வெள்ளி, 9 அக்டோபர், 2009

ஜனாதிபதி நிலத்தில் மண்டியிட்டு முத்தம் கொடுத்ததின் மாயம் என்ன?

08 October, 2009 by admin

கடந்த மே மாதம் 17ம் திகதி காலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த ஜனாதிபதி, விமானத்தில் இருந்து இறங்கியதும் மண்ணைத் தொட்டு முத்தமிட்ட விடையம் யாவரும் அறிந்ததே. யுத்தம் முடிவடைந்ததாகக் குறிப்பிட்டு ஜனாதிபதி மண்ணை முத்தமிட்டிருந்தார். இருப்பினும் மே 18ம் திகதியே யுத்தம் முழுமையாக நிறைவடைந்தது என்பது பலரும் அறிந்த உண்மை. இதனிடையே என்ன நடந்தது?

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் வந்திறங்கிய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி, யுத்தகளத்திலிருந்த பிரிகேடியர் சசிந்திர சில்வாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு போர் களத்தின் பிந்திய கள நிலவரங்களை அறிந்துள்ளார். இச்சந்தர்ப்பத்தில், பிரபாகரன் கொல்லப்பட்டு, யுத்தம் முழுமையாக வெற்றி கொள்ளப்பட்டுள்ளதாக சசிந்திர சில்வா ஜனாதிபதிக்குக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு பூரிப்படைந்த ஜனாதிபதி தம்முடன் இருந்த ஒரு முஸ்லிம் மதத் தலைவரின் ஆலோசனைகளுக்கமைய விமானத்திலிருந்து இறங்கிய மறுகணம், மண்டியிட்டு வணங்கியுள்ளார்.

இதன்பின்னர், விமான நிலையத்திற்குள் வந்தபோதுதான், யுத்தம் முழுமையாக முடிவடையவில்லை என்பதை அறிந்த ஜனாதிபதி, அவசர அவசரமாக சமய நிகழ்வுகளை முடித்துக்கொண்ட பின்னர் இராணுவ உயர் அதிகாரிகளைத் திட்டித்தீர்த்த வண்ணம் விமான நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளார். அத்துடன், இந்த நாட்களில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், சரத் பொன்சேகா நாடு திரும்புவதற்கு முன்னர் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த உத்தரவையடுத்து, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது தாக்குதலை மேலும் உக்கிரப்படுத்தி உள்நுழைய முற்பட்ட விசேட அதிரடிப்படையின் 22 பேர் கொல்லப்பட்டும் 80ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் படையினருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இராணுவத் தளபதி நாடு திரும்பும்வரை அல்லது அவரின் கட்டளைகளுக்கு ஏற்ப போரை முன்னெடுப்பது என்ற நிலைப்பாட்டை படையினர் முன்னெடுத்தனர். இதனை அறிந்த கோத்தபாய , தனது கட்டளைகளுக்கு இராணுவம் மதிப்பளிக்காமல் போனது தொடர்பாகவே, சரத் பொன்சேகாவுடன் முரண்பட்டுக்கொண்டார் எனத் தெரியவந்துள்ளது.

இத் தகவல்களை பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிரகாரி ஒருவர் இணையத்தள செய்தி ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 4598

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக