சனி, 10 அக்டோபர், 2009

திரிசங்கு நிலையில் அரவானிகள் நலவாரியம்

First Published : 09 Oct 2009 12:00:00 AM IST

Last Updated : 09 Oct 2009 01:39:30 PM IST

திருநெல்வேலி, அக். 8: அரவானிகளின் ஒத்துழைப்பு குறைவால் அவர்களுக்கான அரசின் நலவாரிய செயல்பாடுகள் "திரிசங்கு' நிலையில் உள்ளன. சமூகத்தால் புறக்கணிக்கப்படும் அரவானிகளின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த தமிழக அரசால் கடந்த ஆண்டு அரவானிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் அரவானிகள் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரையில் நலவாரியத்தில் சுமார் 6 ஆயிரம் பேர் வரை மட்டுமே பதிவு செய்துள்ளனர். இவ்வாறு பதிவு செய்துள்ளவர்களுக்கு அடையாள அட்டையும், சிலருக்கு குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. அரவானிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, சுயதொழில் பயிற்சி, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார மேம்பாட்டுக் கடன் போன்றவற்றை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக முதல்கட்டமாக ரூ.1 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான நலத்திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு சமூகநலத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை அரவானிகளுக்கு அளிக்க முதலில் அவர்களை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமாகிறது. அதில்தான் சிக்கல்கள் உள்ளதாக சமூகநலத் துறை அலுவலர்கள் கூறுகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 300 அரவானிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை 49 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பதிவு செய்துகொள்ள பலமுறை அழைப்பு விடுத்தும் எண்ணிக்கை உயரவில்லை. பதிவு செய்துள்ளவர்களுக்கு அடையாள அட்டையும் குடும்ப அட்டையும் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, சுயஉதவிக் குழுக்களை அமைத்து அவர்கள் சுயதொழில் தொடங்கும் வகையில் பயிற்சிகளையும், அதற்காக வங்கிக் கடன்களையும் பெற்றுக் கொடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. சுயஉதவிக் குழுக்களை அமைத்து தொழில் கடன் பெற வேண்டுமானால், அரவானிகள் ஒன்றுகூடி கூட்டம் நடத்தி, அமைப்பாளர்களைத் தேர்வு செய்து வங்கிக் கணக்கு தொடங்கி தரமதிப்பீடு பெற வேண்டும். அதற்கான முயற்சியில் சமூகநலத் துறையினர் ஆர்வமாக இருந்தும் அரவானிகளிடம் ஆர்வம் இல்லை. ""அரவானிகள் ஒரு இடத்தில் நிரந்தரமாகத் தங்கி இருப்பதில்லை. நிரந்தர வருமானமும் கிடையாது. வங்கிக் கணக்கு தொடங்க வேண்டுமானால் நிரந்தர முகவரி வேண்டும். அவர்களுக்கு வாடைக்கு வீடு கொடுப்பதற்குகூட பலரும் தயக்கம் காட்டுவதால் அதிலும் சிக்கல் உள்ளது. சில வங்கிகள் எங்களை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் அரவானிகளிடம் ஆர்வம் இல்லை'' என்கிறார் அன்பு அறக்கட்டளை நிறுவனர் தலைவரும், நலவாரிய உறுப்பினருமான அரவானி விஜி. அரசு அதிகாரிகள் அரவானிகளை ஒருங்கிணைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காத நிலையே உள்ளது. சமூகநல அதிகாரிகள் அரவானிகளைத் தொடர்புகொள்ள முயன்றால் அதிலும் பலன் கிடைப்பதில்லை. பலர் அடிக்கடி வெளியூர் செல்வதும், சிலரை தொடர்புகொள்ள முடியாமல் போவதும் அதற்கு காரணம் ஆகும். சிரமப்பட்டு சில அரவானிகளை ஒருங்கிணைத்தாலும் அவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவது என்பது பெரும் பிரச்னையாக உள்ளதாக அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் போன்ற ஒரு சில மாவட்டங்களில் அரவானிகளிடம் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டு அரசின் திட்ட உதவிகளைப் பெற முன்வந்துள்ளனர். இதர மாவட்டங்களில் இந்த சிரமங்கள் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அரவானிகளின் இத்தகைய ஒத்துழைப்பு இன்மையால் நலவாரியத்தின் செயல்பாடுகளில் வேகம் இல்லாத நிலை உள்ளது. இதுவரையில் நலவாரியத்தின் உறுப்பினர்கள் கூட்டம் இரண்டு, மூன்று தடவை நடந்திருந்தாலும் பெரிய அளவில் பணிகள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ""தமிழ்நாட்டில் அரவானிகளின் நிலை முன்பைவிட இப்போது மேம்பட்டுள்ளது. அதிகாரிகளின் மனிதாபிமான அணுகுமுறையும், தொடர் முயற்சிகளுமே இந்த பிரச்னைக்கு தீர்வாக அமையும்'' என்றார் விஜி.

கருத்துக்கள்

அரவானி என்பது சமயம் சார்ந்த அறிவுக்குப் பொருந்தாக் கதையில் குறிக்கப்படும் பெயராகும். பிற சமயத்தவரும் அறிவுடையோரும் இப்பெயரைப் பயன்படுத்தத் தயங்குவர். எனவே, திருநங்கை என்றே குறிப்பிட வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/10/2009 8:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக