செவ்வாய், 6 அக்டோபர், 2009

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் தவறு இல்லை: ஈ.வி.கே.எஸ்.இ

First Published : 06 Oct 2009 12:47:00 AM IST


கோவை, அக்.5: தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதில் தவறு இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். தெரிவித்தார். கோவைக்கு திங்கள்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமக, வரும் காலங்களில் தேர்தலில் தனித்தே நிற்கும் என்று எதிர்பார்க்கலாம். பலவீனமான கூட்டணியில் இருந்து அக்கட்சி வெளியேறியுள்ளது. இதில் யாருக்கும் லாப, நஷ்டம் கிடையாது. தனித்து நிற்கும் நோக்கத்துடனேயே பாமக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிகிறது. இந்த முடிவு வரவேற்புக்குரியது. தங்கள் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டால் மீண்டும் கூட்டணிக்கு முயற்சி செய்யலாம். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரின் ஆசை. அதற்கான கால நேரம் விரைவில் வரும் என எதிர்பார்க்கிறோம்.இலங்கைத் தமிழர்கள்...: இலங்கையில் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் இலங்கை அரசு குடியமர்த்த மத்திய அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இலங்கைக்கு தூதுக் குழுவையும் அனுப்பி வைக்கும். தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகள் இந்திய அரசியல் சட்டத்தையும், இறையாண்மையையும் முழுமையாக ஏற்று தங்களை இந்திய பிரஜையாக மாற்றிக் கொள்ள விரும்பினால் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் தவறு கிடையாது. அதேநேரம் அகதிகள் என்ற போர்வையில் தீவிரவாதிகளும், விடுதலைப் புலிகளும் இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என்றார்.

கருத்துக்கள்

தமிழினப் பகை ஊற்றிலே மூழ்கிய இவர் கூறுவதில் இருந்தே இது தவறான கருத்து என்பது உறுதியாகிறது. ஒரு தலைமுறைக்கு முன்னர் இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கையிலேயே குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்காமல் ஒரு பகுதியினரை இங்கு அழைத்துவந்து அங்கும் இங்கும் பன்னூறாயிரக்கணக்கானோர் நாடற்ற குடிமக்களாக ஆக்கப்பட காரணமான காங் இவ்வாறு பேசுவதும் நாடகமே. இலங்கைத் தமிழர்களுக்கு அந்நாட்டுக் குடியுரிமையும் வழங்கப்பெற வேண்டும். இரண்டாம் குடியுரிமையாக இங்கும் குடியுரிமை வழங்கப்படலாம். அதற்கு முன்னராகப் பிறநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தோர் பெறும் அனைத்து உரிமைகளையும் நல் வாய்ப்புகளையும் நயப்புகளையும் (சலுகைகளையும்) இலங்கைத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் வழங்க வேண்டும். தடுப்புக் காவல் முகாம்களை அறவே நீக்க வேண்டும். மருத்துவம் கல்வி வாய்ப்புகளுக்காக நம் நாடு நாடி வருவோருக்கு உடனே இலவசமாக அவற்றை வழங்க வேண்டும். இளங்கோவன்களுக்கு வாய்ப்பூட்டு போட வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/6/2009 3:14:00 AM

இந்தியாவின் பக்கம் நின்று நாம் இழந்தது போதும். இந்தியாவை நம்பி நாம் அழிந்தது போதும். இந்தியாவின் சிதைவில்தான் தமிழீழம் மலருமானால், அதற்காகவேனும் நாம் சீனாவின் பக்கம் நின்றேதான் ஆகவேண்டும். இந்திய புராணம் பாடி, ஈழத் தமிழர்களுக்கு மகுடி ஊதும் பலரும் ஈழத் தமிழர்களின் அத்தனை துயரங்களுக்கும் இந்தியாவே காரணம் என்பதை வசதியாக மறந்து விடுகின்றார்கள். தன்னிடம் ஒடுங்க மறுத்த இலங்கையை அடிபணிய வைக்கும் மந்திரக் கோலாகவே ஈழத் தமிழர்களது பிரச்சினையை இந்தியா பயன்படுத்தியுள்ளது.இன்றும் இலங்கையைக் குளிர்வித்துக் காரியமாற்ற ஈழத் தமிழர்களைப் பலிக்கடா ஆக்குவதற்கு இந்தியா தயங்கப் போவதில்லை. இந்தியத் துரேகம் இன்றுடன் முடிவுறப் போவதில்லை. இதிலிருந்து விடுபடுவதே ஈழத் தமிழர்களுக்கிருக்கும் மிகப் பெரிய சவாலாகும்.'எதிரிகளிலும் பார்க்க துரோகிகள் ஆபத்தானவர்கள்' இது தேசியத் தலைவர் அவர்களது வார்த்தை.

By Vani
10/6/2009 2:51:00 AM

ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், 'நீங்கள் வவுனியா தடை முகாம் ஒன்றினுள் அடைக்கப்பட்டவராக இருந்தால், வெளியே வரும் சூழலில் என்ன செய்வீர்கள்?'. நிச்சயமாக இலங்கைத் தீவிலிருந்து வெளியேறி, எங்கேயாவது கரை ஒதுங்கவே முயற்சி செய்வீர்கள். அல்லது, வெட்கத்தை விட்டாவது கடல் கடந்து தமிழகம் செல்ல முற்படுவீர்கள். இதுதான் மனித யதார்த்தம். அப்படியாயின், தமிழீழம் நிரந்தர கனவாகவே புலம்பெயர் தேசங்களில் நிலைத்து விடும். இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், புலம்பெயர் தேசத்து மக்கள் தாம் வாழும் நாடுகளின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். மேற்குலக நாடுகள் கடந்தகாலத்தின் தவறான கணிப்புக்களைத் திருத்தி, தமிழீழ மக்களுக்கு நீதி வழங்கத் தவறினால், எமது வாழ்வைத் தனது பிராந்திய நலனுக்காகப் பலி கொள்ளும் இந்தியாவை விட்டு விலகி, அதன் எதிர்த் துருவமான சீனாவின் பக்கம் ஈழத் தமிழர்கள் முழுமையாகச் சாயவேண்டும்.

By Vani
10/6/2009 2:49:00 AM

ஈழத் தமிழர்கள் எப்போதுமே இந்திய நலனுடன் சேர்த்தே தமது விருப்பங்களை நிறைவேற்ற எண்ணியதன் விழைவாக பல பிராந்திய நாடுகளின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டார்கள். ஈழத் தமிழர்களை இந்திய உதிரிகளாகக் கருதிய சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தமது இந்திய எதிர்ப்பு நிலைக்குள் ஈழத் தமிழர்களையும் அடக்கி விட்டதனால் சிங்கள தேசத்தின் பக்கம் அவர்களும் நின்று கொண்டார்கள். இந்த நிலை மாற்றம் பெறாத வரை ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை இலங்கைத் தீவில் நிலைநிறுத்தப்படப் போவதில்லை.மாறாக, இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கக் கனவுக்காக ஈழத் தமிழர்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டு இலங்கைத் தீவில் இல்லாமலேயே போய்விடுவார்கள்.

By Vani
10/6/2009 2:47:00 AM

இன்னும் அயோக்கியத்தனமாக பேசுவதை நிறுத்தவில்லை இந்த ஜால்ரா. காங்கிரஸ் ஆட்சி தமிழகத்திலா? ஏன்யா உளறுவதற்க்கு வேறு எதுவுமே இல்லையா? எத்தனை ஆண்டுகள் கனவு கண்டாலும் அது மட்டும் நடக்காது.

By மங்கைதாசன்
10/6/2009 1:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக