வியாழன், 8 அக்டோபர், 2009

07 October, 2009 by admin

யாராவது தமிழை தெளிவான உச்சரிப்புடன் அழகியலோடு கையாண்டாலே அவரை தமிழின உணர்வாளர் என்று நம்மனது ஏற்றுகொள்ளும். அப்படி வெகுநாட்களாக தமிழ்கூறும் நல்லுலகில் தமிழின உணர்வாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் பேராசிரியர் சுபவீ. தமிழின உணர்வாளர் என்பதாலே புலம்பெயர் தமிழர்கள் இவரை தோளில்வைத்து கொண்டாடியது முந்தைய வரலாறு. உலகெங்கும் ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகள் பத்திவகுப்பெடுத்து வந்த சுபவீ இப்பொழுது அறிவாலயம் பக்கமாக ‘பக்காவாக’ வகுப்பெடுத்து கொண்டிருக்கிறார்.

நாளுக்குநாள் ஈழத்தில் படுகொலைகள் அதிகரிக்க அதிகரிக்க சுபவீயின் கால்கள் ஈழ ஆதரவு போராட்டத்திற்கு எதிர்திசையில் நடைபோட ஆரம்பித்தது. செத்துவிழுந்த தொப்புள்கொடி உறவுகள்பத்தி கவலைப்படவேண்டிய சுபவீ எங்கே கருணாநிதியின் நாற்காலி கவிழ்ந்து விடுமோ? என்று கவலைகொள்ள ஆரம்பித்துவிட்டார். திசைமறந்த பறவைபோலே ஈழம் என்ற வார்த்தையை உச்சரிப்பதை நிறுத்தி விட்ட சுபவீ மீண்டும் மக்கள் மன்றங்களில் பேசத்துவங்கி இருக்கிறார்.

வருடந்தோறும் கருணாநிதியை வாழ்த்தி ‘வஞ்சப்புகழ்ச்சி தூக்கலாக’ நடைபெறும் கவியரங்கில் மேடையேறிய சுபவீ முழுக்கமுழுக்க கருணாநிதிதாசனாக மாறிப்போனார். வழமையாக எதையாவது அள்ளிவிடும் செகத்ரட்சகனே வெட்கப்படும்படியாக நம்மாளு வெளுத்து வாங்கி இருக்கிறார். அதெல்லாம் அவர்கள் உட்கட்சி விவகாரம் அதைபத்தி நாம் கவலைபடவேண்டியதில்லை. நமக்கு கவலை எல்லாம் சுபவீயின் “பிரபாகரனின் இருப்பு பற்றிய கசப்பான உண்மை” என்ற தலைப்பில் குமுதம் இணையதளத்தில் கொடுத்தநேர்காணல் பற்றியதுதான்.

இந்த நேர்காணலில் கருணாநிதி விசுவாசத்தை மிகத்தெளிவாக வெளியிட்டு இருக்கிறீர்கள்.பிரபாகரன் இல்லை என்ற தகவலை இந்த நேர்காணலின் மூலமாக உலகத்தமிழ் மக்களுக்குகூற விரும்புவதாக கூறி இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து எந்தவொரு தகவலையும் உலகத்தமிழ்மக்கள் எதிர்பார்க்கவில்லை என்ற நிதர்சன உண்மையை நீங்கள் அறியாமல் இருக்கமாட்டீர்கள். உலகத்தமிழர்களின் இதயங்களில் இருந்து நீங்கள் தூக்கி எறியப்பட்டு வெகுநாட்கள் ஆகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஈழத்தமிழன் கொன்றழிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் உலகத்தமிழ்மாநாடு தேவையா? என்று நியாயமான கேள்விக்கு உங்களது பதில் ஏற்றுகொள்ளும்படி இல்லையே! ஈழத்தமிழர்கள் செத்துவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தமா? தமிழை வளர்க வேண்டாமா? என்று அறிவுப்பூர்வமாக கேள்விகேட்கும் நீங்கள் அதற்கும் ஒருபடி மேலேசென்று இந்த மாநாடுகூட ஒருவழியில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாணும் என்று அளந்து விடுகிறீர்கள். கேப்பையில் நெய்வழிகிறது என்று இன்னும் எத்தனை காலத்திற்கு கதையளக்கபோகிறீர்கள்?.

ஈழத்திற்காக போராடியர்கள் அப்படியே முடக்கி போனார்களா? அவர்கள் இயங்கவில்லையா என்று கேள்வி கேட்கும் நீங்கள், கலைஞரை குற்றம் சுமத்துபவர்கள் என்ன தீக்குளிப்பு போராட்டமா நடத்தினார்கள்? என்று கேட்டு இருக்கிறீர்கள். முத்துகுமார் நியாபகம் இருக்கிறதா சுபவீ அவர்களே? முத்துகுமாரின் தியாகத்தை மறைத்து அதே வேளையில் அழகிரியின் பிறந்தநாளை கோலாகாலமாக கொண்டாடிய கருணாநிதியின் துரோகத்தை மறைக்கமுடியுமா?அல்லது கருணாநிதியின் ஊடகங்கள் செய்த இருட்டடிப்பை மறக்கமுடியுமா? முத்துகுமார் கருணாநிதிபத்தி எழுதியதை மறுவாசிப்பு செய்துபார்க்க சம்மதமா?

அப்படியே உங்கள் முன்னாள் தோழர் சீமானையும் காட்டி கொடுக்கிறீர்கள் “சீமான் இத்தருணத்தில் உலகத்தமிழ் மாநாடு கூடாது என்கிறார்! அதே நேரத்தில் ‘உத்தரவு’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்” என்கிறீர்கள். கலைஞர் அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழனுக்காக உழைக்கிறார் என்கிறீர்கள். அவரின் அந்த உழைப்பினால் இதுவரை ஈழத்தமிழன் துயரம் எந்தளவிற்கு துடைக்கப்பட்டது என்று சொல்லமுடியுமா? அகதி முகாம்கள் அருமையாக இருக்கின்றன என்ற பார்ப்பன இந்து ராமிற்கும் இலங்கையில் சுமூகநிலை நிலவுகிறது என்று சொன்ன கருணாநிதிக்கும் பெரிதாக என்ன வித்தியாசம் இருக்க முடியும் சுபவீ அவர்களே? போர் வந்தால் மக்கள் சாவது இயல்புதான் என்ற செயலலிதாவும் மழைவிட்டும் துவானம் தூவுவது இயல்புதான் என்று கருணாநிதியும் ஒரே குரலில் ஒலித்தது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?..

ஆகமொத்தம் இங்கே ஈழத்திற்காக நடந்தபோராட்டங்கள் எல்லாமே கருணாநிதியின் ஆட்சியை கவிழ்க நடந்த சதிமுயற்சி என்கிறார் சுபவீ. ஈழத்திற்காக உண்மையாக போராடியர் கருணாநிதி மட்டுமே என்று பெரியார்மீது அடித்து சத்தியம் செய்கிறார். இவர் கனிமொழியோடு சேர்ந்து ஈழத்தமிழர் விடுதலைக்கு ‘லாபி வொர்க்’ பார்த்துகொண்டு இருக்கிறாராம். கருணாநிதி காங்கிரசோடு கைகோர்த்து கூடசரி என்கிறார் ஈழத்தில் தமிழர்களை கொன்ற ராசபக்சே போன்று இந்தியாவில் முகமதியர்களை கொலை செய்த பா.ச.க ஆட்சிக்கு வந்திடும் அபாயத்தில் இருந்து காப்பதற்கே காங்கிரசு கூட்டணியாம்.

இதற்கு முன்னாள் கருணாநிதி பா.ச.கவோடு கைகோர்த்து பற்றிகேட்டால் அது பேனமாசம் இது இந்தமாசம் என்று சொன்னாலும் சொல்லுவார். சுபவீயை கொண்டாடியதற்காக புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக வருந்துவார்கள் அப்படி வருந்துபவர்களில் நானும் ஒருவன்.

‘பெரியார்விருது’ வீரமணிக்கும், ‘அண்ணாவிருது’ கருணாநிதிக்கும் ‘கலைஞர்விருது’ ஸ்டாலினுக்கும் கொடுக்கப்பட்டு விட்டது ‘கனிமொழிவிருது’ நமது சுபவீக்கு அடுத்த ஆண்டு அளிக்கப்படும் என்று நம்புவோமாக!


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 7620

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக