திங்கள், 5 அக்டோபர், 2009

இலங்கைத் தமிழர்களின் தேவையை பூர்த்தி செய்யத் தனிக் குழு: கிருட்டிணசாமி கோரிக்கை



சென்னை, அக். 4: இந்திய அரசு சார்பில் தனிக்குழு அமைத்து இலங்கைத் தமிழர்களுக்கான அத்யாவசியத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய அரசு வழங்கும் நிதியை நேரடியாக ராஜபட்சவிடம் கொடுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் கடந்த 5 மாதங்களாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு நல்ல உணவு, உடை, தங்குமிடம் போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இந்த மனித உரிமை மீறலை ஐ.நா. உள்ளிட்ட உலக நாடுகள் கண்டித்துள்ளன. ஆனால் இந்த விஷயத்தில் இந்தியா தொடர்ந்து மெüனம் சாதித்து வருகிறது. இந்திய அரசு தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தில்லியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தச் சமயத்தில் தில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மீது புதிய தமிழகம் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது. தமிழக மீனவர்கள் மீது கடந்த 10 மாதங்களாக இலங்கைக் கடற்படை தாக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது, வேடிக்கையாக உள்ளது. ஒரு தமிழரான அவர் இவ்வாறு பேசுவது வியப்பாக உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளை ஆளும் மத்திய அரசு தவறாகக் கணக்குப் போட்டுவிடக் கூடாது. இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய அரசு அளித்துள்ள ரூ. 500 கோடியில் வீடு, பள்ளி வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் புதிய தமிழகம் சார்பில் இந்த மாதம் 3-வது வாரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமா-அத், யாதவர் மகாசபை, பன்னாட்டுத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆகியன கலந்து கொள்கின்றன என்றார் அவர். இந்தச் சந்திப்பின் போது இந்திய தவ்ஹீத் ஜமா-அத் தலைவர் எஸ்.எம். பாக்கர் கலந்து கொண்டார்.

கருத்துக்கள்

மனித நேயர்கள் ஈழத் தமிழர்களுக்கு வழங்கிய பொருள்களைக் கூட அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க இயலாத் துப்பு கெட்ட அரசிடம் எக் கோரிக்கை வைத்துப் பயன் இல்லை. மாநிலந் தோறும் சென்று தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசின் கொடும் போக்கையும் வஞ்சகச் செயலையும் விளக்கி மக்கள் புரட்சியை ஏற்படுத்த முயலுவதே சாலச் சிறந்தது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2009 3:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக