வியாழன், 8 அக்டோபர், 2009

முல்லை பெரியாறு: கருணாநிதி முடிவு: ஜெயலலிதா மகிழ்ச்சி



சென்னை, அக். 7: முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடரும் என முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, முல்லை பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு இதுபோன்ற அனுமதியை கொடுத்திருக்காது என நம்புவதாக கூறினார். உடனே நான் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன். கேரள அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்தி வைக்க மத்திய அமைச்சர் ராசாவிடம், ஜெய்ராம் ரமேஷ் உத்தரவாதம் அளித்ததாக ஒரு பொய்யான செய்தி பரப்பப்பட்டது. இந்த செய்தியை மறுத்த ஜெய்ராம் ரமேஷ், கேரள அரசுக்கு அனுமதி அளித்ததை மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார். இதையடுத்து இந்தப் பிரச்னை குறித்து நான் 1.10.2009 அன்று விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய மத்திய அரசு, அதற்கு முற்றிலும் எதிரான வகையில் கேரள அரசுக்கு எப்படி அனுமதி கொடுத்தது? இதற்கு உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டாமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தேன். அதற்கு மறுநாள் தமிழக அரசின் சார்பில் வெளியான அறிவிப்பில், ""மத்திய அரசிடமிருந்து எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலும் இல்லாத நிலையில், சிலர் கூறுவதைப் போல உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற எந்த விதத்திலும் இயலாது. கேரள அரசுக்கு ஆதரவாக அதிகாரபூர்வமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று யாராவது எடுத்துக்காட்டினால், தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டதாக ஜெய்ராம் ரமேஷ் பகிரங்கமாக இரண்டு முறை அறிவித்தார். இது குறித்து தனக்கு ஜெய்ராம் ரமேஷ் தொலைபேசியில் தெரிவித்ததாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் பகிரங்கமாக தெரிவித்தார். இதைவிட கருணாநிதிக்கு என்ன ஆதாரம் தேவை என்று புரியவில்லை. 16.9.2009 அன்று நடைபெற்ற வன உயிரினங்களுக்கான தேசிய வாரியத்தின் நிலைக்குழுக் கூட்டத்தில், ஆய்வுப் பணிக்கு அனுமதி வழங்கும் முடிவு எடுக்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. அந்தக் கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகளைப் பார்த்து கருணாநிதியால் தெரிந்து கொள்ள முடியாதா? தமிழகத்துக்கு சாதகமாக பல அம்சங்கள் இருந்தும், ஆதாரம் இருந்தால்தான் நடவடிக்கை எடுக்க இயலும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு எனக்கு மிகவும் வேதனை அளித்தது. இப்பிரச்னையில் தமிழக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கடந்த 5.10.2009 அன்று தேனி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் விளைவாகவும், கருணாநிதியின் தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நான் சுட்டிக் காட்டியதாலும், மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர இருப்பதாக கருணாநிதி அறிவித்திருக்கிறார். காலம் தாழ்த்தியாவது என்னுடைய கூற்றிற்கு மதிப்பளித்து "கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு வழக்குத் தொடரும்' என்று கருணாநிதி அறிவித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழக அரசின் நடவடிக்கை, தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில், உறுதியான செயல் வடிவம் கொண்ட, ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டும். இதில் முதல்வர் கருணாநிதி கவனம் செலுத்த வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்கள்

மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்வதாகக் கருதிக் கொண்டு தமிழக உரிமைகளைக் காவு கொடுக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கக் கூடாது. அதற்கு முதற்படியாக இவ்வழக்கு அமையட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/8/2009 3:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக