வியாழன், 8 அக்டோபர், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 129:
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாடு!



நடந்து முடிந்த தேர்தல் குறித்து, விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ""இத் தேர்தல் பற்றி இலங்கையின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவருமான கே.டபிள்யு. தேவநாயகம் விடுத்திருந்த அறிக்கையில், * கிழக்கு மாகாணத்தில் கொலை, பயமுறுத்தல் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் மேலோங்கி இருந்தபடியால் தேர்தல் பிரசாரத்தில் எம்மால் ஈடுபட முடியவில்லை. இத்தகையதொரு சந்தர்ப்பத்தில் நடந்து முடிந்துள்ள மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை வைத்து ஜனநாயகம் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது கவலை தரக்கூடியதாக இருக்கிறது. * கிழக்கின் இன்றைய சூழ்நிலை குறித்து அரசு மேலிடத்தின் கவனத்திற்கு விரிவாக எடுத்துரைப்போம். வேட்பு மனு பெறப்பட்ட முறை பற்றியும், அரசாங்க அதிபர் (மாவட்ட கலெக்டர்) அம் மனுக்களைப் பெறக்கூடிய நிலையில் இல்லை என்பது பற்றியும் மேலிடத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. * ஆனால், இத்தனைக்கும் மத்தியில் தேர்தல் நடத்தப்பட்டது. இத் தேர்தல் முடிவுகளை வைத்தும் கிழக்கின் அரசியல் மற்றும் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்து கொள்ளாமலும் மக்கள் ஜனநாயகத்தை விரும்புகின்றனர் என்று கருத்து வெளியிடுவது பொருத்தமானது அல்ல'' என்று கூறியிருக்கிறார். அதேநேரம், கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் போட்டியிட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப். போன்றே 17 இடங்களைக் கைப்பற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஜனாப் எம்.எச்.எம். அஷ்ரப் தேர்தல் பற்றி விடுத்த அறிக்கையில் ""முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை இந்திய-இலங்கை ஒப்பந்தம் உள்ளடக்கவில்லை என்பதை நிரூபிக்க வேண்டுமானால் கிழக்கு மாகாணத்திலிருந்து ஐக்கிய தேசியக்கட்சியை (ஜெயவர்த்தனா கட்சி) தோற்கடிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள மற்றுமொரு அறிக்கையில், ""கிழக்கில் குறிப்பிட்ட அமைப்பொன்று தனித்துவமாகப் போட்டியின்றித் தெரிவாகும் நிலையைத் தவிர்க்கவே நாம் தேர்தலில் பங்கு கொள்வதென்று தீர்மானித்தோம். இதன் மூலம் புலிகளின் குரலும் ஒலிக்கும். அதேநேரம், முஸ்லிம்களின் உரிமைகளும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்'' என்றும் கூறப்பட்டுள்ளது. (18.10.88 வீரகேசரி). அதுமட்டுமல்ல, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களின் அபிலாஷைகளைச் சேர்த்துக் கொள்ளாமல் அவர்களைக் காட்டிக் கொடுத்து நிரந்தர அடிமைகளாக்கிய அரசின் திட்டங்களை முறியடிக்கக் கூடிய எமக்குள்ள ஒரே வழி தேர்தலில் போட்டியிடுவதாகும். இந்த நிலைமைகளிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தைக் காப்பாற்றவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்தியாவின் சொல்லுக்கு தலையாட்டக் கூடிய ஓர் ஆட்சியில் முஸ்லிம்களின் குரல் ஒலித்திருக்க முடியாது. தமிழர் சமூகத்தின் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் விடுதலைப் புலிகளின் நியாயங்களும் கொச்சைப் படுத்தப்பட்டிருக்கும். நாம் போட்டியிடாவிட்டால் வடக்கு கிழக்கு மாகாண சபை ஓரங்க நாடகமாகியிருக்கும்'' என்றும் இன்னொரு அறிக்கையை வெளியிட்டதன் மூலமாகத் தனது நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்திருக்கிறது. (25.10.88 உதயன் நாளிதழ்). மேற்கண்ட அறிக்கைகளிலிருந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அது கடுமையாக எதிர்க்கிறது என்றும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் முஸ்லிம்களை அடிமையாக்கும் இந்தத் திட்டங்களை முறியடிக்கவே வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட்டது என்பதும் தெளிவாகிறது. எனவே, கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப்.க்கு நிகராக 17 இடங்களைக் கைப்பற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸýக்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரானவை என்பதும், புலிகளின் நடவடிக்கைகளை மதிப்பவை, வரவேற்பவை என்பதும் தெளிவாகின்றது'' என விடுதலைப் புலிகள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில், வடக்கு மாகாணத்தில் புலிகளின் வேண்டுகோளை ஏற்று எவரும் தேர்தலில் போட்டியிட முன் வரவில்லை. அங்கு தேர்தலை நடத்தவும் இந்திய அரசுக்கு துணிவு இருக்கவில்லை. எனவேதான், வடக்கு மாகாணத்தில் தாங்கள் தயார் செய்து வைத்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரைத் தவிர வேறு யாரையும் தேர்தலுக்கு நியமனப் பத்திரம் தாக்கல் செய்யாதவாறு இந்திய அமைதிப் படை பார்த்துக்கொண்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினரிடம் மட்டும் நியமனப் பத்திரங்களை ஏற்றுக் கொண்டு தேர்தல் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்ய குறிப்பிட்ட கால எல்லை வரை நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்யும் தேர்தல் அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் உத்தியோகபூர்வமற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேர்தல் அலுவலகத்துக்கு அருகே எவரையும் செல்லவும் இந்தியப் படை அனுமதிக்கவில்லை. தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினர், ஒட்டுமொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 44 வேட்பாளர்களை நிறுத்தினர். அங்கு 34 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கையில், அவர்களுக்கு 4.5 சதவீத இடத்தைதான் ஒதுக்கினர். அதாவது, 24 சதவீத மக்களைக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வேட்பாளர்களை நிறுத்திய ஈபிஆர்எல்எஃப் அமைப்பு ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளரையே நிறுத்தினர். 29 சதவீத மக்களைக் கொண்ட முஸ்லிம்களுக்குத் திருகோணமலையில் 13 வேட்பாளர்கள் ஈபிஆர்எல்எஃப் சார்பில் நிறுத்தப்பட்டனர். அங்கு முஸ்லிம் வேட்பாளரே நிறுத்தப்படவில்லை. அதேசமயம் 42 சதவீதமுள்ள முஸ்லிம்கள் உள்ள அம்பாறையில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினர் தேர்தலுக்கு முன்னர் வெளியிட்ட பிரசுரமொன்றில் ""வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியை ஆதரிப்பதன் மூலம் விகிதாசார முறையிலான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்'' என்று கூறியிருக்கின்றனர். இவர்களது வேண்டுகோளை ஏற்று முஸ்லிம் மக்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.இனருக்கே வாக்களித்திருந்தால் இரண்டே இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகள்தான் மாகாண சபைப் பிரதிநிதிகளாகி இருப்பர். ஆனால் தற்போது அவர்களுக்குக் கிடைத்துள்ள 17 இடங்கள் கிடைத்திருக்காது. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றம் தடுக்கப்படவேண்டும் என்பது தமிழர்களின் உயிர்மூச்சான கொள்கையாகும். அதற்கு மாறாக 1976-ல் கிழக்கு மாகாணத்தில் சிங்களர்களுக்கென (குடியேற்றவாசிகளுக்கு) ஒரு தொகுதியை உருவாக்கத் தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை வைத்தது. இன்று, தேர்தல் வெற்றி வாய்ப்பையும், பதவியையும் பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழுவினர் சிங்கள வேட்பாளர்களை தமது கட்சியில் வேட்பாளராக நிறுத்தியதுடன் சிங்களவர்க்கு, தமிழ்ப் பகுதியில் அமைச்சர் பதவியையும் கொடுத்து மக்களிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது'' என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடவேண்டிய முக்கியமான முரண்பாடு என்னவென்றால், வடக்கு-கிழக்குப் பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு முன்பாக, இலங்கையின் இதரப் பகுதிகளில் 1988 ஏப்ரலில் தொடங்கி ஜூன் 28-க்குள் முடிவு பெற்றது என்பதாகும். ஒரு கட்டாயத்தின் பேரிலேயே வடக்கு-கிழக்கு மாகாணத் தேர்தல் என்பது நடைபெற்றது என்பதை அறிவது இங்கு அவசியமாகும். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்குபெறும் என்றே இந்திய அமைதிப்படை எதிர்பார்த்தது. ஆனால் அவ்விருப்பம் வெற்றிபெறாத போதிலும், அமைதிப்படையினரின் வற்புறுத்தலின் பேரில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் விடுத்த அறிக்கையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகத் தமிழ் பேசுகிற மக்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளைத் திடப்படுத்துவதற்கு இன்றியமையாத ஒரு வழியாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஜனநாயகச் செயல்முறையைத் தூண்டுவற்கான முயற்சிகளுக்குத் தமது ஆதரவை அளிக்கும்படி மக்களை வேண்டியது. (ஆதாரம்: இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும் -கலாநிதி ஆ.சு.மனோகரன், தமிழ் டைம்ஸ் 15 நவம்பர் 1988- மேற்கோள் காட்டி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக