சென்னை, அக். 3: வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் உரிமையைக் காக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் தமிழர் பகுதியாக உருவாக்கப்படுவதே ஒவ்வொரு தமிழரின் லட்சியமாக இருக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களில் 2 லட்சம் பேர் தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர். மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வாழ்கின்றனர்.
இலங்கையிலுள்ள இவர்களின் சொத்துகள், வீடுகள், விவசாய நிலங்கள், வியாபாரம், தொழிற்கூடங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவை அவர்களுடைய பொறுப்பிலேயே மீண்டும் நடத்தப்பட வேண்டும். இவர்களில் எவ்வளவு பேர் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வராமல் அவர்கள் இருக்கின்ற நாடுகளிலேயே வாழ்கிறார்களோ, அந்த அளவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு மகிழ்ச்சி அதிகமாகும்.
சிங்களவர்களை அந்தப் பகுதிகளில் குடியமர்த்த முயற்சிப்பர்.
இதை கவனத்தில் கொண்டு, இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில், வீட்டிற்கு ஒருவரேனும் இலங்கைக்குச் சென்று தங்களது உரிமையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சிகள் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார் சுதர்சன நாச்சியப்பன்.
தமிழ்ப்பற்றாளர் மகன் என்ற மரபு வழி உணர்வால் கட்சிக்கு அப்பாற்பட்டுத் தமிழுணர்வுடன் கருத்துகளை வெளியிடுகிறார். இவரது முயற்சியாலாவது காங். திருந்தட்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
10/4/2009 5:27:00 AM