்வியாண்டு முதல் பட்டப்படிப்பில் செம்மொழிப் பாடம்: க. பொன்முடி


சென்னை, ஜூலை 21: கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டு முதல் செம்மொழிப் பாடம் அறிமுகம் செய்யப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கூறினார்.அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் செம்மொழிப் பாடம் அறிமுகம் செய்யப்படும் என கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அறிவித்தது. இதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உயர் கல்வித் துறை செயலர் கணேசன், உயர் கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி மற்றும் அனைத்து கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் பொன்முடி கூறியது:அனைத்து கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளிலும், இரண்டாம் பருவத்தில் உரைநடைப் பாடத்தில் ஒரு பாடமாக தமிழ்ச் செம்மொழி பாடம் நடப்பு கல்வியாண்டு முதல் சேர்க்கப்படும்.நான்கு பருவங்களில் தமிழ் கற்பிக்கப்படும் பி.ஏ. வரலாறு, பி.ஏ. பொருளாதாரம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில், முதல் ஆண்டில் முதல் பருவத்தில் செய்யுள், உரைநடை, இலக்கணம் ஆகியவற்றின் முதல் பகுதியும், இரண்டாம் பருவத்தில் இவற்றின் இரண்டாம் பகுதியும் பயிற்றுவிக்கப்படும். மூன்றாம் பருவத்தில் தமிழ் இலக்கிய வரலாறு, செம்மொழித் தமிழ் வரலாறு ஆகியவற்றின் முதல் பகுதியும், நான்காம் பருவத்தில் 2-ம் பகுதியும் பயிற்றுவிக்கப்படும்.வணிகவியல் (பி.காம்), கம்ப்யூட்டர் சயின்ஸ் (பி.சி.ஏ.) பட்டப் படிப்பு மாணவர்கள் முதல் இரண்டு பருவங்களில் மட்டுமே தமிழ் படித்துத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக முதல் பருவத்தில் தமிழ்ச் செய்யுள், உரைநடை, இலக்கணம் ஆகிய பகுதிகளும், இரண்டாம் பருவத்தில் தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்ச் செம்மொழி வரலாறு ஆகிய இரண்டு பகுதிகள் கொண்ட இரண்டு பாடங்கள் அறிமுகம் செய்யப்படும்.இதற்கான பாடத் திட்டங்களை பேராசிரியர்கள் குழுவின் உதவியுடன் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வகுக்கும். இதற்கு தஞ்சை பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேந்திரன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.தமிழை பட்டப் படிப்பு பாடமாகவே கொண்டு படிக்கும் பி.ஏ., மற்றும் எம்.ஏ. தமிழ் மாணவர்களுக்கு, செம்மொழி வரலாறும் அதன் பண்புகளும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு அதன் ஒப்பீடும் ஆகியவற்றை உள்ளடக்கிய தனிப் பாடம் ஒன்றை அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்தையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமே வகுக்கும்.தமிழில் உரைநடைப் பாடத்தில் உலக நாடுகளின் தாய் மொழி வழிக் கற்றல் என்ற ஒரு பாடமும் அடுத்த கல்வியாண்டு முதல் கொண்டுவரப்படும். இத்திட்டம் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே விதமான பாடத் திட்டமாக அமையும் என்றார்.
கருத்துக்கள்

பிற மொழிப் பாடங்களிலும் தமிழ்ச்செம்மொழி குறித்த பாடங்கள் இடம் பெற ஆவன செய்ய வேண்டும். 
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
7/22/2010 3:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக