Last Updated :
சென்னை, அக். 4: அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறியது. திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பா.ம.க. தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து பா.ம.க. போட்டியிட்டது. அப்போது பா.ம.க.வுக்கு 7 மக்களவைத் தொகுதிகளையும், 2010-ல் காலியாகும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாநிலங்களவை இடத்தையும் அளிப்பது என உடன்படிக்கை ஏற்பட்டது. மக்களவைத் தேர்தலில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளிலும் தோல்வி ஏற்பட்டது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்தலுக்குப் பின் கூட்டணியில் உள்ள பிற கட்சித் தலைவர்கள் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர். ஆனால் பா.ம.க. தலைவர்கள் யாரும் சந்திக்கவில்லை. இதனால் அ.தி.மு.க. - பா.ம.க. இடையே அதிருப்தி நிலவுவதாகப் பேசப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கொடநாடு சென்று ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார். தேர்தலுக்குப் பின் இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையே எந்தச் சந்திப்பும் நடக்கவில்லை எனவும், எனவே மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசியதாகவும் அப்போது மணி தெரிவித்தார். இந்நிலையில் சென்னையில் சனிக்கிழமை (அக். 3) செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை, பா.ம.க. ஆதரிக்கும் என தெரிவித்தார். ஆனால் அடுத்த நாளே அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக பா.ம.க. அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பா.ம.க. அலுவலகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கை: "தேர்தலின்போது ஏற்பட்ட ஒரு மோதல் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, மருமகன் பரசுராமன், தம்பி சீனிவாசன் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 22 பேர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டு, கொலை வழக்கில் சேர்க்கப்பட்டனர். காவல்துறை புலன் விசாரணைக்குப் பின் ராமதாஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இப்பிரச்னை தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, பா.ம.க. தலைவர் கோ.க. மணி, முன்னாள் எம்.பி. கோ. தன்ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினார்கள். ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வேண்டுமென்றே இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று விளக்கினார்கள். எனினும் அதற்குப் பிறகு, இந்த வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் பா.ம.க. நிர்வாகக் குழுக் கூட்டம் திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில், ""இது சாதாரண விஷயம் அல்ல; இத்தகைய நிலைமைக்குப் பிறகும் அ.தி.மு.க.வுடன் தோழமை உறவு என்று சொல்வதற்கு எதுவும் இல்லை; எனவே அ.தி.மு.க.வுடன் இனி உறவு தேவையில்லை; இனியும் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கக் கூடாது'' என ஒருமித்த குரலில் வலியுறுத்தினார்கள். எனவே, "அ.தி.மு.க.வுடன் உள்ள கூட்டணி, தோழமை உறவை பா.ம.க. முறித்துக் கொள்கிறது' என நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் அ.தி.மு.க. - பா.ம.க. இடையே ஏற்பட்ட கூட்டணி, அக்டோபரில் முறிந்துவிட்டது. பா.ம.க.வின் கூட்டணிகள் 1991 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி. 1996 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி. 1998 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணியில் சேர்ந்து 4 தொகுதிகளில் வெற்றி. 1999 மக்களவைத் தேர்தலில் தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் அடங்கிய கூட்டணியில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி. 2001 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பா.ம.க., 20 தொகுதிகளில் வெற்றி. 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. கூட்டணிக்கு திரும்பிய பா.ம.க., 6 தொகுதிகளில் வெற்றி. 2006 சட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் நீடித்த பா.ம.க., 18 தொகுதிகளில் வெற்றி. 2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து 7 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி. இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை (அக். 4) அறிவித்துள்ளது.
By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2009 2:54:00 AM
By INdian
10/5/2009 2:46:00 AM
By abu salik
10/5/2009 2:24:00 AM
By ananth
10/5/2009 1:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*