திங்கள், 5 அக்டோபர், 2009

இயற்கை அழகைச் சிதைக்கிறதா சுற்றுலாத்துறை?

First Published : 05 Oct 2009 11:45:00 PM IST


தமிழ்நாட்டில் ஏற்கெனவே பிரபலமாக இருக்கின்ற சுற்றுலாத் தலங்கள் அதிக அளவில் வணிகமயமாக்கப்பட்டுவிட்ட நிலைமை. அவற்றின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும், சுற்றுலாப் பயணிக்கான தேவைகளுக்கு ஏற்ற சௌகரியங்களும் அதிகரித்து வரும் பயணிகளின் வருகைக்கு ஏற்ப அதிகரிக்க முடியாத நிலைமை ஒருபுறம். மேலும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவதால் அங்கிருக்கும் இயற்கைச் சூழல் சிதையும் நிலை உருவாகியுள்ளது என்பது இன்னொரு புறம். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, அதிகம் பிரபலம் ஆகாத சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்க முற்பட்டது. அவ்வாறு 18 சுற்றுலாத் தலங்களைக் கண்டறிந்து, அவற்றில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பொருட்டு சலுகைகளை அறிவித்துள்ளது. இவை அனைத்துமே மலைவாழ் தலங்கள் அல்ல; பெரியபாளையம், திருக்கடையூர், தரங்கம்பாடி, திருமணஞ்சேரி, சித்தன்னவாசல், தாரமங்கலம், திருப்புடைமருதூர் ஆகிய சமயச் சுற்றுலாத் தலங்களும், கடற்கரை ஒட்டிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் இவற்றில் அடங்கும். இந்த இடங்களை மேம்பாடு செய்வதன் நோக்கமே ஒரு சில சுற்றுலாத் தலங்களை மட்டுமே வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அறிந்து வைத்திருப்பதால் அங்கே பெருமளவு வருகைபுரிந்து அங்கே இருக்கும் இயற்கைச் சூழலைச் சிதைக்கிறார்கள் என்பதுதான். மேலே குறிப்பிட்ட 18 சுற்றுலாத் தலங்களுக்கு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதும் சுற்றுலாத் துறையின் நோக்கம். தமிழக சுற்றுலாத்துறை இயற்கை அழகைச் சிதைத்து செயற்கை முலாம் பூசுகிறது என்கிற தவறான கருத்தைச் சில சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஊடகங்களும் முன்வைக்கின்றன. இந்தக் கருத்துக்கு மாறாக, இருக்கின்ற இயற்கை வளத்தை மெருகேற்றியும் அதிகம் பிரபலமாகாத சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தவும் தமிழக சுற்றுலாத் துறை சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதுதான் உண்மை. தமிழக சுற்றுலாவைப் பொருத்தவரை பிரபலமாகாத சுற்றுலாத் தலங்களை அதிக அளவில் விளம்பரப்படுத்தினால் ஏற்கெனவே கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படும் சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் வருவது குறையும். இந்தப் பிரபலமாகாத தலங்களில் வேலைவாய்ப்பும் பெருகும். அது மட்டும் அல்லாமல், இந்த இடங்களில் சரியாக இல்லாத கட்டமைப்பு வசதிகளை ஒழுங்குபடுத்துவதும் துறையின் நோக்கமாகும். ஏலகிரி போன்ற சுற்றுலாத் தலங்களில் அதிக அளவில் மரங்களை நடுவதற்கும், இயற்கையைச் செம்மைப்படுத்த இயற்கைப் பூங்காக்களை அமைக்கும் முயற்சியையும் சுற்றுலாத் துறை மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல், ஏலகிரியில் இருக்கிற குளங்களை ஆழப்படுத்தவும், தடுப்பணைகள் கட்டி நீர்வளத்தைப் பெருக்கிடவும் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடையும் தறுவாயில் உள்ளன. ஏலகிரியில் உள்ள பயணியர் மாளிகை, படகுத்துறை, உணவு விடுதி போன்ற அனைத்துமே அங்கிருக்கும் பழங்குடியினர் மூலமே பராமரிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரங்களாக இருந்து வருகின்றன. வனத்துறையும் காரமடையில் இதுபோன்ற முயற்சியை எடுத்துள்ளது. திருக்கழுகுன்றம் தண்டரை கிராமத்தில் புதிதாக வனத்தை உருவாக்கி பழங்குடியினர் மேற்கொண்டுவரும் ஊரக சுற்றுலாப் பணிகளுக்கு 2007-ம் ஆண்டுக்கான தேசிய சுற்றுலா விருது கிடைத்துள்ளது. தமிழக சுற்றுலாத்துறை ஊரக சுற்றுலா மூலம் இயற்கையை நுகரும் மனப்பக்குவத்தை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சுற்றுச்சூழல் சுற்றுலாப்பிரிவு ஒன்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது; மூத்த இந்திய வன அதிகாரி ஒருவரை அதன் பொது மேலாளராக அரசு நியமித்துள்ளது. குற்றாலம், முண்டந்துறை, மாஞ்சோலை, அகஸ்தியர் அருவி உள்ளிட்ட இடங்களில் செயற்கை மைதானங்களையும் செயற்கைப் பூங்காக்களையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஒரு தவறான கருத்து பரப்பப்படுகிறது. இந்த இடங்கள் எதனையும் அரசு பிரபலம் அடையாத சுற்றுலாத் தலங்களாக அறிவிக்கவும் இல்லை. குற்றாலத்தில் மட்டும் பெண்கள் குளிக்கும் வசதி, உடை மாற்றும் வசதி, வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி, சாலை வசதிகளைச் செய்துதர நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதுதான் உண்மை. வனத்துறையோடு சேர்ந்து சுற்றுலாத்துறை, சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலாவை மேம்படுத்த தனியாக ஒரு கொள்கையைத் தீட்ட முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அதிக அளவில் மரங்கள் நடவும், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் செயற்கைப் பொருள்களை கண்ட இடத்தில் வீசி எறிந்து சுற்றுச்சூழலைச் சேதப்படுத்தாமல் இருக்கவும் முகாம்கள் மூலம் விழிப்புணர்வு ஊட்டப்படுகிறது. சுற்றுச்சூழல் பூங்காக்களை உருவாக்கும் பொருட்டு திருப்பரங்குன்றம் போன்ற மண் அரிப்பு நிகழ்ந்துள்ள இடங்களில் பசுமையைப் பதியன்போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை நுகர்ந்திட சுற்றுலாத்துறையின் மூலம் மலை ஏறுதல், சாகச சுற்றுலா போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். இயற்கையின் இனிமையை உணர்த்த இவை உதவியாக இருக்கும். சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை துறை எடுத்து வருகிறது என்கிற உண்மையைப் புரிந்து கொள்ளாமல் அரசு எதைச் செய்தாலும் தவறு என்கிற கண்ணோட்டத்தில் பிரச்னைகளை அணுகுவது என்ன நியாயம்? அவசியமாகத் தேவைப்படுகின்ற கட்டமைப்பு வசதிகள்கூட இல்லாமல் இயற்கையைப் பேணுவது என்பது "பாத்திரம் இல்லாமல் பண்டத்தைப் பாதுகாப்பது' போன்ற முயற்சியாகத்தானே இருக்கும்? சுற்றுலாத் துறைக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டியவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சுற்றுச்சூழல் துறையுடன் கைகோர்த்து செயல்பட வேண்டியவர்கள், நல்லது செய்ய முற்படும்போது தடைகளை ஏற்படுத்துவது சரியல்லவே!(கட்டுரையாளர்: இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக