காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக முக்கியமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் தஞ்சம் புகுந்து தங்கியிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை சட்டத்தின்கீழ் குடியுரிமை வழங்க வேண்டும். குடியுரிமை வழங்குவதோடு அவர்கள் நிரந்தரமாகத் தமிழகத்திலேயே குடியிருக்க வழிவகை செய்து கொடுக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்று இந்தத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல முயற்சியே. பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால் இப்போதாவது அதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டிருப்பதற்குத் தமிழர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி துணை நிற்பார்கள். வெறும் தீர்மானத்தோடு நின்று விடாமல் மத்திய அரசை வலியுறுத்தி இதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு நிறைவேற்ற வேண்டும்.1983-ம் ஆண்டிலிருந்து சொந்த மண்ணில் வாழ முடியாமல் சிங்கள இனவெறியர்களால் விரட்டியடிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் தமிழகத்திலும் உலகின் பிற நாடுகளிலும் அடைக்கலம் புகுந்தனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 75,000 பேர் தமிழக அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் தங்களது சொந்த முயற்சியில் வீடுகளை வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளனர்.அரசு முகாம்களில் தங்கியுள்ள ஈழத்தமிழர்கள் கிட்டத்தட்ட சிறைமுகாம்களில்தான் வாழ்ந்து வருகின்றனர். எவ்வித உரிமையும் இல்லாமல் அரசு அளிக்கும் சொற்ப உதவியின் மூலம் அரைவயிற்றுக் கஞ்சியைக் குடித்து வருகிறார்கள். இவர்களின் அவல நிலை விவரிப்பின் பெருகும்.அதேவேளையில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் செங்கல்பட்டு, பூந்தமல்லி துணைச் சிறைகளில் பலர் ஆண்டுக்கணக்கில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு பெட்ரோல் போன்ற பொருள்களைக் கடத்தினார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டின்பேரில் பலர் இந்த முகாம்களில் பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்து வருகின்றனர். இவர்கள் மட்டுமல்ல, போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரிலும் பலர் எந்த வழக்கும் இல்லாமலும் இங்கு பல ஆண்டுகளாக வாடி வருகிறார்கள்.குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களில், நீதிமன்றங்களினால் விடுவிக்கப்பட்டவர்களும், பிணை விடுதலை பெற்றவர்களும்கூட இந்தச் சிறப்பு முகாம்களில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர். அப்பட்டமான மனித உரிமை மீறல் இங்கு நடக்கிறது.இந்தியாவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், திபெத், மியான்மர் போன்ற பல்வேறு நாட்டு அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களில் பலர் தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் அவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டதில்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் அகதிகளை அடைத்துக் கொடுமைப்படுத்தும் முகாம்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் இந்தக் கொடுமையை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த சிறப்பு முகாம் அகதிகளில் 12 பேரை தமிழக அரசு வேறு வழியின்றி விடுவித்தது. அப்படியானால் அப்பாவிகளான இவர்களை ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைத்து வைத்திருந்த குற்றத்துக்குப் பொறுப்பாளி யார்? இப்போதும் இந்தச் சிறப்பு முகாம்களில் 70-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.1991-ம் ஆண்டில் முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோதுதான் சிறப்பு முகாம்கள் உருவாக்கப்பட்டன. சட்டவிரோதமான இந்த முகாம்களில் பலர் அன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இலங்கையில் நடைபெற்ற போரில் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக தமிழகம் வந்து பல்வேறு மருத்துவமனைகளில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். எடுத்துக்காட்டாக இவர்களில் இட்லர் என்ற ஓர் இளைஞருக்கு இரு கண்களிலும் பார்வை இல்லை. இரு கைகளும் மணிக்கட்டுக்கு கீழே இல்லை. உணவு உண்பதற்குக்கூட மற்றவர்களின் உதவி இல்லாமல் அவர் உண்ண முடியாது. இவரால் இந்திய தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து என்று கூறி கைது செய்து பல ஆண்டுகள் சிறையில் அடைத்த மனித நேயமற்ற செயலை அன்றைய தமிழகக் காவல்துறை செய்தது.அதுமட்டுமல்ல, முகாம்களில் தங்காமல் தங்களது சொந்தப் பொறுப்பில் வாடகைக்கு வீடுகளை எடுத்துக்கொண்டு தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு வீடுகளை வாடகைக்குக் கொடுத்த உரிமையாளர்களும், காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற கடுமையான ஆணையை தமிழக அரசு அன்று பிறப்பித்தது. இதன் விளைவாக ஈழத்தமிழர்கள் சொல்லொண்ணாத துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள். காவல் நிலையங்களில் கையூட்டு கொடுத்த பிறகே அவர்கள் பதிவு செய்யப்பட்டார்கள். பதிந்த பிறகு அவர்கள் வீடுகளை காவல் துறை அடிக்கடி சோதனையிட்டுத் தொல்லை கொடுத்தது. ஈழத்தமிழர்களுக்கு வீடுகளை வாடகைக்குக் கொடுப்பதற்கு யாரும் முன்வரத் தயங்கும் நிலை ஏற்பட்டது.ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துகள் வாங்குவதற்கும் தமிழக அரசு தடைவிதித்தது. தமிழ்நாட்டில் தமிழரல்லாத பலர் வீடு, நிலம் மட்டுமல்ல, பெரும் தொழிற்சாலைகளை வாங்குவதற்கும் தொடங்குவதற்கும் தாராளமாக அனுமதிக்கப்படும்போது நமது சகோதரத் தமிழர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவதற்கு எவ்விதக் காரணமும் இல்லை.ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டிய கடமையும் அதிகாரமும் மத்திய அரசைச் சார்ந்தது. திமுகவும் அந்த அரசில் பங்காளி. மத்திய அரசில் அங்கம் வகிக்கிற அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பிரதமரையும் மற்றவர்களையும் வலியுறுத்தி இதை நிறைவேற்றுகிற கடமையைச் செய்ய வேண்டும்.ஆனால் இவர் தலைமையில் இயங்குகின்ற தமிழக அரசு செய்ய வேண்டிய கீழ்க்கண்டவற்றை மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்க்காமல் இவரே செய்யலாம்.1. சிறப்பு முகாம்களில் உள்ள அனைத்து ஈழத் தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். யார் மீதாவது வழக்கு இருக்குமானால் அந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க அவர் அனுமதிக்கப்பட வேண்டும். கால வரம்பில்லாமல் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறையில் அவர்கள் வாடியதுபோதும்.2. அகதிகள் முகாம்களுக்கு வெளியே வாழும் ஈழத்தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட காவல் நிலையப் பதிவு போன்ற வேண்டாத கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் யாரும் காவல் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆணை எங்கும் இல்லை.3. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களையெல்லாம் வருந்தி வருந்தி அழைத்துப் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கும் தமிழக அரசு அத்தகைய தொழில் தொடங்க முன்வரும் ஈழத்தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க முன்வர வேண்டும்.4. தமிழ்நாட்டில் பிறமாநிலத்தவர்களும் பிற நாட்டவர்களும் வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்குத் தாராளமாக அனுமதிக்கிற தமிழக அரசு ஈழத்தமிழர்களுக்கு அந்த உரிமையை மறுப்பது நியாயமற்றது. அவர்களுக்கு அந்த உரிமையை வழங்க முன்வர வேண்டும்.5. இலங்கையில் கல்வி மறுக்கப்பட்ட நிலையில் ஈழத்தமிழ் குழந்தைகள் தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் தங்குதடையின்றி சேர்ந்து படிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.சொந்த மண்ணில் வாழ முடியாத நிலையில் தாய்த் தமிழகத்தை நம்பி இங்கு தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் 25 ஆண்டுகளாக அனுபவித்த துயரங்கள் போதும். அவர்கள் அகதிகள் அல்லர். நமது சகோதரர்கள்; நமக்குள்ள உரிமைகள் அவர்களுக்கும் உண்டு. எதிர்காலத்தில் எல்லா உரிமைகளையும் பெற்று அவர்கள் நலமுடன் வாழுமாறு அரவணைத்துக் காக்கும் கடமை நமக்கு உண்டு. நொந்து போயிருக்கும் அந்த மக்களின் விழிகளில் பெருகும் நீரைத் துடைத்து அவர்களை வாழவைப்போமாக.
கருத்துக்கள்
காலங் கடத்துவதற்காக ஏதோ தீர்மானம் போட்டால் இவர் என்ன ஏதேதோ எழுதுகிறார்! தமிழர்கள் எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன? ஆட்சியதிகாரம்தானே எங்களுக்கு வேண்டும். இதைப் புரிந்து கொள்ளாமல் கனவிலும் நாங்கள் எண்ணிப் பார்க்க முடியாதவற்றை யெல்லாம் இவர் ஏன் ஏழுதுகிறார்? மனித நேயமோ தமிழ் நேயமோ உள்ளவர்களிடம் கூற வேண்டியவற்றை எங்களிடம் கூறுகிறாரே! கொலைகார இந்தியத்துடன் கை கோக்கும் எங்களைப் புரிந்து கொள்ளாத இவர் என்ன தலைவரோ! - இப்படி ஆட்சியாளர்கள் எண்ணும் வகையில் பழ.நெடு. கட்டுரை எழுதியுள்ளார். செவிடன் காதில் ஊதிய சங்குதான் இது. எனினும் இதைப் புரிந்து கொள்ளாத பிறராவது தெளிவடைய இக்கட்டுரை உதவும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/8/2009 3:53:00 AM
10/8/2009 3:53:00 AM