ஞாயிறு, 18 ஜூலை, 2010

மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறத் தயாரா? திமுகவுக்கு ஜெயகுமார் கேள்வி


சென்னை,  ஜூலை 17: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தாத மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற திமுக தயாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை தடுக்க கோரி டி. ஜெயகுமார் தலைமையில் அதிமுகவினர் சென்னை மாவட்ட ஆட்சியர் முன்பு சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் அவர் பேசியதாவது:இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது அன்றாட நிகழ்வாகி விட்டது.  ஆனால் இந்த கொடுஞ்செயலை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறதே தவிர அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் இலங்கை ராணுவம், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் திரும்பி வருவார்களா? என்று அவர்களின் குடும்பத்தினர் அஞ்சும் அளவுக்கு மோசமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது. இவை அனைத்தையும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதியும் மத்திய அரசிடம் இதனைப் பற்றிக் கேட்க தயாராக இல்லை.  தமிழக மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என மீனவர்கள் மீதே அவர் குற்றம் சுமத்துகிறார். ஆனால் இப்போது மக்களை ஏமாற்றுவதற்காக, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்கக் கோரி திமுகவினர் போராட்டம் நடத்துகிறார்கள்.  மாநிலத்தில் ஆட்சியில் இருந்து கொண்டும்,  மத்தியில் 7 அமைச்சர்களை வைத்து கொண்டிருக்கு திமுக அரசு போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. திமுகவுக்கு தமிழக மீனவர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் இதை பற்றி எடுத்துரைத்து, தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், வெறும் கடிதத்தை மட்டுமே அனுப்புவதை தவிர எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் இன்று வரை திமுக அரசு மேற்கொள்ளவில்லை.மத்திய அரசிடம் இந்தப் பிரச்னை குறித்து பேசவே திமுக தயங்கி வருகிறது.  தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற திமுகவுக்கு துணிவு இருக்கிறதா?  தமிழக மக்களையே பாதுகாக்க முடியாத திமுக, ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றார் ஜெயக்குமார்.வடசென்னை மாவட்ட செயலாளர் பி.கே. சேகர்பாபு,  அதிமுக மீனவர் பிரிவு செயலாளர் கே.கே. கலைமணி, இணைச் செயலாளர் ஜெனிஃபர் சந்திரன் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

காங்கிரசுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்கப் போவதில்லை என உறுதிமொழி அளிக்க நீங்கள் தயாரா? மத்திய அரசிற்கான ஆதரவை விலக்கியதுடன் காங்.கட்சியானது தமிழ்நாட்டில் தனது ஆதரவை விலக்கும் பொழுது தி.மு.க.விற்குஆதரவு தந்து ஆட்சி கவிழாமல் இருக்க உதவத் தாயரா? 
வினாக்கள் தொடுக்கும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2010 7:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக